Tuesday, August 30, 2016

தவறாக வழிகாட்டும் விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு சிறை: புதிய மசோதா !



தவறாக வழிகாட்டும் விளம்பரங்களில் நடிக்கும் திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பிரபலங்களுக்கு 5 ஆண்டு வரை சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்க வழி செய்யும் புதிய சட்ட மசோதா குறித்து மத்திய அமைச்சரவைக் குழு செவ்வாய்க்கிழமை விவாதிக்க இருக்கிறது.

30 ஆண்டுகள் பழமையான நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மாற்றும் வகையில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2015 என்ற மசோதாவை மத்திய அரசு மக்களவையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்தது. இந்நிலையில் இது தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு தனது பரிந்துரைகளை கடந்த ஏப்ரல் மாதம் அளித்தது.

இதனை ஆய்வு செய்த நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம், கலப்படத்துக்கான தண்டனைகளை கடுமையாக்குவது, தவறாக வழிகாட்டும் விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு தண்டனை விதிப்பது உள்ளிட்ட சில முக்கியப் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டது.

இதையடுத்து, இதனை சட்ட மசோதாவில் சேர்க்கும் நோக்கில் அமைச்சரவைக் குழுவின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இதில் இந்தப் பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இதில், பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்றே தெரிகிறது.

அதன்படி, தவறாக வழிகாட்டும் விளம்பரங்களில் தோன்றினால் முதல்முறை ரூ.10 லட்சம் அபராதம், 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், இரண்டாவது முறையாக அதே தவறைச் செய்தால் ரூ.50 லட்சம் வரை அபராதமும், 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்க முடியும்.

நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.