Monday, October 26, 2015

வெல்லட்டும் ஜனநாயகம்! -தான்சானியா நாளிதழ்



அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில குறைகள் இருந்தாலும், அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரக் கூட்டங்களில் முடிந்த அளவு அமைதியைக் கடைப்பிடிக்க முயன்றனர். மக்களுக்குத் தீங்கு ஏற்படாத வகையில் நடந்துகொண்ட தலைவர்களைப் பாராட்டுகிறோம்.

இப்போது நடக்கும் தேர்தல் மிக முக்கியமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். மக்கள் தங்கள் வசிக்கும் பகுதிகளில் அமைதியை உறுதிசெய்யும் வகையிலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அமைதியாகச் சென்று வாக்களித்துவிட்டு, அமைதியாக வீடு திரும்ப வேண்டும். அதிகாரிகள் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளுக்கு இணங்க, தெருக்களில் கூட்டம் சேர்ப்பதைத் தவிர்த்தால் தேவையில்லாத குழப்பங்களைத் தவிர்க்க முடியும்.

தேர்தல் நாளில் மட்டுமல்லாமல், இனி வரப்போகும் எல்லா நாட்களிலும் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நிலைத்திருக்கும் வகையில் சட்ட விதிகளைப் பின்பற்றுமாறு அனைத்து தான்சானியர்களையும் கேட்டுக்கொள்கிறோம். தான்சானியாவின் நகரப் பகுதிகளும், கிராமப் பகுதிகளிலும் அமைதி நிலவ, தான்சானியாவின் ஒவ்வொரு குடிமகனும் செயலாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

தெற்கு ஆப்பிரிக்க மேம்பாட்டுக் கழகம் (எஸ்.ஏ.டி.சி.) குறிப்பிட்டிருப்பதைப் போல், தேர்தல்களை அமைதியான முறையில் நடத்துவதற்குப் பெயர் பெற்றது தான்சானியா. 1995-ல் தான்சானியாவில் பல கட்சிகள் பங்கேற்ற ஜனநாயகபூர்வமான முதல் தேர்தலும் அமைதியாகத்தான் நடைபெற்றது.
இணைய செய்தி இதழ்களும், அச்சு இதழ்களும் தங்கள் பணியைச் செம்மையாகவும், தார்மிக நெறிகளுக்கு உட்பட்டும் செய்வதன் மூலம் அமைதியை உறுதிசெய்ய வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

இத்தேர்தல் தொடர்பாகப் பன்முகப் பணிகளைச் செய்வதன் மூலமும், பாரபட்சமற்ற தகவல்களையும், பலதரப்பட்ட கண்ணோட்டங்களையும் வழங்குவதன் மூலமும், உருவாகிவரும் சவால்களைச் சுட்டிக்காட்டுவதன் மூலமும் தான்சானியா ஊடகங்கள் முக்கியப் பணியாற்ற வேண்டும். தங்கள் தீவிரக் கண்காணிப்பின் மூலம் தேர்தலில் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்கும் அளவுக்கு ஊடங்களால் தாக்கம் செலுத்த முடியும்.

தங்கள் கண்காணிப்புப் பணியின் மூலம், பொதுமக்களின் நலனைப் பாதுகாப்பதுடன், ஜனநாயகத்தைப் பலப்படுத்துதல் மற்றும் மக்கள் மேம்பாடு எனும் இரட்டைக் குறிக்கோளை அடைவதற்கு ஊடகங்களால் உதவ முடியும்.

சுதந்திரமான மற்றும் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றம் நடைபெறாமல், தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது எனும் தீர்க்கமான முடிவை மக்களால் எடுக்க முடியாது. எனவே, இன்றைய தேர்தலையொட்டி ஊடகங்கள் நெறிசார்ந்த பணிகளைச் செய்ய வேண்டும் என்றும், தேர்தல் முடிவுகள் தொடர்பான செய்திகளைச் சிறப்பாக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

(ஞாயிறு அன்று தான்சானியாவில் நடந்த தேர்தலையொட்டி, 
அந்நாட்டின் ‘டெய்லி நியூஸ்’ நாளிதழில்
 வெளியான தலையங்கம்.)

தமிழில்: வெ. சந்திரமோகன்

நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.