Wednesday, November 4, 2015

வீட்டு மேற்கூரையில் சூரிய மின்சக்தி அமைப்பு: 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்கள் அளிப்பு



வீட்டு மேற்கூரையில் சூரிய மின்சக்தி அமைப்பை ஏற்படுத்த 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் அந்த அமைப்பு பொருத்தப்பட்டுவிட்டது.

 "முதல்வரின் சூரிய மேற்கூரைத் திட்டத்தில்' 1 கிலோவாட் சூரிய மின்சக்தி அமைப்பை 10 ஆயிரம் வீடுகளில் நிறுவ தமிழ்நாடு எரிசக்தி முகமை இலக்கு நிர்ணயித்துள்ளது.

 இதற்காக தமிழக அரசு ரூ. 20 ஆயிரமும், மத்திய அரசு ரூ.30 ஆயிரமும் மானியமாக வழங்குகின்றன. மின் நுகர்வோர் ரூ.43 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலுத்தினால் போதும். 

 இதற்காக www.teda.in என்ற இணையதளத்தில், இணைய வழியிலோ அல்லது விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்தோ விண்ணப்பிக்கலாம். 
 விண்ணப்பித்த ஒரு மாதத்துக்குள் சூரிய மின்சக்தி அமைப்பு பொருத்தப்படும். 

 தனி வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகளின் மேற்கூரைகளிள் இந்த அமைப்பை பொருத்த தேர்ந்தெடுக்கப்பட்ட 19 நிறுவனங்களின் பட்டியலும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி? இவற்றில் வசிப்போர் ஒன்றாகவோ அல்லது தனித் தனியாகவோ விண்ணப்பிக்கலாம். 

 ஒவ்வொரு மின் இணைப்புக்கும் மானியம் வழங்கப்படும். இதற்கான ஒப்பந்தத்தை வீட்டு உரிமையாளர்கள் சங்கமோ அல்லது குழுவினரிடமோ சம்பந்தப்பட்ட நிறுவனம் மேற்கொள்ளும். இதற்காக அனைத்து வீட்டு உரிமையாளர்களிடமும் அனுமதி பெற வேண்டும்.

 மேலும், குடியிருப்புகளில் விளக்குகள், மோட்டார் பம்புகள், லிப்ட்டுகள் உள்ளிட்ட பொது பயன்பாட்டுக்காகவும் விண்ணப்பிக்கலாம். 

 நெட் மீட்டர்: இந்த அமைப்பின் மூலம் நாளொன்றுக்கு 4 முதல் 5 யூனிட் மின்சாரம் வரை உற்பத்தி செய்யலாம். தேவை போக மீதமுள்ள மின்சாரத்தை மின் வாரியத்துக்கும் வழங்கலாம். தேவைப்படும்போது மின்வாரியத்திடமிருந்து பெறலாம்.

 பெற்ற மின்சாரத்தில், வழங்கிய மின்சாரத்தைக் கழித்து மீதமுள்ள யூனிட்டுகளுக்கு மட்டும் மின் கட்டணம் செலுத்தலாம். ஒவ்வொரு மாதமும் ரூ.1,500 வரை மின் கட்டணத்தைச் சேமிக்க வாய்ப்புள்ளது.

 இதற்காக, தனியாக விண்ணப்பித்து ரூ.6 ஆயிரம் செலுத்தி நெட் மீட்டரைப் பெற வேண்டும். 
 வரவேற்பு: இந்த நிலையில், சூரிய மின்சக்தி அமைப்பை வீடுகளில் பொருத்த மக்களிடையே வரவேற்பு உள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி : தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.