Friday, November 6, 2015

தேசிய விருதை திருப்பி அளிக்கும் அருந்ததி ராய் உள்ளிட்ட 24 பேர்


பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் திரைப்பட இயக்குநர்கள், படத்தொகுப்பாளர்கள் உள்ளிட்ட மேலும் 24 பேர், தங்களது தேசிய விருதுகளை திருப்பி அளிப்பதாக வியாழக்கிழமை அறிவித்தனர்.

தாத்ரி சம்பவம், பிரபல எழுத்தாளர் கலபுர்கி படுகொலை உள்ளிட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டி, நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகக் கூறி, நயன்தாரா ஷகல் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள், தங்களுக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாதெமி விருதுகளை கடந்த மாதம் திருப்பி அளித்தனர்.

இவர்களை தொடர்ந்து, 10-க்கும் மேற்பட்ட திரைப்பட, ஆவணப்பட இயக்குநர்கள் தங்களது தேசிய விருதுகளையும், பிரபல விஞ்ஞானி பார்கவா தனக்கு அளிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதையும் திருப்பி அளிப்பதாக அண்மையில் அறிவித்தனர்.

இவர்களது வரிசையில் தற்போது, புக்கர் விருது பெற்ற பிரபல எழுத்தாளரும், சிறந்த திரைக்கதையாசிரியருக்கான தேசிய விருது பெற்றவருமான அருந்ததி ராய், தனது தேசிய விருதை திருப்பி அளிப்பதாக வியாழக்கிழமை தெரிவித்தார்.

தமது இந்த முடிவு குறித்து அவர் கூறியபோது, "கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதலை கண்டிக்கும் விதமாக தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறினார்.

இவரைத் தவிர, பிரபல திரைப்பட இயக்குநர்களான குந்தன் ஷா, சாகித் மிர்ஜா, வீரேந்திர சாய்னி, பிரதீப் கிருஷ்ணன், மனோஜ் லோபோ, அமிதாப் சக்கரவர்த்தி, திரைப்பட ஒளிப்பதிவாளர் சத்ய ராய் நாக்பால், படத்தொகுப்பாளர் தருண் பார்தியா உள்ளிட்ட திரைப்படத் துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மேலும் 24 பேரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட தேசிய விருதை திரும்ப அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஹேமா மாலினி கண்டனம்: திரைப்படத் துறையினர் தேசிய விருதை பெறுவதற்காக, தங்களது வாழ்நாளையே தியாகம் செய்யும் நிலையில், தங்களுக்கு அளிக்கப்பட அந்த விருதை சிலர் திருப்பித் தருவது சரியான முடிவல்ல என்று பாஜக எம்.பி.யும், நடிகையுமான ஹேமா மாலினி தெரிவித்தார்.

முரண்பாடு: ஒருபுறம் பிரிவினைவாதிகளான யாசின் மாலிக், கிலானி போன்றவர்களுக்கு ஆதரவளித்துவிட்டு, மறுபுறம் சகிப்பின்மையை காரணங்காட்டி, அருந்ததி ராய் தனது தேசிய விருதை திருப்பி அளிப்பது முரண்பாடாக உள்ளது என்று பிரபல திரைப்பட தயாரிப்பாளரான அசோக் பண்டிட் சாடியுள்ளார்.

நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.