Tuesday, August 30, 2016

இசைக் கலைஞர் திருவுடையான் சாலை விபத்தில் மரணம் !





திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்த தமிழிசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகருமான ப.திருவுடையான் சாலை விபத்தில் இறந்தார்.

சங்கரன்கோவில் கோமதியாபுரம் 5ஆம் தெருவைச் சேர்ந்த பழனி மகன் ப.திருவுடையான்  (51). தமிழிசைப் பாடகரான இவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலராகவும் இருந்தார். இவர் சேலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் சங்கரன்கோவில் திரும்பிக் கொண்டிருந்தார்.

மதுரை வாடிப்பட்டி புறவழிச்சாலை அருகே வந்தபோது சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதியது. இதில், திருவுடையான் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

அவரது இறுதிச் சடங்கு திங்கள்கிழமை சங்கரன்கோவிலில் நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தமிழிசைப் பாடகர்: திருவுடையான் தமிழகம் முழுவதும் கலை இலக்கிய மேடைகளில் தமிழிசை பாடிவந்தார். தவிர தனியார் நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளிலும் பாடிவந்தார். மேலும், வெளிநாடுகளிலும் தமிழ்ச் சங்கம் நடத்திய நிகழ்ச்சிகளில் பாடி தமிழிசைக்கு சிறப்பு சேர்த்தவர்.

திரைப்படத்தில் முதன்முதலாக, கமல்ஹாசன் நடித்து இளையராஜா இசை அமைத்த விருமாண்டி படத்தில் "கருமாத்தூர் காட்டுக்குள்ளே ஒரு காலத்தில்' என்ற பாடலை பாடினார். இதைத் தொடர்ந்து, பார்த்திபனின் இவன், மதயானைக் கூட்டம், வெளிவரவுள்ள களவாடியபொழுதுகள், மயில் உள்ளிட்ட படங்களில் இவர் பாடியுள்ளார். கவிஞர் கனிமொழி எழுதியுள்ள இசை ஆல்பம் ஒன்றிலும் பாடியுள்ளார்.

பாடலரசன், மக்களிசைப் பாடகர், நகரின் சாதனையாளர் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ள திருவுடையான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினராக இருந்து கட்சிப் பணியும் ஆற்றினார். இறந்த ப.திருவுடையானுக்கு சங்கரஆவுடையம்மாள் என்ற மனைவியும், அன்பரசி, அறிவரசி என்ற இரு மகள்களும், பழனிபாரதி என்ற மகனும் உள்ளனர்.

மார்க்சிஸ்ட் இரங்கல்: திருவுடையான் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்து வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் பல்வேறு மேடைகளில் தனது அற்புதமான குரல் வளத்தால் செங்கீதங்களைப் பாடி மக்களைக் கவர்ந்தவர் திருவுடையான். அவருடைய மறைவுச் செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்திருக்கிறது.

அவரது மறைவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது என்ற அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.