Sunday, November 1, 2015

தமிழ் தந்த சொத்து ‘அரிசி'






உலகில் அரிசி உண்ணும் மிகவும் பழமையான இனங்களில் தமிழினமும் ஒன்று. அலெக்சாண்டர் இந்தியாவுக்கு வருவதற்கு முன்புவரை, அரிசியைப் பற்றி ஐரோப்பியர்களுக்குத் தெரியாது. அலெக்சாண்டருடன் வந்த அரிஸ்டாட்டில் அன்றைய சிந்து ஆற்றின் (Indus river) தென்புறமுள்ள அனைத்து அறிவுச் செல்வங்களையும் பெரியதொரு குழுவினருடன் வந்து திரட்டிச் சென்றுள்ளார் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். அதில் அரிசியும் ஒன்று என்பது சுவையான செய்தி.

பல மேல்திசை, கீழ்த்திசை நாடுகளுக்கெல்லாம் அரேபிய வணிகர்களால் அரிசி கொண்டு செல்லப்பட்டது. கி.மு. 300-களில் எகிப்து, எத்தியோப்பியா, பாரசீகம் (இன்றைய ஈரான்) உள்ளிட்ட ஆப்பிரிக்கக் கடலோர நாடுகளுக்கு அரிசி கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர்த் தோன்றிய ரோமப் பேரரசின் (இன்றைய இத்தாலி) கீழ் இருந்த சிசிலி வழியாக, ஸ்பெயின் நாட்டுக்கு அரிசி சென்றது. வாவிலோவ் என்ற ரஷ்ய அறிஞர் உலகில் உள்ள பயிரினங்களின் தோன்றிய இடங்களைக் கண்டறிந்து கூறியவர். இந்தியாவில் இருந்து அரிசி தோன்றியதாக அவர் குறிப்பிடுகிறார். சீனாவிலிருந்து உலகம் முழுவதும் அரிசி பரவியதாக மற்றொரு கருத்தும் உண்டு.

எப்படிப் போனது அரிசி?

பொதுவாக அரிசி எனப்படுவது நெல்லிலிருந்து பிரித்து எடுக்கப்படும் பொருள். நெல் என்பதற்கும் அரிசி என்பதற்கும் வேறுபாடு உண்டு. நெல்லுக்கு paddy என்று ஆங்கிலத்தில் சொல் உள்ளது. ஆனால், அச்சொல் கி.பி. 17-ம் நூற்றாண்டில்தான் ஆங்கில அகராதிக்குள் வருவதாக, ஆங்கில வேர்ச்சொல் அகராதிகள் குறிப்பிடுகின்றன. அதற்கு முந்தைய சொல்லான நெல் என்பதை rice என்றே அகராதிகள் குறிப்பிடுகின்றன.

இதன் மூலச் சொல் எங்கிருத்து வந்தது என்றால் பதிமூன்றாம் நூற்றாண்டில் ஆங்கில அகராதிக்குள் வருகிறது. அதன்மூலம் எங்கு என்று தேடினால், அது இத்தாலி மொழியில் rizo என்ற சொல்லில் இருந்து வந்ததாகக் குறிக்கின்றனர். அந்தச் சொல்லோ orisa என்ற லத்தீன் மொழிச் சொல்லில் இருந்து வந்ததாகக் குறிப்புகள் கூறுகின்றன. லத்தீன் மொழி பேசிய பகுதிகள் கிரேக்க, ரோமப் பேரரசுப் பகுதிகள். அங்கு நெல் விளைவதே கிடையாது. கி.பி. 1475-க்குப் பிறகுதான் நெல் சாகுபடி இத்தாலிக்கு வருகிறது. அதற்கு முன்பு அவர்கள் அரிசியை ஒரு மருத்துவப் பொருளாகவே இறக்குமதி செய்துள்ளார்கள் என்று ஆலன் டேவிட்சன் என்ற ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.

தமிழே வேர்

ஆக, நெல்லே விளையாத நிலத்திலிருந்து ஒரு சொல் எப்படி உருவாகும்? ஆகவே, இந்த அரிசி என்று புரிந்துகொள்ளப்பட்ட நெல் என்ற சொல்லின் மூல வேர் தமிழிலேதான் உள்ளது. ஏனென்றால் அரிதல், அரித்தல் என்ற சொற்கள் நெல்லில் உள்ள உமியை நீக்குகின்ற செயலைக் குறிப்பிடுகின்றன. அவ்வாறு ‘அகற்றுதல்' என்ற பொருளில் அரிசி என்ற சொல் உருவாகியுள்ளது. இது பல மொழிகளுக்குப் பயணம் செய்து, இன்றைக்குச் சமைக்கப்பட்ட சோற்றையே நாம் rice என்று குறிப்பிடும் அளவுக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

இவ்வாறு நெல்லின் வரலாற்றை இழந்த தமிழினம், பசுமைப் புரட்சிக்குப் பின்னர் மரபுச் செல்வமான நெல் இனத்தையும் இழந்தது. பல நூறு வகையான நெல் இனங்கள் இருந்த மண்ணில், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மணிலாவிலிருந்து வந்த வீரிய ரகம் என்று சொல்லப்பட்ட சோதா நெல் ரகங்கள் வந்தேறிவிட்டன.

நெல் காப்பாளர்

இதன் விளைவு… நோயும் நீர்ப் பற்றாக்குறையும் வந்தன. இந்தச் சூழலில், இருக்கின்ற மரபு நெல் இனங்களைக் கண்டறிந்து அவற்றைப் பெருக்கும் முயற்சியில் தமிழகத்தில் முதலில் களமிறங்கியவர், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகேயுள்ள வளையாம்பட்டு என்னும் ஊரைச் சேர்ந்த இயற்கைவழி வேளாண்மை மூத்த முன்னோடிகளில் ஒருவரான வெங்கடாசலம். வயது எண்பதைத் தாண்டிவிட்டாலும், உழைப்பில் இளைஞருக்கும் மேலான வேகம் கொண்டவர். அடிப்படையில் பொறியாளரான இவர், தனது வாழ்நாள் கடமையாக மரபு நெல் விதைகளைப் பாதுகாத்துவருகிறார். இவருடைய பகுதியில் உள்ள 19 வகையான பாரம்பரிய நெல் வகைகளைத் தனது நண்பர்களுடன் இணைந்து பாதுகாத்துள்ளார்.

தூயமல்லி, குள்ளக் கார், கிச்சிலிச் சம்பா, வாடன் சம்பா போன்ற அரிய வகை நெல் இனங்கள் இவரிடம் உள்ளன. இவருடைய நண்பர் ப.தி. இராஜேந்திரன், மீனாட்சிசுந்தரம் ஆகியோர் இவருக்கு உறுதுணையாக உள்ளனர். இப்போது களர்ப்பாலை என்ற நெல்லைக் கண்டறிந்து பரப்பும் முயற்சியில் இறங்கியுள்ளார் வெங்கடாசலம்.

மற்ற மொழிகளில் அரிசி என்ற தமிழ்ச் சொல்லின் மருவல்


அரபி மொழியில் - அல்ருஸ் (al-ruz)



ஸ்பானிய மொழியில் - அராஸ் (arroz)



லத்தீன் மொழியில் - ஒரைசா (oryza)



இத்தாலியில் - ரைசே (riso)



பிரெஞ்சு மொழியில் - ரிஸ் (riz)



ஜெர்மனியில் - ரெய்ஸ் (reis)



ஆங்கிலத்தில் - ரைஸ் (rice)





நம்மாழ்வாருடன் வெங்கடாசலம்


கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com

செங்கம் வெங்கடாசலம் தொடர்புக்கு: 98943 63307

0 comments:

Post a Comment

Kindly post a comment.