Tuesday, October 9, 2012

விண்ணின் மழைத்துளி - மண்ணின் உயிர்த்துளி - சு.இராமையா


தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மழைப்பொழிவு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன் மக்களின் அன்றாடத் தேவையான குடிநீருக்கும் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.

சராசரியாக நிலத்தில் பெய்யும் மழையில், 40 சதவீதம் நிலத்தின் மேல் ஓடி கடலில் கலப்பதாகவும், 35 சதவீதம் வெப்பத்தால் ஆவியாகிவிடுவதாகவும், 15 சதவீதம் மட்டுமே பூமியால் உறிஞ்சப்படுவதாகவும், 10 சதவீதம் மண்ணின் ஈரப் பதத்திற்கு உதவுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

மணற்பாங்கான அல்லது படிவப் பாறைகள் உள்ள பகுதிகளில் மழைநீரில் 12 முதல் 15 விழுக்காடும், பாறைப் பாங்கான பகுதிகளில் 4 முதல் 6 விழுக்காடும், நிலத்தினுள் இறங்குகிறது. நிலத்திற்குள் இறங்கும் நீரின் ஒரு பகுதியால் தாவரங்கள் பயனடைகின்றன.

மீதியுள்ள பகுதி வேர்மட்டத்துக்கு கீழேயுள்ள நுண்துளைகள் வழியாக இறங்கி, பின்னர் ஊடுருவ இயலாத கடினப்பாறை வரை சென்று தேங்குகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு 30 முதல் 40 மீட்டர் ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் இன்று 100 மீட்டர் முதல் 200 மீட்டருக்குக் கீழே உள்ளது.

ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை மழையாலும், ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் தென்மேற்குப் பருவ மழையாலும், அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவ மழையாலும் ஓராண்டுக்கு ஏறத்தாழ 45 நாள்களில் பெய்யும் சராசரி மழை 65 சென்டி மீட்டர் மட்டும்தான்.

இந்த மழை நீர் நிலப்பரப்பின் மீது வழிந்தோடும்போது, அதைத் தேக்கி நிறுத்தும் நீர்நிலைகளும் குறைவு. கசிவுநீர்க் குட்டைகள், மிகுதியான மழையால் பெருக்கெடுத்து வழியும் நீரைத் தடுத்து நிறுத்தித் தேக்கி, நிலத்தடி நீரைப் பெருக வைப்பவை. பாசனக் குட்டைகளில் தேங்கும் நீர் நீண்ட நாள்கள் நிலைத்து வாய்க்கால்கள் மூலம் ஆயக்கட்டுப் பாசனத்துக்கு பயன்படுத்தப்படும்.

கசிவுநீர்க் குட்டைகளில் நிரம்பிய நீர், நிலத்தடி நீராகப் படிப்படியாக இறங்கும். இதனால் மண் - பாறைகளின் அமைப்பைப் பொருத்தும் நிலத்தடி நீர்மட்டத்தைப் பொருத்தும் கிணறுகளில் நீர் பெருகும். நிலத்தடி நீரைப் பெருக்கக் குளங்கள், குட்டைகள், ஏரிகள் இன்றியமையாதவை. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள், நீர்வரத்துக் கால்வாய்கள் பல ஆண்டுகளாக தூர் எடுக்கப்படாத நிலையில் உள்ளன.

குளங்களில் உள்ள மடைகள் பழுதால் மழைக் காலங்களில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் தொடர்ந்து வெளியேறி ஓரிரு மாதத்திற்குள்ளேயே குளம் வறண்டு விடுகிறது.

பெரும்பாலான குளங்களின் நீர்வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி குடியிருப்புகள் பெருகியுள்ளன.

அடுக்கு மாடிக் கட்டடங்கள் மற்றும் வீடுகளைச் சுற்றியுள்ள தெருக்களில் திறந்த வெளிகளை சிமென்ட் தளங்கள், தார்ச்சாலைகள் அமைத்தும் மூடி விடுவதால், இங்கு பெய்யும் மழைநீர் முழுவதும் பயனில்லாமல் சாலைக்கு ஓடி, கால்வாய்கள் மூலமாக சாக்கடையுடன் கலக்கிறது.

இதைத் தவிர்த்து நிலத்தடி நீரைப் பாதுகாக்க கட்டடங்களைச் சுற்றி ஆங்காங்கு 3 அடி ஆழமும், 12 அங்குல விட்டமும் கொண்ட குழிகள் அமைத்து அவற்றை கூழாங்கல், மணல் முதலியவற்றால் நிரப்பி துளைகள் இடப்பட்ட "சிலாப்'களைக் கொண்டு மூடி விடலாம்.

மழைப் பொழிவு குறைவாக உள்ள சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை நீரை நம்பியே வேளாண்மை உள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன்பே காரைக்குடி, கானாடுகாத்தான், தேவகோட்டை மற்றும் செட்டிநாட்டு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தங்களின் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளைக் கட்டி வைத்துள்ளனர்.
 

நிலத்தடி நீர் மட்டம் உயர மழைநீர் சேகரிப்புத் திட்டம் பயனுள்ளதாக இருக்கிறது. நிலத்தடித் தொட்டி, கிணறு, தெப்பக்குளம், குட்டைகளில் சேமிக்கப்படும் மழைநீர் நிலத்தடிக்கு உறிஞ்சிக் கொள்ளப்படுகிறது.
 மழைநீர் சேகரிப்புத் திட்டம் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், மழை வெள்ளத்தை மட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.

ஒரு கிணற்றுக்கும், மற்றொரு கிணற்றுக்கும் அமைப்பைப் பொருத்து 100 மீட்டர் முதல் 150 மீட்டர் இடைவெளி இருத்தல் வேண்டும். உறிஞ்சி எடுக்கப்படும் நீரின் அளவும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஆறுகள், ஓடைகள் உற்பத்தியாகும் மலைகளிலும் மலைச்சாரல்களிலும் உள்ள காடுகளை அழிப்பதைத் தடுத்து, காடுகள் பேணப்பட வேண்டும்.

கிராமங்களைச் சுற்றியுள்ள புறம்போக்கு நிலங்களில் மரங்கள் நடப்பட்டுக் காடுகள் வளர்க்கப்பட வேண்டும். குளங்கள், ஏரிகள் ஆகியவற்றில் தூர் எடுத்து, அவற்றைப் புதுப்பிக்க வேண்டும். பயன்படாத கிணறுகளில், மழைப் பெருக்கால் வழிந்தோடும் நீரைச் செலுத்தி நீர்மட்டத்தை உயர்த்தலாம். கட்டடங்களின் மேற்கூரைகளில் இருந்தும், சாலைகளிலும் வழிந்தோடும் மழைநீர் சாக்கடையில் கலக்காமல் நிலத்தடி நீரகத்தில் சேருமாறு திட்டமிடல் வேண்டும்.

மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அனைத்து வீடுகள், அனைத்து கட்டடங்களில் அமைக்க அரசு ஊக்குவிக்க வேண்டும். 

விண்ணின் மழைத்துளி - மண்ணின் உயிர்த்துளி, இன்றைய மழைநீர் - நாளைய குடிநீர், மழைநீர் காப்போம் என்ற முழக்கங்கள் யாவும் வெற்று முழக்கங்கள் ஆகிவிடக் கூடாது.                


”மழை நீரைச் சேகரிப்போம்” Oct 9, 2012 5:13 AM நன்றி :- தினமணி.







0 comments:

Post a Comment

Kindly post a comment.