Tuesday, August 30, 2016

துப்பாக்கிச் சூடு பீதி: அமெரிக்க விமான நிலையம் தாற்காலிக மூடல் !




அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகர விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு சப்தம் கேட்டதால் எழுந்த பதற்றத்தையடுத்து அந்த விமான நிலையம் தாற்காலிகமாக மூடப்பட்டது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கலிஃபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலுள்ள சர்வதேச விமான நிலையம், ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

அப்போது அந்தப் பகுதியில் துப்பாக்கியால் சுடுவதைப் போன்ற சப்தம் கேட்டதைத் தொடர்ந்து, விமான நிலையத்திலிருந்தவர்கள் அலறியடித்தபடி ஓடினர்.

இதையடுத்து அந்த விமான நிலையத்தின் மையப் பகுதியில், பயணிகள் வந்து போகும் பகுதி மூடப்பட்டது.

மேலும், அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்த போலீஸார், துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், மக்களை பீதிக்குள்ளாக்கிய அந்த இரைச்சல் துப்பாக்கிச் சப்தமல்ல என்பது உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அந்த விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. சப்தத்தை எழுப்பியவர் என்ற சந்தேகத்தின் பேரில், "úஸாரோ' முகமூடி வீரனைப் போல உடையணிந்திருந்த ஒருவரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து விமான நிலையக் காவல்துறை வெளியிட்டுள்ள சுட்டுரை (டுவிட்டர்) பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையத்தில் எவரும் துப்பாக்கியால் சுடவில்லை. யாருக்கும் காயமும் ஏற்படவில்லை. எனினும் இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி :- தினமணி


0 comments:

Post a Comment

Kindly post a comment.