Tuesday, October 9, 2012

”லாஃப்டி” கணினியை அறிமுகப்படுத்துகின்றது, பி.எஸ்.என்.எல். நிறுவனம் !

பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு நிறுவனம் (தமிழ்நாடு வட்டம்) "லாஃப்டி - டேப்' எனும் புதிய வகை கையடக்க கணினிகளை (டேப்லெட்) அறிமுகப்படுத்தியுள்ளது.          

கோவா மாநிலத்தைச் சேர்ந்த "டெரகாம்' என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள "லாஃப்டி - டேப்' கையடக்கக் கணினியின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.            

இந்நிகழ்ச்சியில் "டெரகாம்' நிறுவனத்தின் தலைவர் புனித் ஜெயின் கூறுகையில் "கிராமப்புறங்கள் மற்றும் புறநகர்ப் பகுதியில் உள்ளவர்களுக்கும் கையடக்கக் கணினி கிடைக்க வேண்டும் என்பதற்காகப் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் இணைந்து குறைந்த விலையில் அனைத்து வசதிகளும் கொண்ட டேப்லெட்டுகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.

 3 வகையான மாடல்களில் "லாஃப்டி' டேப்லெட்கள் உள்ளன. ரூ. 3,999, ரூ. 6,499 மற்றும் ரூ. 10,999 ஆகிய விலைகளில் இவை கிடைக்கும்.                     

3-ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த டேப்லெட்களில் டி.இஸட்.-100 மாடலில் மட்டும் சிம் கார்டுகளை பயன்படுத்தித் தொலைபேசி அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதிகள் உள்ளன.

கேமரா, வை-ஃபை, ப்ளுடூத், 4-ஜி.பி. மெமரி உள்பட பல வசதிகளைக் கொண்டது இந்த டேப்லெட்கள்.                                                 

மூன்று வகையான டேப்லெட்களும் ஒரு வருட வாரண்டியுடன் பி.எஸ்.என்.எல். முகவர்கள் மற்றும் அதன் அதிகாரபூர்வ விற்பனை மையங்களில் கிடைக்கும். ஆன்-லைன் மூலமாகவும் இதனை வாங்கலாம்.

பி.எஸ்.என்.எல். தொலை தொடர்பு நிறுவனத்தின் பல்வேறு வகையான இணையதளப் பயன்பாட்டு சேவைகள் மூலம் மிகக் குறைந்த விலையில் வலைதளங்களை உபயோகிக்க முடியும்.       

"டெரகாம்' நிறுவனத்துக்கு கோவா மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் உள்ள ஆலைகளில் இவை தயாரிக்கப்படுகின்றன. "டெரகாம்' நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ. 800 கோடியாகும். நாடு முழுவதும் இதற்காக 120 பழுது நீக்கும் சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 15 சேவை மையங்கள் "டெரகாம்' நிறுவனத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ளன. சேவை மையங்களை விரைவில் 500ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.           

அறிமுக நிகழ்ச்சியில் பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு நிறுவனத்தின் தலைமை பொதுமேலாளர் (சென்னை) ஏ.பாலசுப்ரமணியன், தலைமை பொதுமேலாளர் (தமிழ்நாடு) முகமது அஷ்ரஃப் கான், வர்த்தகப் பிரிவு பொதுமேலாளர் (தமிழ்நாடு) மெய்கண்ட மாணிக்கம், வர்த்தகப் பிரிவு பொதுமேலாளர் (சென்னை) பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

நன்றி :- தினமணி, சென்னை, செவ்வாய்க்கிழமை, 9, அக்டோபர், 2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.