Tuesday, August 30, 2016

மக்கள் பாடகன்



சமுதாய அக்கறை மிக்க பாடல்களுக்குத் தனது குரல் மூலம் தனி வடிவம் தந்தவர்

சமூகத்தின் மீதான அக்கறை, தமிழ் மீதான காதல், ஒடுக்கப்பட்டோருக்காக எழுந்த கலகக் குரல் என்று பல்வேறு தளங்களில் தொடர்ந்து இயங்கிவந்த பாடகர் திருவுடையான், சாலை விபத்தில் மறைந்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நெல்லை மாவட்டச் செயலாளராகச் செயல்பட்டுவந்த திருவுடையான், கலை இரவு மேடைகளில் தனது அற்புதமான பாடல்களால் பலரது மனங்களை நனைத்தவர். தபேலாவை வாசித்துக்கொண்டே கணீர்க் குரலில் அவர் பாடுவதைக் கேட்டவர்களால் அந்தக் குரலை ஒரு நாளும் மறக்க முடியாது. எளிய பின்னணியிலிருந்து வந்த திருவுடையான், திரையுலகத் தொடர்பு, அரசியல் செயல்பாடுகள் என்று வெவ்வேறு திசைகளில் பயணம் செய்திருந்தாலும் அந்த எளிமையை இறுதிவரை கடைப்பிடித்தவர்.

இசையை நெய்தவர்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் நெசவுத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவர் திருவுடையான். இளம் வயதிலிருந்தே இசை மீது ஆர்வம். கைத்தறி சேலைக்கு பார்டர் போடும் பேட் மேஸ்திரியாக இருந்த அவரது தந்தை பழனிச்சாமி, தனது மகனின் இசையார்வத்தை ஊக்குவித்தார். உள்ளூர் கோயில்களில் அந்தச் சிறுவனின் குரல் ஒலிக்கத் தொடங்கியது. எல்லாமே பக்திப் பாடல்கள்தான். ஓவியத்திலும் நல்ல ஆர்வம் இருந்தது. வறுமை காரணமாக எட்டாம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்திவிட்டு, அப்பாவுடன் நெசவுத் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார். சமயம் கிடைக்கும்போதெல்லாம் கோயிலில் பாடிக்கொண்டிருந்த அவருக்குப் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களைக் கொடுத்துப் பாட வைத்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் சங்கத்திடம் அழைத்து வந்தவர்கள் நாடகக் கலைஞர் மு.சு.மதியழகன், தாய்த் தமிழ்ப் பள்ளி நடத்திவரும் ஆசிரியர் சங்கர்ராம் ஆகியோர்.

திருநெல்வேலி ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 1993-ல் முதன்முதலாக, கலை இரவு மேடையில் பாடத் தொடங்கினார். விரைவில் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் அவரது குரல் ஒலிக்கத் தொடங்கியது. காசி ஆனந்தன், ஏகாதசி, நவகவி, ரமணன் போன்றவர்கள் எழுதிய பாடல்களை முழுமையாக உள்வாங்கி, உணர்வுடன் பாடியவர் அவர். ‘தமிழா… நீ பேசுவது தமிழா?’, ‘பாடல் எடுத்துப் பாடுக மனமே’, ‘அன்பு மணம் கமழும் அறிவு மலர்ச் சோலையிலே’ போன்ற பல பாடல்களுக்குத் தனது குரலால் தனி வடிவம் தந்தார்.

சீர்காழி கோவிந்தராஜனின் குரலை மிகவும் நேசித்த அவர், சங்கரன்கோவிலில் அவருக்காகவே ஒரு தனி இசை நிகழ்ச்சி நடத்தினார். இலங்கை அறிவிப்பாளர் அப்துல் ஹமீது தொகுத்து வழங்கிய பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி அது.

இவரது முதல் இசைத் தகடு, இசையமைப்பாளர் கங்கை அமரனால் வெளியிடப்பட்டது. கங்கை அமரன் இசைக் குழுவில் பலமுறை பாடியிருக்கிறார். டி.ஆர்.மகாலிங்கம், சிதம்பரம் ஜெயராமன் பாடல்களையும் அற்புதமாகப் பாடுவார். பாரதி பாடல்களைப் பாடி ஒலிப்பேழையாக வெளியிட்டிருக்கிறார்.

மதுரையில் நடந்த கலை இரவு நிகழ்ச்சியில் ‘தமிழா... நீ பேசுவது தமிழா?’ பாடலை அவர் பாடியதைக் கேட்டு ரசித்த நடிகர் - இயக்குநர் பார்த்திபன், தனது ‘கிறுக்கல்கள்’ நூல் வெளியீட்டு விழாவுக்குப் பாட அழைத்தார். அத்துடன், இளையராஜாவின் இசையில் ‘இவன்’ திரைப்படத்தில் பாடுவதற்கு ஒரு வாய்ப்பும் கொடுத்தார். கமல்ஹாசன் இயக்கிய ‘விருமாண்டி’ படத்தில் இடம்பெற்ற ‘கருமாத்தூர் காட்டுக்குள்ளே’ என்ற பாடலிலும் இவரது குரல் ஒலித்தது. தங்கர்பச்சான் இயக்கிய ‘களவாடிய பொழுதுகள்’ படத்திலும் பாடியிருக்கிறார்.

“நீங்க சென்னையில் இருங்களேன், ஏன் ஊருக்கு ஊருக்கு ஓடுறீங்க?” என்று இளையராஜாவே அவரிடம் கேட்டிருக்கிறார். “வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பாடுகிறேன். முழு நேரமும் மக்கள் மத்தியில் பாடுவதுதான் எனது விருப்பம்” என்று சிரித்தபடியே வந்துவிடுவார் திருவுடையான்.

கரிசல் குயில்

உழைக்கும் மக்கள் மத்தியில், அவர்களின் பிரச்சினைகளைப் பாடிக்கொண்டிருக்கும் கத்தார், கோவன் போன்ற கலைஞர்களைப் போன்றே திருவுடையானும் மக்கள் மேடைகளில் மட்டுமே பாடிக்கொண்டிருந்தார். ‘கரிசல் குயில்’ என்று எளிய மக்கள் அவரைக் கொண்டாடி மகிழ்ந்தனர். குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார்.

ஓவியரான திருவுடையான், சங்கரன்கோவில் பகுதியில் தட்டி போர்டு எழுதும் பணியில் இருந்தார். ஃபிளெக்ஸ் போர்டுகளின் வரவுக்குப் பிறகு, இசை நிகழ்ச்சிகளில் முழு மூச்சுடன் ஈடுபடத் தொடங்கினார்.

விசைத்தறித் தொழிலாளர்களின் பிரச்சினைகளை அக்குவேறு ஆணிவேறாகத் தெரிந்தவர். தொழிலாளர் களின் போராட்டங்கள், அரசு அதிகாரிகள், முதலாளி களுடன் தொழிலாளர்கள் கலந்துகொள்ளும் பேச்சுவார்த்தைகளில் அவர்கள் சார்பாகப் பேசுவதற்கு முதலில் நிற்பார். இரவு எத்தனை மணி நேரமானாலும் தொழிலாளர்கள் சார்பாகப் பேசிக்கொண்டிருப்பார். “ரெண்டு இட்டிலியாவது சாப்பிட்டுப் போங்க தோழர்” என்று சொன்னால், “கூப்பிடுற நேரத்தில் உடனே போகலேன்னா, இதுதான் சாக்குன்னு எதையாவது பேசி முடிச்சுருவாங்க முதலாளிமாருங்க...” என்று சிரிப்பார்.

திருவுடையானின் பாடல்களுடன் உணர்வு பூர்வமாகக் கலந்துவிட்ட ரசிகர்கள் இவரது இசை நிகழ்ச்சிகளுக்குப் பெரும் ஆதரவு கொடுத்தனர். திருவுடையான் மேடையேறிவிட்டார் என்று தெரிந்தாலே, ஆட்டோ ஓட்டுநர்கள், கடைகளில் வேலை பார்ப்பவர்கள், சிறு வியாபாரிகள் என்று பலரும் திரளாகக் குழுமிவிடுவார்கள். கலை இரவுகளின்போது பந்தோபஸ்துக்கு வந்த காவல் துறையினர் பலரும் இவரது பாடல்களைக் கேட்டு, பரம ரசிகர்களான கதைகள் உண்டு.

மக்கள் பிரச்சினைகளுக்காக வீதியில் இறங்க ஒருபோதும் தயங்காத இந்தப் போராளி, ஒரு முறை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டபோது, சொற்ப ஓட்டுக்கள் பெற்று தோற்றுப்போனார். உங்களுக்கு இதில் எல்லாம் வருத்தம் இல்லையா என்று கேட்டபோது, “மக்கள் அப்படித்தான் இருப்பாங்க தோழர்.. அதுக்காக நாம கோவிச்சுட்டுப் போக முடியுமா?” என்று சிரிப்பார்.

ஒடுக்கப்பட்ட மக்கள், தொழிலாளர்கள், பெண்கள் என்று வாழ்நாள் முழுதும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அனைவருக்கும் தனது தார்மிக ஆதரவை வழங்கியவர் அவர். அவர்களது துயரத்தை, வலியை உள்வாங்கிக்கொண்டு, உணர்வுபூர்வமான தனது குரலின் மூலம் சமூகத்தின் காதுகளுக்குக் கொண்டுசென்றவர். தனது பாடல்களையே பரிசாகத் தந்துவிட்டு, நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டது இந்த கரிசல் குயில்!

 இரா.நாறும்பூநாதன்,
நெல்லை மாவட்டத் தலைவர்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்
கலைஞர்கள் சங்கம்
narumpu@gmail.com

நன்றி :- இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.