Wednesday, November 25, 2015

பாலையாகும் பள்ளிக்கரணை!

சென்னை, பள்ளிகரணையில் உள்ள சதுப்பு நிலம். படம்: எம்.கருணாகரன்

சென்னை, பள்ளிகரணையில் உள்ள சதுப்பு நிலம். 

படம்: எம்.கருணாகரன்


ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு


கடல்கள், ஆறுகள், ஏரிகள் போலவே சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்தவை சதுப்பு நிலங்கள் (Wet lands). கடல்களுக்கும் ஆறுகளுக்கும், ஏரிகளுக்கும், சதுப்பு நிலங்களுக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. ஆறுகள் மற்றும் ஏரிகளின் உபரி நீர் நீண்டகாலம் தொடர்ச்சியாக வெளியேறும் பகுதிகளில் சதுப்பு நிலங்கள் உருவாகின்றன. இவை மூன்று மீட்டருக்கு குறைவான ஆழம் கொண்டவை. கனிமவளம் மிகுந்தவை. நிலத்தடி நீரை சேமித்து வைப்பதில் சதுப்பு நிலங்களின் பங்கு அபாரமானது. அவை தங்க ளதுபரப்பளவைப் போல சுற்றுப் பகுதியில் பத்து மடங்குப்பரப்பளவுக்கு நிலத்தடி நீரை வற்றாமல் பாதுகாக் கின்றன. தவிர, வலசைசெல்லும் பறவை களுக்கு இனப் பெருக்க பூமியாகவும் திகழ்கின்றன. ஏராளமான நீர் தாவரங்கள், மீன்கள், நுண்ணிய முதுகெலும்பு இல்லா உயிரினங்கள் வசிக்கும் பல்லுயிர் சூழல் முக்கியத் துவம் வாய்ந்த பகுதி இவை.


இவற்றின் முக்கியத்துவத்தை சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் அறிந்திருந்தார்கள். கெய்ரோ நகருக்கு தெற்கே 80 கி.மீ தொலைவில் 1800 சதுர கி.மீ பரப்பளவில் ஃபாயூம் (Fayum) என்கிற சதுப்பு நிலம் இருந்தது. இதன் அருகில் இருந்த ஒரு மலை இடுக்கு வழியாக நைல் நதியின் தண்ணீர் சதுப்பு நிலத்துக்கு வந்துகொண்டிருந்தது. ஒருகட்டத்தில் இதற்கு தண்ணீர் வந்துகொண்டிருந்த பாதை தூர்ந்துபோனது. பல ஆண்டுகளாக இந்த நிலை தொடர்ந்ததால் சதுப்பு நிலம் வறண்டு பாளம் பாளமாக வெடித்தது. பறவைகள், நீர் வாழ் உயிரினங்கள் அழிந்தன. பாலைவனமாக மாறியது சதுப்பு நிலம்.


கி.மு. 1877 - 1870ம் ஆண்டுகளில் எகிப்தை ஆண்ட மன்னன் இரண்டாம் செனுஸ்ரெட்டுக்கு (Senusret - 2) இந்தத் தகவல் சென்றது. உடனடியாக சதுப்பு நிலத்தை மீட்க முடிவு செய்யப்பட்டது. மராமத்துப் பணியில் மக்களும் ஈடுபட்டார்கள். முதல்கட்டமாக பல மைல் தூரம் கொண்ட தூர்ந்துப்போன ஆற்றுப் பாதை ஆழப்படுத்தப்பட்டது. அதன் இருபுறமும் கரைகள் அமைக்கப்பட்டன. அடுத்ததாக, சதுப்பு நிலத்தையும் நைல் நதியையும் இணைத்த மலை இடுக்கில் அணை ஒன்று கட்டப்பட்டது. இந்த அணையின் மூலம் சதுப்பு நிலத்துக்கு சீரான அளவில் தண்ணீர் செலுத்தப்பட்டது. சில மாதங்களிலேயே பாலைவனத்தில் பசுமைத் துளிர்த்தது. நீர்த் தாவரங்கள், பாசிகள், பறவைகள், உயிரினங்கள் பல்கிப் பெருகின. இதன் தொடர்ச்சியாக புத்துயிர் பெற்றது சதுப்பு நிலம். இத்தோடு விட்டுவிடவில்லை அவர்கள். சதுப்பு நிலத்தில் சற்று மேடான பகுதிகளைப் பன் படுத்தினார்கள். கால்வாய்கள் வெட்டினார்கள். கணிசமான பகுதியில் விவசாயம் செய்தார்கள். ஆனால், நாகரிக சமூகம் என்று கூறிக்கொள்ளும் நாம் என்ன செய்கிறோம்?


நமது அதிகாரிகள் சதுப்பு நிலங்களை எதற்கும் உதவாத நிலம் (Waste land) என்று குறிப்பு எழுதினார்கள். கடந்த 1985-86ம் ஆண்டுதான் மத்திய அரசு இதன் முக்கியத் துவத்தை உணர்ந்தது. தேசிய சதுப்பு நிலப் பாதுகாப்பு மற்றும் நிர்வாக திட்டம் உருவாக்கப் பட்டது. அதன் கீழ் நாட்டில் உள்ள 94 சதுப்பு நிலங்கள் கொண்டுவரப்பட்டன.


தமிழகத்தில் சென்னை - பள்ளிக்கரணை, விழுப்புரம் - கழுவெளி, நாகப்பட்டினம் - கோடியக் கரை (Point Calimere) ஆகிய சதுப்பு நிலங்கள் இருக்கின்றன. இவற்றில் பள்ளிக் கரணையும் கழுவெளியும் நன்னீர் சதுப்பு நிலங்கள். அரிதி னும் அரிதானவை இவை. மதிப்புமிக்கவை. நமது சதுப்பு நிலங்களில் நெடுங்கால் உள்ளான், முக்குளிப்பான்கள், தண்ணீர்க் கோழிகள், நாமக் கோழிகள், நீளவால் இலைக் கோழிகள், நீலத் தாழைக் கோழிகள், நாமக் கோழிகள், சீழ்க்கைச் சிறகி, பூநாரைகள், கதிர்க் குருவிகள், சாம்பல் கதிர்க் குருவி, கள்ளப்பருந்து, கரிச்சான், சாம்பல் ஆள்காட்டி, கூழைக்கடா போன்ற பறவைகள் இனப்பெருக்கம் செய்கின்றன.


ஆனால், நாட்டிலேயே மிக, மிக மோசமாக பாதிக்கப்பட்டது பள்ளிக்கரணை சதுப்பு நிலம்தான். சமகாலத்தில் நம் கண் முன்னால் அழிவைச் சந்தித்துக்கொண்டிருக்கும் அரிய பொக்கிஷம் அது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இது 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்திருந்தது. சுற்றுவட்டாரங்களில் சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நிலத்தடி நீர் செறிவுடன் காணப்பட்டது. ஆனால், இன்று பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பரப்பளவு 500 ஹெக்டேருக்கும் குறைவே. பத்தில் ஒரு பங்கைக்கூட விட்டு வைக்காமல் வெறிகொண்டு விழுங்கிவிட்டோம். சதுப்பு நிலத்தைப் பிளந்துச் செல்கின்றன சாலைகள். கலந்துநிற்கின்றன சாக்கடைகள்.


கான்கிரிட் கட்டிடங்களைக் கட்டி பூமித்தாயை உயிரோடு புதைத்துவிட்டோம். நிலத்துக்குள் தண்ணீர் ஊடுருவ முடியவில்லை. தாகத்தில் மூச்சடைத்து தவிக்கிறாள் தாய்.


சதுப்பு நிலத்துக்கு தண்ணீர் கொடுத்த ஏராளமான மதகுகளைக் காணவில்லை. எல்லாவற்றையும் விட கொடுமையாக சென்னை மாநகராட்சியே அங்கே மலைபோல குப்பையைக் கொட்டி வைத்திருக்கிறது. மருத்துவமனை கழிவுகள் தொடங்கி இறைச்சிக் கழிவுகள் வரை அங்கே பகிரங்கமாகக் கொட்டப்படுகிறது. சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனமான தேசிய கடல் தொழில்நுட்பக் கழகமே சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்திருக்கிறது. 2007-ம் ஆண்டில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இது அறிவிக்கப்பட்ட பின்பும் இது தொடர்வதுதான் வேதனை. இனியும் இது நீடித்தால் பள்ளிக்கரணை பாலையாகும் நாள் வெகுதூரமில்லை.


சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தியர்களுக்கு இருந்த விழிப்புணர்வு, நவீன சமூகமாகிய நமக்கு இல்லை என்பதுதான் வெட்கித் தலைக்குனிய வேண்டிய விஷயம்!

உங்கள் வீட்டுக்குள் தண்ணீர் வந்தது ஏன் ?

சென்னையை விடிய விடிய வடிய வைத்து அடிக்கிறது மழை. நகரின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் பூண்டி (கொள்ளளவு 3.1 டி.எம்.சி), செம்பரம்பாக்கம் (3.3 டி.எம்.சி), புழல் (3.6 டி.எம்.சி), சோழவரம் (0.8 டி.எம்.சி) ஆகிய ஏரிகள் அதிகாரபூர்வமாக திறந்துவிடப்பட்டுள்ளன. இவை கொசஸ்தலை, அடையாறு வழியாக கடலில் சென்று கலக்கின்றன. அதாவது, குடிநீரை கடலுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறோம். இந்த நான்கு ஏரிகளின் வழித் தடத்தில் மட்டும் சுமார் 36 சங்கிலித் தொடர் ஏரிகள் அழிக்கப்பட்டதே இதற்குக் காரணம். இவை இல்லாமல் மடிப்பாக்கம், அம்பத்தூர், ரெட்டை ஏரி உள்ளிட்ட பல ஏரிகள் நிரம்பி வழிந்து, அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததில் மக்கள் மாடிகளில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். அடையாறு கரையோரப் பகுதிகள், தாம்பரம், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு அன்றாட உணவே அரிதாகிவிட்டது.

சென்னையின் இன்றைய வெள்ளத்துக்கு மிக, மிக முக்கியமான காரணம் கீழ்கண்ட ஏரிகளின் ஆக்கிரமிப்புகள்தான். இதை அப்புறப்படுத்த அரசு முன்வருமா?

(நீர் அடிக்கும்)

0 comments:

Post a Comment

Kindly post a comment.