Wednesday, November 4, 2015

தமிழறிஞர் ம.பொ.சி.க்கு சென்னையில் மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தல்


தமிழறிஞர் ம.பொ.சி.க்கு சென்னையில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என கிராமணி மக்கள் வாழ்வுரிமை நலச் சங்கம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.

 இது தொடர்பாக சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.வி.சுந்தரபாபு, பொதுச் செயலர் பச்சையப்பன் ஆகியோர் கூறியதாவது: சிலம்புச் செல்வர் ம.பொ.சி. சென்னையில் பிறந்தவர். "மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி' என்ற மந்திரச் சொல்லை மேடைக்கு மேடை முழங்கியவர். சென்னை மாநகரம் தமிழகத்தின் தலைநகரமாக இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஏகமனதாகக் கொண்டு வந்து அதற்காக மக்களைத் திரட்டிப் போராடியவர். வள்ளலாரின் சமரச சன்மார்க்கத்தை பட்டி தொட்டியெங்கும் பரவச் செய்தவர். 

 எல்லைப் போராட்ட வீரர், எழுத்தாளர், பேச்சாளர், தியாகி எனப் பன்முகம் கொண்ட ம.பொ.சி.க்கு சென்னை மாநகரில் ஓர் மணி மண்டபத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும், அதில் தியாகிகளின் வரலாறு, ஆவணங்கள், நாட்டுப்பற்றை ஏற்படுத்தும் எழுத்தும், பேச்சும் கொண்டவர்களின் நூல்கள், வரலாற்றுச் செய்திகள் இடம் பெற வேண்டும். சென்னையில் உள்ள காசிமேடு பகுதியில் ம.பொ.சி. நகர் அமைந்திருந்தது. அது இன்று மக்களின் அறிமுகத்தில் இல்லை. அதைப் புதுப்பித்து ம.பொ.சி. நகர் என மக்கள் அறியும் வகையில் அமைக்க வேண்டும். டி.எச். சாலை என்ற திருவொற்றியூர் நெடுஞ்சாலையை சிலம்புச் செல்வர் ம.பொ.சி. சாலை என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர்.

நன்றி :தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.