Sunday, October 25, 2015

திடீரென குவியும் ரூ.40 ஆயிரம் கோடி திட்டங்களால் ‘தண்ணி இல்லா காடு’ ராமநாதபுரம் வளம் பெறுமா?






தண்ணி இல்லா காடு என அழைக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் அடுத்தடுத்து ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேலான திட்டங்களை அறிவித்து இம்மாவட்ட மக்களை திக்குமுக்காட செய்துள்ளன. இத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேறினால் தங்கள் மாவட்டம் செல்வச் செழிப்போடு தொழில் வளம் மிக்கதாக மாறிவிடும் என பெரும் கனவோடு இம்மாவட்ட மக்கள் காத்திருக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது அடங்கியுள்ள திருவாடானை, பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், ராமநாதபுரம், ராமேசுவரம் ஆகிய வட்டங்கள் அடங்கிய ராமநாதபுரம் சீமை 15-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் பாண்டிய நாட்டு அரசின் கீழ் இருந்துவந்தது. இப்பகுதி கி.பி.1063-ல் சிறிது காலம் சோழநாட்டு மன்னர் ராஜேந்திர சோழனால் ஆட்சி செய்யப்பட்டது. கி.பி.1520-ம் ஆண்டில் பாண்டிய மன்னர்களிடமிருந்து விஜயநகர மன்னர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இப்பகுதிகள் கொண்டுவரப்பட்டு, 200 ஆண்டுகள் அவர்களது ஆளுகைக்கு உட்பட்டிருந்தன. 1892-ல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு ஆங்கி லேயே அரசு மாவட்ட ஆட்சியரை நிர்வாகப் பணிகளுக்காக நியமனம் செய்தது.
ராமநாதபுரம் மாவட்டம் உதயம்
1910-ம் ஆண்டில் மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களின் சில பகுதிகளைச் சேர்த்து ராமநாதபுரம் மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் ‘ராம்நாட்’ என்று அழைக்கப்பட்டு, பின்னர் ராமநாதபுரம் மாவட் டம் எனப் பெயரிடப்பட்டது.
15.3.1985-ம் ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டது. திருப்பத் தூர், காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி ஆகிய வட்டங் களை உள்ளடக்கிய ‘ பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் மாவட்டம்’ தோற்றுவிக்கப்பட்டு பின்னர் சிவகங்கை மாவட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
திருவில்லிபுத்தூர், விருதுநகர், திருச்சுழி, அருப்புக்கோட்டை, சாத்தூர், ராஜபாளையம் ஆகிய வட்டங்களை உள்ளடக்கிய ‘காமராஜர் மாவட்டம்’ எனத் தோற்றுவிக்கப்பட்டு, விருதுநகர் மாவட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
திருவாடானை, பரமக்குடி, கமுதி, முது குளத்தூர், ராமநாதபுரம், ராமேசுவரம் ஆகிய வட்டங்களை உருவாக்கி தற்போதைய ராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. 1.9.1998-ல் திருவாடானை வட்டத்தைச் சேர்ந்த 29 வருவாய் கிராமங்கள் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டத்துடன் இணைக்கப்பட்டன. தற்போது ராமநாதபுரம் வட்டம் ராமநாதபுரம், கீழக்கரை என 2 ஆகப் பிரிக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாக அமைப்பு
வருவாய்க் கோட்டங்கள் 2, வட்டங்கள் 8, உள்வட்டங்கள் 38, வருவாய் கிராமங்கள் 400, ஊராட்சி ஒன்றியம் 11, கிராம ஊராட்சிகள் 429, நகராட்சிகள் 4, பேரூராட்சிகள் 7, நாடாளுமன்ற தொகுதி 1, சட்டப்பேரவை தொகுதிகள் 4, மாவட்ட ஊராட்சி 1. மொத்த மக்கள் தொகை 13 லட்சத்து 53 ஆயிரத்து 445, மாவட்டத்தின் பரப்பளவு 4 ஆயிரத்து 175 சதுர கி.மீ. எப்போதும் வறண்டு காணப்படும் வைகையும், குண்டாறும் இம்மாவட்டத்தின் ஆறுகள். மாவட்டத்தில் பெரிய தொழிற்சாலைகள் 8, சிறு தொழிற்சாலைகள் ஆயிரத்து 500 மற்றும் 4 ஆயிரத்து 500 குறுந்தொழில்கள் உள்ளன.
விவசாயத்துக்கு அடுத்து சிறு தொழில்களாக மின்சார உதிரிபாகங்கள் தயாரித்தல், மாவு, நெல் அரைக்கும் ஆலைகள், ஐஸ்கட்டி தயாரித்தல், மீன்பதனிடும் தொழில்கள், உப்பு உற்பத்தி, பேவர் பிளாக் மற்றும் ஹாலோ பிளாக் தொழில்கள் உள்ளன. இருந்தபோதும் பெரிய தொழில் வளம் இல்லாததால் இங்குள்ள மக்கள் வெளியூர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு தேடிச் செல்லும் நிலை உள்ளது.
உவர்ப்பாக மாறிய நிலத்தடி நீர்
மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடல்நீர் ஊடுருவலால் குடிநீர், விவசாயத்துக்கு நீர் கிடைப்பது தலையாய பிரச்சினையாக உள்ளது. போதிய மின்சார வசதியும் இல்லை. குடிக்கக்கூட நீர் கிடைக்காததால் ‘தண்ணி இல்லா காடு’ என்ற பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. வளர்ந்து வரும் மாவட்டமாக இருந்தாலும், தேசிய திட்டக் குழுவில் இன்னும் பின்தங்கிய மாவட்ட அட்டவணையில் உள்ளது.
கடந்த 1998-ம் ஆண்டு தெற்கு ஆசியாவிலேயே பெரிய திட்டமாக கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் நரிப்பையூரில் கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் மூலம் கடலாடி, முதுகுளத்தூர், கமுதி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இத்திட்டம் உள்ளிட்ட பல குடிநீர் திட்டங்கள் மூலம் மாவட்ட குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை.
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம்
ஒட்டுமொத்த மாவட்டத்தின் குடிநீர் பிரச்சி னையைத் தீர்க்க ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் (காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம்) தீட்டப்பட்டது. 3 மாவட்டங்களுக்கு பயனளிக்கும் இத்திட்டம் ரூ.616 கோடியில் திருச்சி அருகே முத்தரசநல்லூர் காவிரி ஆற்றிலிருந்து ராட்சத ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் கொண்டுவரப்பட்டது. கடந்த 2009-ம் ஆண்டு திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது.
தொடங்கிய 3 ஆண்டுகள் போதிய குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. கூடுதல் குழாய்கள், பழுதடைந்த குழாய்களை மாற்றுதல் போன்ற முறையான பராமரிப்பு இல்லாததால் மாவட்டத்தின் பல நூறு கிராமங்களுக்கு குடிநீர் சென்றடையவில்லை.
வழியில் பல இடங்களில் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இதை போர்க்கால அடிப்படையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கிழக்கு கடற்கரைச் சாலை
கிழக்கு கடற்கரை சாலையானது புதுக் கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் வழி யாக தூத்துக்குடியைச் சென்றடைகிறது. தற்போது இருவழியாக உள்ள இச்சாலையை நான்குவழிச் சாலையாக்க அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் ராமநாதபுரம், சிவ கங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் தொழில் வளங்கள் பெருகும். புதிய தொழிற்சாலைகள் உருவாகும்.
மதுரை - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை 49-ல் மதுரையிலிருந்து பரமக்குடி வரை நான்கு வழிச் சாலையாகவும், பரமக்குடியிலிருந்து தனுஷ் கோடி வரை சாலை விரிவாக்கமும் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணி நிறைவேறி னால் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் தொழில் வளம் பெருக வாய்ப்புள்ளது.
ராமேசுவரம், தேவிபட்டினம், திருப்புல்லாணி, ஏர்வாடி தர்ஹா, ஓரியூர் சர்ச் போன்ற புனித தலங்களும், அரியமான் மற்றும் ஓலைக்குடா, தனுஷ்கோடி கடற்கரைகளும் யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகளைக் கவர்கின்றன. அதனால் சுற்றுலாவை மேம்படுத்த நீர்ச்சறுக்கு விளை யாட்டுகள், படகு சவாரிகள், உள்நாட்டு, வெளி நாட்டு கப்பல் போக்குவரத்தை ராமேசுவரத்தில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மதுரை - ராமேசுவரம் நான்குவழிச் சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை நான்கு வழிச்சாலை, காரைக்குடி - தூத்துக்குடி புதிய ரயில் பாதை போன்ற திட்டங்கள் பயன்பாட்டுக்கு வந்தால் போக்குவரத்து வசதி மேம்படலாம்.
ரூ. 40 ஆயிரம் கோடி திட்டங்கள் அறிவிப்பு
கடந்த மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.47 கோடி மதிப்பில் 73 பேர் சிறு, குறுந் தொழில்கள் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர்.
மேலும் சைமா நிறுவனம் ரூ. 500 கோடியில ஜவுளி உற்பத்தி நிறுவனம் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதுமட்டுமல்லாமல், திருவாடானை வட்டம் உப்பூரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் 800 மெகாவாட் திறன் கொண்ட 2 அனல் மின் உற்பத்தி நிலையம் (1600 மெகாவாட்) அமைக்கப்பட உள்ளது. ரூ. 9600 கோடி மதிப்பில் 912 ஏக்கரில் சூப்பர் கிரிடிக்கல் தொழில்நுட்பத்தில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
கடந்தாண்டு சட்டப்பேரவை கூட்டத்தில் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. கடலாடி அருகே கொண்டுநல்லான்பட்டியில் 3 ஆயிரம் ஏக்கரில் ரூ.24 ஆயிரம் கோடியில் தேசிய அனல்மின் கழகம் (என்டிபிசி நிறுவனம்) அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
கமுதி வட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கரில் 3 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்தை அதானி குழுமம் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக கமுதி அருகே புதுக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு ரூ.5 ஆயிரத்து 40 கோடி மதிப்பில் மின் உற்பத்தி மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்தாண்டு ரூ.1000 கோடி மதிப்பில் தொண்டி அருகே கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை அமைக்க இருப்பதாக அரசு அறிவித்தது. இது அறிவிப்பாகவே உள்ளது.
தற்போது நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட் டத்தில் திருவாடானையில் ரூ.150 கோடியில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கும் மேலான திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், 6 ஆயிரம் பேர் நேரடியாகவும், 10 ஆயிரம் பேருக்கு மேல் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர்.
சிவகங்கை, புதுக்கோட்டை பலனடையும்
இதில் பெரும்பாலான திட்டங்கள் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களை இணைக்கும் வகையில் உள்ளன. இரண்டு மாவட்டங்களும் ராமநாதபுரம் மாவட்டத்தின் அருகிலுள்ள எல்லைகளாக உள்ளதால் இந்த மாவட்டங்களும் தொழில், போக்குவரத்து, சுற்றுலா வசதிகளில் மேம்படும்.
வேறு எந்த மாவட்டத்துக்கும் இல்லாத திடீர் முக்கியத்துவம் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கிடைத்துள்ளது. இதை அறிவிப்போடு நிறுத்தி விடாமல், விரைவாக நிறைவேற்றி தருவது அரசின் கையில்தான் உள்ளது.
கிடப்பில் உள்ள சேதுசமுத்திர திட்டம்
இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கரைக்கு இடையே உள்ள கடல் தூரத்தை குறைக்கவும், இலங்கையை சுற்றி செல்லாமல், இந்திய கடல் எல்லைக்குள் கப்பல் பயணத்தை மேம்படுத்தவும், மன்னார் வளைகுடாவை பாக் விரிகுடாவுடன் இணைத்து ‘சேது சமுத்திர கப்பல் கால்வாய் திட்டம்’ உருவாக்கப்பட்டது. இந்தியா விடுதலைக்கு முன் 1860 முதல் 1922 வரை ராமேசுவரம் தீவு வழியாக கால்வாய் உருவாக்க 9 திட்டங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன.
விடுதலைக்குப்பின் 1956-ல் இத்திட்டம் முன்வைக்கப்பட்டது. அதிலிருந்து தொடர்ந்து 1997-ல் இத்திட்டத்தை நிறைவேற்றும் நிறுவனமாக தூத்துக்குடி துறைமுகம் அறிவிக்கப்பட்டது. பல்வேறு அறிக்கைகள், சுற்றுச்சூழல் சான்றுகளுக்கு பின், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ரூ.2 ஆயிரத்து 233 கோடியில் நிறைவேற்ற 2004-ல் இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியது.
அடிக்கல் நாட்டி, நாகப்பட்டினம், ராமேசுவரம் பகுதிகளில் கால்வாய் வெட்டும் பணிகள் துரிதமாக நடைபெற்றன. அதில் ஆதம்பாலத்தை (ராமர் பாலம்) உடைத்து திட்டத்தை நிறைவேற்றக்கூடாது எனவும், மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் திட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட தென்மாவட்டங்கள் பல்வேறு வகையில் வளர்ச்சி அடைந்திருக்கும்.
காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு
எஸ்.ஜெகதீசன்
(ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர்)

ராமநாதபுரம் மாவட்டம் வளர்ச்சி பெற பல பெரிய திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். இத்திட்டங்களை செயல்படுத்தும்போது வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி ஏற்படும். சென்னையைப் போல் ராமநாதபுரத்துக்கும் கார் தொழிற்சாலை உள்ளிட்ட பிற தொழிற்சாலைகள் வர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2.36 லட்சம் கோடி அந்நிய முதலீடு கிடைப்பதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் தென்மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்துக்கு அதிக முன்னுரிமை அளித்து தொழில்களை கொண்டுவர வேண்டும். மதுரை- ராமேசுவரம் நான்குவழிச் சாலை திட்டத்தை ராமநாதபுரம் வரை நீட்டிக்க முதல்வர் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
ஏ.முஜிபுர் ரஹ்மான், 
(ராமநாதபுரம் இளம்தொழில் முனைவோர் பயிற்சி மைய முன்னாள் தலைவர்)

பின்தங்கிய ராமநாதபுரம் மாவட்டத்தை தொழில் வளப்படுத்த வேண்டும் என்று அரசின் பார்வை பட்டுள்ளதை வரவேற்கிறோம். மாவட்டத்தில் தொழில்கள் தொடங்க நிலங்கள் குறைவான விலையில் கிடைக்கின்றன. இலங்கையில் சுமுகமான நிலை ஏற்பட்டுள்ளதால், வர்த்தகம், வேலைவாய்ப்புக்கு இலங்கை மக்கள் இங்கு வர வாய்ப்புள்ளது. மாவட்டத்தில் குடிநீர், கிழக்கு கடற்கரை சாலை, அகல ரயில் பாதை, நான்குவழிச் சாலை, வழுதூரைச் சுற்றி மின்திட்டங்கள் போன்றவை மாவட்டத்தில் போக்குவரத்து, வர்த்தகத்துக்கு வழிவகுத்துள்ளன. தொழில்களுக்கு மின்சாரம் அவசியம். அதனால் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பெரிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் அறிவிப்போடு நின்றுவிடாமல் வந்துவிடும் என நம்புகிறோம்.
அஸ்மாபாக் அன்வர்தீன், 
(ராமநாதபுரம் மாவட்ட தொழில், வர்த்தக சங்கத் தலைவர்)

மாவட்டத்துக்கு பெரிய மின் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். கொள்கை அளவில் இல்லாமல் நீண்ட கால திட்டங்களாக இருந்தாலும், இவற்றை அறிவித்தபடி செயல்படுத்த வேண்டும். எந்த தொழில் என்றாலும், அதற்கு மின்சாரம் அவசியமானது. இந்த மின் திட்டங்களால் 2 அல்லது 3 ஆண்டுகளில் முழு பயனும் கிடைக்கும். மின்சாரம் கிடைத்தால் அனைத்து தொழில்களும் அபரிமிதமான வளர்ச்சி பெறும். கிழக்கு கடற்கரைச் சாலையை நான்குவழி சாலையாக்கினால் தொழில்வளம் பெறும். ஆங்கிலேயர் காலத்தில் ஆய்வு செய்யப்பட்ட, காரைக்குடி- தூத்துக்குடி ரயில்பாதையை அமைக்க வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.
சோழாந்தூர் பாலகிருஷ்ணன், 
(ஆர்.எஸ்.மங்கலம் பாசன கண்மாய்கள் சங்கத் தலைவர்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பூர் மின் திட்டத்துக்கு விவசாயிகளுக்கு பாதிப்பின்றி நிலங்களை கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள பெரிய அளவிலான மின்சாரத் திட்டங்கள், புதிய தொழிற் திட்டங்கள் வெறும் அறிவிப்போடு நின்றுவிடக் கூடாது. அத்திட்டங்களை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தினால் ராமநாதபுரம் மாவட்டம் பல்வேறு வகைகளில் வளர்ச்சி அடையும். மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும். தமிழகத்தின் 2-வது பெரிய கண்மாயான ஆர்.எஸ். மங்கலம் கண்மாயை ஆழப்படுத்தி, அணையைக் கட்டி இம்மாவட்டத்தில் விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.