Flash news:

  • உலகம்
  • தமிழகச்செய்திகள்
  • கட்டுரைகள்
  • சிறப்பு செய்திகள்
  • அனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.

Sunday, October 25, 2015

கூகுள் வேலையைத் துறந்து ஏழைகளுக்கு உதவும் வல்லுநர்!

பெங்களூருவில் வாழும் குடிசைப்பகுதி மக்களுடன் அதுல் சட்டிஜா


பெங்களூருவில் வாழும் குடிசைப்பகுதி மக்களுடன் அதுல் சட்டிஜா

சொகுசாக இருந்த தனது கூகுள் வேலையை விட்டுவிட்டு, சமூகப் பணியில் தன்னை இணைத்துக்கொண்ட அதுல் சட்டிஜா என்பவரின் நிறுவனம், வறுமையிலும் அறியாமையிலும் வாடுபவர்களுக்குக் கல்வியையும் வாழ்க்கை நெறிகளையும் கற்பித்து வருகிறது.

யார் அந்த அதுல் சட்டிஜா?

அதுல் சட்டிஜா, தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் பி.டெக். படிப்பையும், இந்திய வணிக பள்ளியில் எம்.பி.ஏ. படிப்பையும் முடித்தவர். கூகுள் நிறுவனத்தில் இந்திய வணிக வளர்ச்சித் தலைவராகவும், ஜப்பான் மற்றும் ஆசிய பசிபிக் பிராந்திய மொபைல் வணிகத்தின் தலைவராகவும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அதுலுக்கு 39 வயது. அவருக்கு ஒரு லட்சியம் இருந்தது. 40 வயதைத் தொடுவதற்கு முன்னால், தன்னுடைய விருப்பப் பாதையில் பயணம் செய்யவேண்டும் என்பதுதான் அது. தன் லட்சியப் பயணம் குறித்து அவரே சொல்கிறார்.

"முழு நேர சமூகப் பணியாளராக வேண்டும் என்பது என்னுடைய நெடுநாள் கனவாக இருந்தது. 2006 - 2010 வரை கூகுளில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது லாப நோக்கமில்லாத 'வறுமையை ஒழிப்போம்' என்னும் திட்டத்தில் இணைந்தேன். அங்கே ஒரு தன்னார்வலராக மட்டுமே இருந்தாலும், வறுமை ஒழிப்பு என்னுடைய மனதில் ஆழமாகப் பதிந்தது.

வேலை காரணமாக கூகுள், ஜப்பான் அல்லது அமெரிக்காவுக்கு என்னை இடமாற்றம் செய்ய விரும்பியது. இந்தியாவிலேயே இருக்க ஆசைப்பட்ட நான், இங்கேயே ஒரு புதிய வேலையைத் தேடிக்கொண்டேன். என்னுடைய 9 - 5 மணி நேர அன்றாட வேலையைக் காட்டிலும், வறுமை சார்ந்த பிரச்சனைகளான தண்ணீர், சுகாதாரம், கல்வி, திறமை ஊக்குவிப்பு, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்த ஆசைப்பட்டேன்.

சாஃப்ட்பேங்க் நிறுவனத்தைச் சார்ந்த 'இன்மொபி' மொபைல் விளம்பர நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். கூகுளோடு ஒப்பிடும்போது, இங்கே மிகவும் குறைவான சம்பளம். யோசிக்காமல், அங்கேயே சர்வதேச தலைமை வருமான அதிகாரியாகச் சேர்ந்தேன். உலகளாவிய விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் வணிக வளர்ச்சியைப் பார்த்துக்கொண்டேன். அந்த வேலை, என்னுடைய முழு நேர வறுமை ஒழிப்புப்பணி மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தியது.

ஒவ்வொரு மனிதனும் வறுமையின் பிடியில் சிக்காமல், சுயமரியாதையான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும். ஆனால் உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் அதை எப்படி வெளிக்கொணர்வது என்று யோசித்தேன். மொத்தத்தில் சமூகத்தின் குறைபாடுகளை இடித்துரைக்கும் மனிதனாக மாற ஆசைப்பட்டேன். ஆனால் எப்படி சமூகத்தை இடித்துரைப்பவராக மாறி ஒட்டுமொத்த இயந்திரத்தையும், வறுமையை எதிர்ப்பது? கேள்விகள் தொடர்ந்து என்னுள்ளே எழுந்தன.

கனவு நனவானது

நல்லது செய்யக்கோரி, சமூகத்தை இடித்துரைக்கும் நிறுவனம் என்று பொருள் கொள்ளக் கூடிய,‘The Nudge Foundation’ என்னும் நிறுவனத்தைத் தொடங்கினேன். நிறுவனத்தைத் தொடங்கிவிட்டாலும், முதல் இரண்டு வருடங்கள் இன்மொபியிலேயே இருக்க நேர்ந்தது. சொந்த சேமிப்பை எடுத்து, சுமார் 2 லட்சம் டாலர்களை நிறுவனத்தில் முதலீடாகப் போட்டேன்.

மக்களுக்கு வெறுமனே உதவிகள் அளிப்பது மட்டும் போதாது என்று தோன்றியது. வறுமை ஒழிப்புக்குப் புதுமையான முறையைக் கையாள ஆசைப்பட்டேன்.

வறுமையின் பிடியில் கிடக்கும் மக்களுக்கு அனைத்து வகையிலும் உதவ, கல்வியும் பொருளாதாரமும் முக்கியம். இயலாதவர்களுக்கு வாழ்நாள் முழுக்க ஆதரவளிக்கும் வகையில் குருகுலக் கல்வி முறை தொடங்கப்பட்டது.

இந்தியாவில், ஒவ்வொரு மாதமும் ஒரு மில்லியன் தொழிலாளர்கள் உருவாகிறார்கள். அவர்கள் அனைவருமே ஏழ்மையான குடும்பத்திலிருந்து வருபவர்களாக இருக்கிறார்கள். இதனால் இந்தியாவின் மிகப்பெரிய மனிதவளம் ஆதாரம் இல்லாமலே இருக்கிறது. இந்தியா திறமையான இந்தியர்களை உருவாக்க நினைக்கிறது.

ஆனால் வலிமையான அடித்தளம் இல்லாமல் அது உருவாகாது. வேகமாக வளர்ந்துகொண்டு வரும் நமது பொருளாதாரம், வறுமையில் வாழும் மக்களுக்கு, சிறப்பான வாய்ப்பை அளிக்கும் வகையில் இருக்க வேண்டும். நிலையான வேலைவாய்ப்பின் மூலமே, அவர்கள் வறுமையிலிருந்து வெளியே வரமுடியும்.

இதைக் கருத்தில்கொண்டு 2020-ல் ஒரு மில்லியன் மக்களை வறுமையில் இருந்து ஒழிக்க உறுதிமொழி எடுத்தோம். இந்த முயற்சிக்காக 4 கோடி ரூபாயைத் திரட்டத் தொடங்கினோம்.

நீலகேணியின் ஆதரவு

எங்களின் குரல், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரிக்குக் கேட்டது. முதல் விதையாக எங்கள் நிறுவனத்துக்கு 2 லட்சம் டாலர்களை நன்கொடையாக அளித்தார். பெங்களூருவில் ஒரு மாநாட்டில் எங்கள் நிறுவனம் குறித்துப் பேசியவர், "அங்கீகாரம் அளிக்கப்படாத இளைஞர்களுக்கு, நட்ஜ் நிறுவனம், இரண்டாவது வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இந்த மாதிரியான செயல்திட்டங்கள்தான் எங்களுக்குத் தேவை" என்று கூறினார். நீலகேணியின் பேச்சைக் கேட்ட இணைய நிறுவனத் தலைவர்களால் எங்களுக்குத் தொடர்ந்து நிதியுதவிகள் வர ஆரம்பித்தன.

ஜி.டபிள்யூ.சி. நிறுவனம் 50,000 டாலர்களும், இன்மொபி 75,000 டாலர்களும், பே - டிஎம் 40,000 டாலர்களும் அளித்தன.

இன்மொபி, பே - டிஎம், ஜியோமி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த வாரிய மற்றும் ஆலோசனை உறுப்பினர்களால், நட்ஜ் நிறுவனம் பல்வேறு தொழில்முனைவோர்களின் உதவியைப் பெற்றது.

ஆகஸ்ட் 15 அன்று சமூகக் காரணத்துக்காக இந்தியாவின் முதல் ஹேக்கத்தானை (பல்வேறு மனிதர்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடி கூட்டு கணினி நிரலாக்கப் பணியில் ஈடுபடுவது) நடத்தினோம்.

சமூக சேவையில் ஹேக்கத்தான்

'ஃப்ரீடம்ஹேக் 2015' என்ற பெயரில் ஹேக்கத்தான் நடத்தப்பட்டது. பரந்துபட்ட தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கப் பயனுள்ளதாக இருந்த ஹேக்கத்தான், பல பிரச்சனைகளை தீர்த்ததோடு, நிதி திரட்டவும் பயன்பட்டது. அது மட்டுமல்லாமல் இந்த நிகழ்வு, ஐடி பொறியாளர்கள் தங்கள் தொழில்நுட்ப அறிவைக் கொண்டு தன்னார்வலர்களாகப் பணியாற்ற உதவியிருக்கிறது" என்றார்.

தமிழில்: க.சே. ரமணி பிரபா தேவி

நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.