Tuesday, November 24, 2015

திருக்குறள் போட்டி: வென்ற மாணவர்களுக்கு நாடாளுமன்ற அரங்கில் டிசம்பரில் பாராட்டு விழா !



திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நாடாளுமன்ற வளாக அரங்கில் வரும் டிசம்பர் மாதம் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினரும், திருவள்ளுவருக்கான மாணவர்கள், இளைஞர் மன்றத்தின் தலைவருமான தருண் விஜய் தெரிவித்தார்.

திருக்குறளையும், திருவள்ளுவரின் புகழையும் வட மாநிலங்களில் எடுத்துச் செல்லும் பிரசாரத்தை உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த, பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் மேற்கொண்டு வருகிறார். இதற்காக தேசிய அளவிலான திருவள்ளுவருக்கான மாணவர்கள், இளைஞர் மன்றத்தையும் அவர் உருவாக்கியுள்ளார்.

இந்த அமைப்பின் சார்பில் அண்மையில் தமிழகத்தில் நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் 133 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது குறித்து தில்லியில் செய்தியாளர்களுக்கு தருண் விஜய் திங்கள்கிழமை அளித்த பேட்டி வருமாறு:

எனது தலைமையிலான தேசிய அளவிலான திருவள்ளுவருக்கான மாணவர்கள், இளைஞர்கள் மன்றம் சார்பில் நவம்பர் 1-ஆம் தேதி மதுரையில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி நடத்தப்பட்டது. இதில், சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

அவர்களில் 133 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வந்து திருக்குறளை ஒப்பிக்கும் விழாவை நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். இந்த விழாவை குளிர்காலக் கூட்டத் தொடர் முடியும் தருவாயில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இந்த விழாவில் பங்கேற்க அதிமுக, திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ வாதி உள்பட பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து தனிப்பட்ட முறையில் அழைப்பிதழ் அளிக்க உள்ளேன். இவ்விழாவில் தமிழ் அறிஞர்களும் கௌரவிக்கப்பட உள்ளனர். அதற்கான பெயர்ப் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் முதல் வாரத்தில் தமிழ் அறிஞர்கள் பட்டியல் விவரம் அறிவிக்கப்படும்.

.திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பாராட்டவுள்ளார். விழாவின் போது நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவரின் சிலை மற்றும் உருவப்படம் அமைக்க வலியுறுத்தப்படும்.

இந்த விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் திருக்குறள்களை ஒப்பிப்பர். அந்த மாணவர்கள் நாடாளுமன்றத்தையும், தில்லியின் முக்கிய சுற்றுலாத் தலங்களையும் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்படும்.

திருக்குறள் ஒப்பித்தல் விழா டிசம்பர் 2 அல்லது 3ஆவது வாரத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேதியும் விரைவில் முடிவு செய்யப்படும்.

தற்போது திருவள்ளுவருக்கான மாணவர்கள், இளைஞர்கள் மன்றத்தில் தமிழகத்தில் 2.50 லட்சம் பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர். டிசம்பர் விழாவுக்குப் பிறகு வட மாநிலங்களில் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரப்படுத்தப்படும் என்றார் தருண் விஜய்
தினமணி


0 comments:

Post a Comment

Kindly post a comment.