Friday, November 6, 2015

திருநங்கைக்கு காவல் உதவி ஆய்வாளர் பணி: உயர் நீதிமன்றம் உத்தரவு


காவல் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) பணிக்கு தேர்வாக திருநங்கைக்கு முழுத் தகுதி உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி. ஆணாகப் பிறந்த இவர், பெண்மை மாற்றத்தைத் தொடர்ந்து, அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். பின்னர் தனது பெயரை "ப்ரித்திகா யாஷினி என்று மாற்றிக் கொண்டார்.

இந்த நிலையில், காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி விண்ணப்பித்திருந்தார். இவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, மே 23-இல் நடைபெறும் எழுத்துத் தேர்வில் தன்னை அனுமதிக்க தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் கோரியிருந்தார். நீதிமன்ற உத்தரவின்பேரில், எழுத்துத் தேர்வில் அவர் பங்கேற்று, தேர்ச்சி பெற்றார்.

மூன்றாவது பாலினத்தையும் சேர்க்க வேண்டும்: பின்னர், உடல் தகுதித் தேர்வின்போது, 100 மீட்டர் ஓட்டத்தில் யாஷினி ஒரு நொடி தாமதமாக வந்தததால் நேர்காணலுக்கு அழைக்கப்படவில்லை என்று மனுதாரர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து, நேர்காணலில் அவர் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:2014-இல் உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஒரு உத்தரவில், சட்டப்படி திருநங்கையருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை, கல்வி, வேலைவாய்ப்பில் இடங்களை மத்திய, மாநில அரசுகள் அளிக்க வேண்டும். மூன்றாம் பாலினத்தவரையும் ஒரு பிரிவாகச் சேர்க்க தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல் பணியில் மூன்றாவது நபர்: இரு திருநங்கைகள் காவலர்களாகப் பணியாற்றுகின்றனர். மூன்றாவது நபராக மனுதாரர் உள்ளார். எனவே, மற்ற திருநங்கைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், தேர்வின் கடைசிக் கட்டத்தை அவர் எட்ட வேண்டும்.

மனுதாரர் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு தேர்வாக முழு தகுதி உள்ளது. 

அந்தப் பணியில் அவர் அர்பணிப்போடும், மற்ற திருநங்கைகளின் நலனைக் கருத்தில் கொண்டும் செயல்படுவார் எனவும் நம்புகிறோம்.

வழக்கில் சிறப்பாக வாதங்களை எடுத்துரைத்த கூடுதல் அரசுத் தலைமை வழக்குரைஞர் அரவிந்த் பாண்டியன், மனுதாரரின் வழக்குரைஞர் பவானி சுப்பராயன் ஆகியோருக்கு பாராட்டுள் என தெரிவித்தனர்.

நன்றி :- தினமணி 

0 comments:

Post a Comment

Kindly post a comment.