Monday, October 26, 2015

படைப்பின் ரகசியம் (நீரும், நெருப்பும்)



பூமியின் உயிரினத் தோற்றத்திற்கும், வாழ்விற்கும் ஆதாரமான நீருக்கும், நம் அன்றாட வாழ்வில் உணவை சமைக்கப் பயன்படும் நெருப்பிற்கும் உள்ள நேர்மாறான இயல்புகளையும், அவைநமக்கு கற்றுத் தரும் படிப்பினையையும் காண்போம்.

 நீர் நிறமற்றது, நெருப்பு நிறமுடையது.

 நீர் வடிவமற்றது, நெருப்பு எரியும்பொழுது விதவிதமான மாய வடிவங்களைக் காண்பிக்கக் கூடியது.

 நீருக்கு பக்க விளைவுள்ள ஆற்றல் ஏதுமில்லை. ஆனால் நெருப்பு எரியும்பொழுது புகையை பக்க விளைவாக காண்பிக்கக் கூடியது.

 நீருக்கு மாயத் தோற்றமுள்ள விளைவுகள் ஏதுமில்லை. ஆனால் நெருப்பு ஒரு சிறு பொறியிலிருந்து கிளம்பி, பிரமாண்டமாக பரவி அச்சுறுத்தலான மாயத் தோற்றத்தைக் காண்பிக்கும்.

 நீர், தான் நிலை கொள்ளும் இட வடிவத்தை ஏற்றுகொள்ளக் கூடியது. ஆனால் நெருப்பு எவ்வடிவத்திலும் அடங்காது, எல்லை கடந்து பரவக் கூடியது.

 நீர் பூமியில் எவ்விடத்தைச் சார்ந்து நின்றாலும் அல்லது சார்ந்து சென்றாலும், அவற்றை சுற்றியுள்ள இடங்களை மனித முயற்சியால் வளமை ஆக்கக் கூடியது. ஆனால் நெருப்பு எந்த இடத்தையோ அல்லது பொருளையோ எவற்றைத் தீண்டினாலும் (சார்ந்தாலும்) அவற்றை அழிக்கும் தன்மையுடையது.

 நீரில் எப்பொருள் கரைந்தாலும், அப்பொருளின் தன்மையை நீர் பெற்று விடும். ஆனால் நெருப்பில் எப்பொருள் வீழ்ந்தாலும் அப்பொருளை நெருப்பு அழிக்கவே முற்படும்.

 நீர் அடர்த்தி குறைவான பொருளை மிதக்க விட்டு, அது காற்றின் வழியில் இயங்க அனுமதிக்கும். ஆனால் நெருப்பு அடர்த்தி குறைவான பொருளை எளிதில் கைப்பற்றி விரைவாக அழித்துவிடும்.

 நீர் தாழ்வை நோக்கி பாயக் கூடியது. நெருப்பு மேல் நோக்கி பாயக் கூடியது.

 மேற்கண்டவாறு நீருக்கும், நெருப்பிற்கும் உள்ள வேறுபாடுகளில், நீரை விட நெருப்பிற்கே பன்முகத் தன்மையும், மிகுந்த ஆற்றலும் இருப்பதாக தோன்றும். ஆனால் நெருப்பிற்கு அழிக்கும் தன்மையே பிரதானமாக உள்ளது. அப்படிப்பட்ட நெருப்பை ஒரு எளிய, இணக்கத் தன்மை வாய்ந்த நீர் தீண்டி தணித்து விடுகிறது.


 பூமியில் எளிமை, நல்லிணக்கம், அகிம்சை ஆகியவற்றின் எதிரே வன்மமும், பேராசையும், போர் வெறியும் வலிமையிழந்து போகும் என்பதே இவற்றின் பொருளாகும்.
 நெருப்பு நீரை நேரிடையாக சந்திக்க இயலாது, ஒரு பாத்திரம் அல்லது உலோகத்தை இடையீடாகக் கொண்டு சந்தித்து, நெருப்பு நீருக்கு அதன் தன்மையை அளித்தாலும், முடிவில் நீர் தனக்கு வழங்கப்பட்ட வெப்பத்தை வெளியேற்றி இயல்பு தன்மைக்கே திரும்பிவிடும்.

 அதுபோல்..

 அன்பும், அகிம்சையம் உள்ள இடத்தில் வன்முறையைத் திணித்தாலும் விரைவில் வன்முறையும், வன்முறையால் ஏற்பட்ட தீர்வும் பலமிழந்து போகும்.
 நீர் நெருப்பிற்கு எதிரியாக இருப்பது மட்டுமின்றி, திரவ வடிவிலான எரிபொருளை நீரில் கலக்கும் பொழுது, எரிபொருளை நீர் தன்னுடன் கலக்க அனுமதிக்காமல் ஒதுக்கி மிதக்க விட்டு விடுகிறது.

 அதுபோல்..

 மனிதர்கள் வன்முறையை எதிர்ப்பதுடன் வன்முறையைத் தூண்டும் கருத்துக்களையும், புறக்கணித்து, ஒதுக்கிவிட்டால்தான் பூமியில் நிரந்தர அமைதி நிலவும்.

 சி. மகேந்திரன், அரூர்.

நன்றி :- தினமணி


0 comments:

Post a Comment

Kindly post a comment.