Tuesday, August 30, 2016

சென்னை பிரஸ் கிளப்புக்கு தேர்தல் அதிகாரியாக நீதிபதி சந்துரு நியமனம்!






சென்னை: சென்னை பிரஸ் கிளப்பிற்கு 1998ல் தேர்தல் நடந்தது. தேர்தல் அதிகாரி தேர்தலை ஒத்திவைத்தார். உறுப்பினர் பெயர் பட்டியலில் குறைபாடுகள் இருந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு ஒத்திவைக்கப்பட்ட தேர்தலை பிரஸ்கிளப் தலைவராக இருந்தவரே விதிமுறைகளுக்கு முரணாக நடத்தினார். அதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டது.   இதையடுத்து, நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 2001ல் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். மீண்டும் 2003ல் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேர்தல் நடைபெறவில்லை. இதையடுத்து, 2005ல் தேர்தல் நடத்தப்படும், உறுப்பினர் பட்டியல் சரிபார்க்கப்படுகிறது என பிரஸ்கிளப் அறிவித்தது. அதன் பிறகு பல உறுப்பினர்கள் வலியுறுத்தியும் தேர்தல் நடக்கவில்லை.

இதையடுத்து, தேர்தலை நடத்தக் கோரி 2008ல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிட்டி சிவில் நீதிமன்றம் தேர்தலை நடத்த 2011ல் உத்தரவிட்டது. அப்போது, தங்களை நிர்வாகிகள் எனக் கூறிக்கொண்ட சிலர் இந்த வழக்கிற்கு உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றனர். இந்நிலையில், 3 உறுப்பினர்கள் உயர் நீதிமன்றத்தில் தனி வழக்கு தொடர்ந்தனர்.   இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் பி.வில்சன், சிராஜுதீன் ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: பிரஸ் கிளப்பிற்கு தேர்தலை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு நியமிக்கப்படுகிறார். நியாயமான தேர்தலை நடத்தும் வகையில் அவருக்கு உறுப்பினர்கள் உரிய ஒத்துழைப்பு தரவேண்டும். தேர்தல் அதிகாரி தேர்தலை 3 மாதங்களுக்குள் நடத்த வேண்டும். 

 கடந்த 2011 மார்ச் 7ம் தேதிக்குப் பிறகு உறுப்பினர் படிவம் கொடுத்தவர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து அவற்றை தேர்தல் அதிகாரி ஒப்புதல் அளித்து இறுதிப் பட்டியலை வெளியிட வேண்டும். 2011 மார்ச் 7ம் தேதிக்குப் பிறகு விண்ணப்பம் கொடுக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து தேர்தல் அதிகாரி முடிவு செய்வார்.   தேர்தல் அதிகாரி ஒப்புதல் அளித்த விண்ணப்பங்களுக்கு உரியவர்களே கிளப்பின் உறுப்பினர்களாக முடியும். 2011 மார்ச் 7 முதல் 2016 ஆகஸ்ட் 19 வரை வந்துள்ள விண்ணப்பங்களை சரிபார்த்து தகுதியுள்ளவர்களை மட்டும் சேர்த்து இறுதிப் பட்டியலை தேர்தல் அதிகாரி வெளியிடுவார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

நன்றி :- தினகரன்

0 comments:

Post a Comment

Kindly post a comment.