Sunday, November 1, 2015

காந்தியடிகளும் தம்பிநாயுடுவும்!



தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்க் குடும்பத்தின் வரலாறு!

வரலாற்று நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தாலும், வரலாற்று ஏடுகளில் குறிப்பிடப்படாமல்போனவர்கள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர் தம்பிநாயுடு என்ற கிருஷ்ணசாமி. தென்னாப்பிரிக்காவில் 1893 முதல் 1914 வரை இருபத்தோரு ஆண்டுகள் வாழ்ந்து, அங்கு சத்தியாகிரகக் களம் கண்டு இறுதியாக நாடு திரும்பினார் மகாத்மா காந்தி. அவருடைய களப்போராட்டத்துக்கு ஆரம்பம் முதல் உற்றதுணையாக, தளபதியாக இருந்து பெருமை சேர்த்தவர்களில் முதன்மையானவர் தம்பிநாயுடு. 14 முறை கடுமையான சிறைத் தண்டனைகளை அடுத்தடுத்து அனுபவித்தவர் இவர்.

வள்ளியம்மை, நாகப்பன், நாராயணசாமி, சூசை, செல்வன் அளவுக்கு தம்பிநாயுடு இந்திய மக்களுக்கு அவ்வளவாக அறிமுகமாகவில்லை. இவரைப் பற்றி தனது சுயசரிதையில் மிக உயர்வாக எழுதியிருக்கிறார் காந்தி. தம்பிநாயுடுவும், அவரது குடும்பத்தினரும் காந்தி தொடங்கி, நெல்சன் மண்டேலாவின் போராட்டங்கள் வரையிலும் ஈடுபட்டவர்கள். தம்பிநாயுடுவின் பெற்றோர் மாயவரத்துக்கு அருகில் உள்ள மத்தூர் என்ற இடத்திலிருந்து, மொரிஷியஸுக்கு உழைக்கச் சென்றவர்கள். பின்னர், தென்னாப்பிரிக்காவில் உள்ள டிரான்ஸ்வாலுக்குக் குடிபெயர்ந்தார்கள் என்று ஒரு குறிப்பு உள்ளது.

காந்தியின் தளபதி!

தென்னாப்பிரிக்காவில் ‘மதராஸிகள்’ எனப் பொதுவாக அழைக்கப்பட்ட தமிழர்களும், தெலுங்கர் களும் இனவெறி காரணமாக விவரிக்க முடியாத வேதனைகளையும் துயரங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தனர். வக்கீல் தொழில் நடத்த அங்கு சென்ற பாரிஸ்டர் காந்தியும் இதேபோல் அங்கு அவமானங்களுக்கு உட்பட நேரிட்டது. இந்த இன்னல்கள் யாவும் உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில், 1906-ல் தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரக சட்ட மறுப்பு இயக்கத்தை சாத்வீக முறையில் நடத்தினார் காந்தி. இந்தப் போராட்டக் களத்தில் முதலாவது தளபதியாகச் செயல்பட்ட சுந்தர் பண்டிட் முதல் சிறைவாசத்திலேயே ஒதுங்கிக்கொண்டார். அடுத்த தளபதியாக காந்தியால் அடையாளம் காணப்பட்டவர்தான் தம்பிநாயுடு. இவரைப் போலவே இவரது துணைவியார் வீரம்மாளும் பலமுறை சிறைத் தண்டனைகளை அனுபவித்தவர்; பல இழப்புகளைச் சந்தித்தவர். காந்தி அமைத்த டால்ஸ்டாய் பண்ணையில் குடும்பத்துடன் இவர்கள் தங்கியிருந்தனர்.

காந்தி இறுதியாக 1914-ல் இந்தியா திரும்பியபோது, இந்திய சுதந்திரப் போராட்டத்துக்குத் தனது நான்கு பிள்ளைகளைப் பயன்படுத்திக்கொள்ளத் தாரை வார்த்துக் கொடுத்தார் தம்பிநாயுடு. இவர்களைத் தனது சுவீகாரப் புத்திரர்களாக ஏற்றுக்கொண்டு மேற்படிப்பு தொடர, தாகூரின் சாந்தி நிகேதனத்துக்கு காந்தி அனுப் பிவைத்தார். இதில் பக்கிரிசாமி என்ற மகன் இந்திய நிலைமை ஏற்புடமை ஆகாமல், நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார். பார்த்தசாரதியும், பாலகிருஷ்ணனும் 1919-ல் தென்னாப்பிக்கா திரும்பிவிட்டனர். மற்றொரு புதல்வரான ராய் என்ற நாராயணசாமி நாயுடு மட்டும் 1928 வரை இந்தியாவில் தங்கியிருந்தார்.

காந்தியின் புதல்வர் தேவதாஸுடன் நெருங்கிப் பழகிவந்தார். தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பியதும், டாக்டர் யூசுப் டாடு, டாக்டர் குணரத்தினம் நாயுடு, டாக்டர் மாண்டி நாயக்கர் ஆகியோருடன் இணைத்து நேடால் இந்திய காங்கிரஸில் தீவிரமாகப் பங்காற்றினார் நாராயணசாமி நாயுடு. பிறகு 1939-ல் கம்யூனிஸ்ட் கட்சி அனுதாபியாக மாறித் தொடர்ந்து விடுதலைப் போராட்டக் களத்தில் கடுமையான அடக்குமுறைகளுக்கு உள்ளாகி, 1953-ல் காலமானார். இவரது மனைவிதான் தென்னாப்பிரிக்காவில் பலருக்கும் அன்னையாகத் திகழ்ந்த மனோன்மணி என்ற ‘அம்மா நாயுடு’. இவரும் தனது மாமியார் வீரம்மாள், மாமனார் தம்பிநாயுடு போல் தென்னாப்பிரிக்காவின் விடுதலைப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றவர்.

மண்டேலாவுக்கு உணவளித்தவர்!

தம்பிநாயுடுவின் மகளான தயாநாயகி என்ற தைலம்மா மற்ற இந்திய பெண்களின் ஒத்துழைப்புடன் 1959-ல் நெல்சன் மண்டேலாவுக்கும் அவருடன் தேசத் துரோக சதித்திட்டக் குற்றங்களுக்காக விசாரணைக் கைதிகளாக இருந்த வால்டர் சிசுலு, கத்தரடா, கிச்சுலு, ஜோஸ்லோவா போன்ற 30 போராளிகளுக்கும் அவர்களின் வழக்கு முடியும்வரையில் விசாரணைக்கு வரும் வேளைகளில், அடக்குமுறைகளையும் மீறி உணவு வழங்கியவர்.

நெல்சன் மண்டேலா தனது 27 ஆண்டு சிறைத் தண்டனையை முடித்து 1990-ல் விடுதலையானபோது, இவரும் அம்மா நாயுடுவும் நெல்சன் மண்டேலாவை வரவேற்றனர். இருவரையும் ஒருசேர கட்டித் தழுவித் தனது வாஞ்சையை வெளிப்படுத்தினார் மண்டேலா. விவரிக்க முடியாத துயரங்களையும் இழப்புகளையும் தாங்கிக்கொண்டு தென்னாப்பிரிக்காவின் விடுதலைக்குப் பாடுபட்டவர் தைலம்மா. அந்நாடு 1994-ல் விடுதலை பெறுவதைக் காணாமலேயே 1991-ல் காலமானார்.

1988-ல் தம்பிநாயுடுவின் மருமகள் அம்மா நாயுடுவும், தம்பிநாயுடுவின் பேத்தி சாந்தி நாயுடுவும் அரசு விருந்தினர்களாக, இந்திய அரசால் அழைத்து கவுர விக்கப்பட்டனர். அப்போது இவர்கள் தமிழ்நாட்டுக்கு வருகைதந்ததும் குறிப்பிடத் தக்கது. தென்னாப்பிரிக்கா விடுதலைப் பெற்றதும் அந்நாட்டின் உயரிய விருதான லுத்தூலி விருது தைலம்மாவுக்கு (அவரது மறைவுக்குப் பின்னர்) வழங்கப்பட்டது.

தியாகப் பரம்பரை

1993-ல் அம்மா நாயுடு காலமானார். அம்மா நாயுடுவின் மகள் சாந்தி நாயுடுவும் தென்னாப்பிரிக்க வெள்ளையின அரசால் சித்திரவதைக்கு ஆளானவர். நெல்சன் மண் டேலாவின் முதலாவது மனைவி வின்னி மண்டேலாவை சதிக்குற்றத்தில் சிக்கவைப்பதற்காக, இவரின் சாட்சியத் தைப் பெற முயன்ற இனவெறி அரசு, அதற்காகப் பல கொடுமைகளை அவருக்கு இழைத்தது.

இவரைப் போலவே இவரது சகோதரர் இந்திரஸ் என்ற இந்திரசேன எலச்சி நாதன் நாயுடு, தேசத் துரோகக் குற்றங்களுக்காக நெல்சன் மண்டேலாவுடன் ரோபன் தீவில் பத்து ஆண்டுகள் கடும் தண்டனை அனுபவித்தார். வெள்ளையினத்தைச் சேர்ந்த சிறைக் காவலரை எதிர்த்துப் பேசினார் என்று காரணம் காட்டி அவருக்கு ரேபின் தீவில் பத்து ஆண்டு கடும் சிறைவாசம் விதிக்கப்பட்டது. சிறையில் பல கொடுமைகளை அனுபவித்த அவர் 1991-ல் விடுதலை பெற்றார். அம்மா நாயுடுவின் இன்னொரு மகள் ரம்னி. இவர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் இன்னொரு இந்திய போராளியான முகமது இசுமாயில் என்பவரை 1964-ல் திருமணம் செய்துகொண்டார். இனவெறி அரசின் கொடுமைகளை அனுபவித்து, தம்பி நாயுடுவின் வாரிசுகள் தப்பியோடி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழுத்தங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை, தென்னாப்பிரிக்கா அரசு நீக்கியது. அதன் பிறகே தம்பிநாயுடுவின் வாரிசுகள் நாடு திரும்பினர். அம்மா நாயுடுவின் மற்றொரு மகனான பிரேமா என்ற பிரேமா நாதன் நாயுடு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டப்படி கடும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இவரும் இவரது மனைவி கமலாவும் 1981-ல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து வரும் வேளையில் இவர்களது 10 வயது மகன் கூபன் நாயுடு, தென்னாப்பிரிக்கா தேசிய காங்கிரசின் போராளிகளை விடுதலை செய்யக் கோரி நீதிமன்ற வாசலில் உரக்க கோஷம் போட்டான். அதற்காக அவனுக்கு அந்தச் சிறிய வயதில் சிறைத் தண்டனை கிடைத்தது. தனது மெட்ரிக் தேர்வைச் சிறையிலிருந்தே எழுதினான் அந்தச் சிறுவன்.

காந்தி மற்றும் மண்டேலாவின் சுதந்திரப் போராட்டங்களில் முழுமூச்சுடன் பங்கேற்ற பெருமை தம்பிநாயுடுவின் பரம்பரைக்கு உண்டு. தம்பிநாயுடுவின் குடும்பத்தினர் ஐந்து தலைமுறையினர் தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதுபோல உலகின் வேறு எந்த விடுதலைப் போராட்ட வரலாற்றிலும் இருப்பதாகத் தெரியவில்லை. நீண்டகாலம் உடல்நலம் குன்றியிருந்த தம்பிநாயுடு, 1933 அக்டோபர் 30-ல் காலமானார். அவரைக் கவுரவிக்கும் வகையில் நினைவு அஞ்சல் தலையை வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காந்திக்கே செய்யும் கவுரவமாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை!

தருமபுரி கே. பாலசுந்தரம், தொடர்புக்கு: kbsundram@live.in

இன்று தம்பிநாயுடுவின் 82-வது நினைவுதினம்

நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.