Wednesday, October 28, 2015

தலைமுறைகளைத் தாண்டிய கம்பீரம் !


- வே.முத்துக்குமார் - 

1936 ஆம் வருடம். ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சுதந்திர போராட்டம் உச்சத்திலிருந்த காலகட்டமது. நெல்லை நகரத்து வீதிகளில் காங்கிரஸ் தியாகி எம்.ஆர்.சுப்பிரமணியம் கதராடை அணிந்து, தலையில் காந்தி குல்லாவுடன், தியாகி பகத்சிங் பாட்ஜ்ஜை மார்பில் குத்திக் கொண்டு, தேசப்பக்தர்களுடன் கம்பீரமாகவும் உணர்ச்சி பெருக்கோடும் பாரதியின் தேச விடுதலைப் பாடல்களை பாடிக் கொண்டே செல்ல, அந்தப் பாடல்களால் ஈர்க்கப்பட்டு அந்தக் கூட்டத்தினரின் பின்னாடியே சென்றிருக்கிறான் அந்தப் பதினோரு வயதுச் சிறுவன். இக்காலகட்டத்தில் அச்சிறுவனின் வீட்டிற்கு அருகிலிருந்த நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கூத்த நயினார் பிள்ளையின் வீட்டிற்கு வந்திருந்தார் மகாத்மா காந்தி. அவரைச் சுற்றிக் கூடியிருந்த மக்கள் அவரது கைகளை பற்றிக் கொள்வதையும், சிலர் பரவசப்பட்டு அக்கைகளை கண்களில் ஒற்றிக் கொள்வதையும் மிகுந்த கூட்ட நெரிசல்களுக்கிடையில் பார்த்துக் கொண்டிருந்த அச்சிறுவனின் மனதில் இனம்புரியாத கிளர்ச்சி ஏற்பட்டது. இதன் நீட்சியாக, திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சார்ந்த ஆறுமுக நாவலர் நூலகத்திற்குச் சென்று காந்திஜியின் வாழ்க்கை வரலாற்று நூலை எடுத்துப் படித்திருக்கிறான்.

அவனுடைய ஆறாவது வயதில் நிகழ்ந்து போன தந்தையின் மரணமும், அவ்விழப்பின் காயம் ஆறுவதற்கு முன்னால், அவனது ஏழாவது வயதில் நிகழ்ந்த தாயின் மரணமும் அவனுள் தீராத தனிமைத் துயரமாக விரிந்திருக்க, அந்த இடைவெளியை போக்குவதற்கு நெல்லை நகரத்தைச் சுற்றியிருந்த நூலகங்களை நாடிச் சென்று, அவன் தேடிப் பிடித்து வாசித்த தேச விடுதலை சார்ந்த நூல்களும், பாரதியின் பாடல்களும், காந்தியின் வருகையும் அவனை ஒரு தேசிய உணர்வுள்ள சிறுவனாக உருமாற வைத்தன. 

ஒரு பொங்கல் பண்டிகை சமயத்தில் கடைவீதிக்குச் சென்றிருந்த போது, 'சுதந்திர சங்கு' என்கிற இதழின் பொங்கல் மலரொன்றை அவன் கண்டிருக்கிறான். 'மணிக்கொடி' எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவினுடைய நண்பர் சங்கு சுப்பிரமணியம் ஆசிரியராக இருந்து, சென்னையிலிருந்து அவ்விதழை நடத்தி வந்தார்.

'பிச்சை தா என்று கெஞ்சும் குரலும்,
பிடி இந்தா என்று நீளும் கரமும்,
இச் செகத்தினில் இல்லாத நாளே,
இன்பநாள் என்று கூறிடுவோமே!'


என்று அவ்விதழில் சங்கு சுப்பிரமணியம் எழுதியிருந்த கவிதை அவனுள் ஆழ்ந்த யோசனையையும், ஒருவித சமூகத் தேடலையும் ஏற்படுத்தியது. இச்சூழலில், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு தீவிரமடைந்திருந்த தேசிய விடுதலை இயக்கப் போராட்டங்கள் அவனை மிகவும் ஈர்க்கத் தொடங்கின. அவனது உள்ளத்தில் எழுந்த அரசியல், சமுதாயம், பண்பாடு பற்றிய கேள்விகளுக்கு, பாரதியின் பாடல்கள் கலங்கரை வெளிச்சமாக வழிகாட்ட, அதையொட்டியே வாழ்வு குறித்த தேடல்களும், சிந்தனைகளும், செயல்பாடுகளும் அமையத் தொடங்கின.

பாரதியின் நூல்களைப் பயின்றதைத் தொடர்ந்து, நூலகங்களில் 'சுதேசமித்திரன், தினமணி, விடுதலை, தி இந்து, மெட்ராஸ் மெயில்' முதலிய பல்வேறு நாளேடுகளையும், 'ஆனந்த விகடன், ஆனந்த போதினி, பிரசண்ட விகடன், செந்தமிழ்ச்செல்வி' ஆகிய வார, மாத, மாதமிருமுறை இதழ்களையும் அவன் வாசிக்கத் தொடங்கினான். மகாகவி பாரதி குறிப்பிட்டிருக்கின்ற வேடிக்கை மனிதனைப் போல நாமும் வீழ்ந்து விடக்கூடாது என்கிற எண்ணம் அவனிடத்தில் மேலோங்கி நிற்க, சுதந்திரமான ஒரு புதிய பாதையில் தன் வாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென அவன் கனவு காணத் தொடங்கினான். அக்கனவே, அவனை பிந்தைய காலங்களில் ஒர் கதாசிரியராகவும், கவிஞராகவும், நாடகாசிரியராகவும், சினிமா விமர்சகராகவும், இலக்கிய விமர்சகராகவும், பத்திரிகையாளராகவும், திறனாய்வாளராகவும், இலக்கிய செயற்பாட்டாளராகவும், இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒர் தலைசிறந்த மனிதராகவும்  மிளிர வைத்தது. இலக்கியம் என்பது யதார்த்த வாழ்க்கையிலிருந்து எழுகிறது. அந்த யதார்த்த வாழ்க்கை சமுதாயத்தினால் சமைக்கப் பெறுகிறது. சமுதாயம் இல்லாமல் தனி மனிதன் இல்லை. ஆகவே இலக்கியம் என்பது தனி மனிதனை ஊற்றுக் கண்ணாக கொண்டு பிறந்தாலும், கங்கையைப் போல், காவிரியைப் போல், பொருநையைப் போல் சமுதாயத்தின் சொத்தாகும் என்று தன்னுடைய இலக்கிய வாழ்வின் ஆரம்பக்காலம் முதலே சொல்லி வந்த தி.க.சி, மார்ச் 30,1925 ஆம் ஆண்டு கணபதியப்பன் - பர்வதத்தம்மாள் தம்பதியருக்கு மகனாக, நெல்லை மாவட்டம் சீவலப்பேரி கிராமத்தில் பிறந்தார். அந்தக் காலத்திய வழிவகைப்படி தாத்தா சிவசங்கரனுடைய பெயரே பேரனுக்கும் விடப்பட்டது. தாத்தாவுக்கு மூன்று தாரங்கள். முதல் மனைவி தெய்வானைக்கு பிறந்த மூத்த மகன் கணபதியின் தலைமகனாக திகழ்ந்தவர் தி.க.சி. அவரது குடும்பம் பிழைப்பிற்காக கிராமத்திலிருந்து நெல்லை நகரத்திற்கு நகர்ந்தது. தாத்தாவுக்கு சம்பந்தம் பிள்ளை தேங்காய் மண்டியில் வேலை. தாத்தாவின் நடத்தையையும், நாணயத்தையும் பார்த்த சம்பந்தம் பிள்ளை, தேங்காய் மண்டியை தாத்தாவுக்கு சொந்தமாக விட்டுக் கொடுத்து விட்டு ஒய்வு பெற்று விட்டார். இதன் மூலம் வருமானமும், வசதியும் பெருக நெல்லை நகரத்தின் முக்கிய மனிதராகவும், நேர்மையாளராகவும் தாத்தா அடையாளம் காணப்பட்டார். இதன் தொடர்ச்சியாக நெல்லையப்பர் ஆலய அறங்காவலர், நீதிமன்ற நடுவர் குழு உறுப்பினர் ஆகிய பதவிகள் அவரைத் தேடி வந்தன.

1941 ஆம் ஆண்டில் நெல்லை இந்துக் கல்லூரியில் தி.க.சி அடியெடுத்து வைத்த போது, பாரதிதாசன், வ.ரா ஆகியோரது படைப்புகளுடன் அவருக்கு பரிச்சயம் ஏற்பட்டது. வ.ரா.வினுடைய படைப்புகளான 'மழையும், புயலும், நடைச்சித்திரங்கள், சுந்தரி, கோதை தீவு, தமிழ்ப் பெரியார்கள்' ஆகிய நூல்களை வாசித்த பிறகு, 'தமிழும், தமிழ் மக்களும், தமிழ்நாடும் எல்லாவகையிலும் மறுமலர்ச்சி பெற வேண்டும்; பாரதி பாதையில் தமிழகத்தில் ஒரு புதுயுகத்தைக் காண வேண்டும்' எனும் சிந்தனையின் வரி வடிவங்களே வ.ரா.வின் எழுத்துக்கள் என்கிற விமர்சன நோக்கு அவருள் எழுந்திருந்தது. அதே போல், தன்மானம், பகுத்தறிவு, தமிழ்-தமிழர்-தமிழ்நாடு மீது பற்று, உலகம் தழுவிய மனித நேயம், புது உலகம் காண விழையும் சமதர்ம நெஞ்சம், அடிமைத்தனத்தையும், மூடத்தனத்தையும் எங்கு கண்டாலும் உடைத்தெறிய முனையும் புரட்சி உள்ளம்- இவற்றையெல்லாம் உருவகப்படுத்தும் ஒரு தலைசிறந்த கவிஞன் - பாரதியின் மெய்யான சீடன்- பாரதிதாசன் என்றொருவர் வாழ்கிறார் என்பதை தி.க.சி.க்கு அடையாளம் காட்டியவர்கள் மூவர். அதில் முதல் இருவர் நெல்லை இந்துக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர்கள் கு,அருணாசலக் கவுண்டர் மற்றும் ஆ.முத்துசிவன். மூன்றாமானவர், பின்னாட்களில் தி.க.சி தனது இலக்கிய வழிகாட்டியாகவும், குருநாதராகவும் அடையாளம் கண்டுகொண்ட வல்லிக்கண்ணன்.

திருமதி.குஞ்சிதம் குருசாமி வெளியிட்ட 'பாரதிதாசன் பாடல்கள்' முதற்தொகுப்பில் இடம்பெற்றிருந்த 'புரட்சிக்கவி, சஞ்சீவிபர்வதத்தின் சாரல்' உள்ளிட்ட எழுச்சிமிக்க கவிதைகளை பேராசிரியர்கள் கு,அருணாசலக் கவுண்டரும், ஆ.முத்துசிவனும் வகுப்பில் மாணவர்களிடையே பாடிக் காண்பிக்க, அக்கவிதைகளில் சொக்கித் திளைத்ததோடு கவிதை எழுதுகிற ஆர்வமும் அவருள் தீரா ஆவலாக எழுந்தது. அப்புத்தகத்தை அவர் முழுமையாக வாசிக்க முற்பட்டார் ; அப்போது அந்நூல் அவர் கைவசப்படவில்லை. 

இதே காலகட்டத்தில், பொதுவுடைமை கட்சி தலைமையில் இயங்கி வந்த அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் வெளிக்கொண்டு வந்த 'ஸ்டூடண்ட்' என்கிற ஆங்கில இதழையும், தடை செய்யப்பட்டிருந்த மார்க்சிம் கார்க்கியின் 'தாய்' நாவலையும் கல்லூரி நூலகத்திலிருந்து எடுத்து வாசித்தார். 'தாய்' நாவலைப் படித்து உலகெங்கும் கோடிக்கணக்கான வாசகர்கள் பொதுவுடைமைவாதிகளாகி விட்டனர் என அமெரிக்க எழுத்தாளர் ஹோவார்ட் ஃபாஸ்ட் குறிப்பிட்டிருந்தது, தி.க.சி.யை வியப்பில் ஆழ்த்த, கல்லூரிப் பருவக் காலத்திலேயே இடதுசாரி வாலிபர் அமைப்போடும், மாணவர் அமைப்போடும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இதற்கு காரணமாக விளங்கியவர் சிந்துபூந்துறை சண்முகம் அண்ணாச்சி. 1941ஆம் ஆண்டு நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்து சிறை சென்ற அவர், அங்கு பொதுவுடைமைத் தத்துவங்களைப் பயின்று, சிறையிலிருந்து வெளிவந்த பின்பு கம்யூனிஸ்ட் தோழராக உருமாறித் தொண்டாற்றத் தொடங்கினார். கட்சியின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக தமது சொந்த செலவிலேயே சோவியத் நூல்களை மொழிபெயர்த்து வெளியிட்டார். நெல்லை மாவட்ட 'ஜனசக்தி' பத்திரிகையின் முகவராக செயல்பட்ட அவர், தான் சார்ந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை விளக்க வகுப்புகளையும் நடத்தினார். 'ஜனசக்தி' பத்திரிகையையும், அதன் பிரசுரங்களையும் ஆயுதமாகக் கொண்டு, நெல்லையில் பல இளைஞர்களை கம்யூனிஸ்ட் தோழர்களாக்கிய பெருமை சண்முகம் அண்ணாச்சிக்கு உண்டு. நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையிலிருந்த அவரது வீடு அரசியல் நூல்களை உள்ளடக்கிய சிறந்த நூலகமாக விளங்கியதால், அந்நூலகத்தை நன்றாக பயன்படுத்திக் கொண்டார் தி.க.சி.

இதே சமயத்தில், நெல்லை நகரத்தைச் சேர்ந்த நண்பர்களுடன் இணைந்து 'நெல்லை வாலிபர் சங்கம்' என்கிற அமைப்பொன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார் தி.க.சி. இச்சங்கத்தை தொடக்கத்தில் விளையாட்டுத் தனமாக ஆரம்பித்தாலும், பின்தொடர்ந்த நாட்களில் பேச்சுக்கலையில் பயிற்சி பெறுவதற்கும், எழுத்துக்கலையில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கும், கலை, இலக்கியம் குறித்து விவாதிப்பதற்கும் அவர் பயன்படுத்திக் கொண்டார். இச்சங்கத்தின் சார்பாக 'இளந்தமிழன்' என்கிற கையெழுத்துப் பத்திரிகையொன்ற அவர் நடத்த தீர்மானித்தார். அப்பத்திரிகைக்கு யாரை ஆசிரியராக இருக்கச் செய்வது என நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த சமயத்தில், நண்பரொருவர் வல்லிக்கண்ணனைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.1941 ஜுன் மாதம் தான் பார்த்து வந்த அரசு வேளாண்மைத்துறை செயல் விளக்க அலுவலர் பணிமனை எழுத்தர் வேலையை ராஜினாமா செய்து விட்டு, முழுநேர எழுத்தாளராகும் பொருட்டு நெல்லை நகரத்திற்கு தன் குடும்பத்தினருடன் குடிவந்திருந்தார் வல்லிக்கண்ணன். 'இதய ஒலி' என்கிற கையெழுத்து பத்திரிகையை அப்பொழுது அவர் நடத்தி வந்தார். அவரை பார்க்க நண்பருடன் சென்றார் தி.க.சி. 'சாந்தி நிலையம்' என்கிற அச்சிறிய வீட்டின் ஏணிப்படி வழியாக ஏறிச்சென்று மாடியில் புத்தகக்குவியலின் மத்தியில் படித்துக் கொண்டிருந்த வல்லிக்கண்ணனைப் பார்த்த போது, ஒரு புதிய உலகத்திற்குள் நுழைந்த பரவசம் தி.க.சி.யை தொற்றிக் கொண்டது. அந்த அறையிலிருந்த சிறிய பரணில் அறுபதுக்கும் மேற்பட்ட தமிழ், ஆங்கில, உலக இலக்கிய நூல்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதில் தி.க.சி கண்டெடுத்து வாசித்த முதல் நூல் 'பாரதிதாசன் பாடல்கள்' ஆகும். சில மணிநேர உரையாடலுக்குப் பிறகு, 'இளந்தமிழன்' கையெழுத்து பத்திரிகைக்கு ஆசிரியராக இருக்கச் சம்மதித்தார் வ.க. சங்க நண்பர்களின் எழுத்துப் பயிற்சிக்கு வ.க.வை வழிகாட்டியாக்கும் பொருட்டு இந்த முடிவை தி.க.சி மேற்கொண்டார். 

'மணிக்கொடி' இதழாசிரியர்களில் ஒருவரான வ.ரா.வின் நடைச்சித்திரங்கள் மீது கொண்ட ஈர்ப்பால், அதே பாணியில் நிறைய நடைச்சித்திரங்களை எழுதினார் தி.க.சி. தன் வீட்டில் பணியாற்றிய மாடசாமி என்கிற வண்டிக்காரர் தனது அன்றாட குடும்ப அவலங்களை தி.க.சி.யிடம் சொல்லி புலம்ப, அதை அப்படியே ஒரு நடைச்சித்திரமாக எழுதி, 'வண்டிக்காரன்' எனத் தலைப்பிட்டு, வ.க.விடம் கொண்டு கொடுத்திருக்கிறார். அதனை வாசித்து பார்த்து வாங்கி வைத்துக் கொண்டார் வ.க. சில நாட்கள் கழித்து, அக்கதையினை நாரண துரைக்கண்ணனை ஆசிரியராகக் கொண்டு செயல்பட்டு வந்த 'பிரசண்ட விகடனி'ல் பிரசுரிக்க செய்து. தி.க.சி.யின் எழுத்துலக கணக்கை முதன்முதலாக துவக்கி வைத்தார் வ.க.

1941 முதல் 1943 வரையில் கல்லூரிப்படிப்பை மேற்கொண்டிருந்த தி.க.சி.க்கு ஆகஸ்ட் 22,1942 அன்று திருமணமானது. தன் அப்பாவினுடைய அக்காள் ராமலட்சுமி அம்மாளினுடைய மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். அப்போது இருவரது வயதும் 17 தான். திருமணத்துக்குப் பிறகு சில குடும்பப் பொறுப்புகளும், பொருளாதார நெருக்கடியும் ஏற்பட, அதனால் கல்லூரிப் படிப்பை அவரால் தொடர் முடியாமற் போக, வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது கோவையில் 'சினிமா உலகம்' இதழின் ஆசிரியராக இருந்த வல்லிக்கண்ணனின் சகோதரர் ரா.சு.கோமதிநாயகம், மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் ஆசிரியராக இருந்த 'சண்டமாருதம்' இதழுக்கு உதவி ஆசிரியர் தேவைப்படுவதாக சொல்ல, கோவைக்கு பயணமானார் தி.க.சி. ஆனால் அந்த வேலை அவருக்கு கிடைக்காமல் வேறொருவருக்கு கிடைக்கப் பெற்றது. அவர் கவிஞர் கண்ணதாசன். 

1944 ஆம் ஆண்டில் கு.ப.ரா.வை ஆசிரியராக கொண்டு திருச்சி - துறையூரிலிருந்து வெளிவந்த 'கிராம ஊழியன்' இதழில் தி.க.சி.யினுடைய கவிதைகள் பிரசுரமாயின. இதில் அவரின் 'உலவும் கவிதை' என்கிற கவிதையை விரும்பிப் பிரசுரித்தார் கு.ப.ரா. இவ்விதழானது வறுமையில் வாடிக் கொண்டிருந்த கு.ப.ரா. மற்றும் அவரது குடும்பத்தாரின் பொருளாதார சிக்கலைத் தீர்க்கும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவ்விதழ் ஆரம்பிக்கப்பட்ட சில மாதங்களிலேயே கு.ப.ரா காலமாகி விட, 'கிராம ஊழியன்' இதழாசிரியராக வ.க. பொறுப்பேற்றுக் கொண்டார். 1946 ஏப்ரல் 'கிராம ஊழியன்' இதழில் 'லெனிமும், இலக்கியமும்' என்கிற  தி.க.சி.யின் முதல் மொழிபெயர்ப்பு கட்டுரை வெளியானது.

இதற்கிடையில் 1945ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் தனது மனைவியினுடைய சித்தப்பா மூலமாக தாம்கோஸ் வங்கியில் காசாளராக தி.க.சி.க்கு வேலை கிடைத்தது. வங்கியில் பணியாற்றிக் கொண்டே, கிராம ஊழியனினுக்கு கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், ஒரங்க நாடகங்கள், சினிமா விமர்சனங்கள் ஆகியவற்றை அவர் எழுதி வந்தார். ஜெமினியின் 'மங்கம்மா சபதம்' மற்றும் 'சந்திரலேகா' ஆகிய திரைப்படங்கள் குறித்த தனது சினிமா விமர்சனத்தை சற்று காரசாரமான வார்த்தைகளில் தி.க.சி. சுட்டிக்காட்ட, அதன் விளைவாக கிராம ஊழியன் இதழுக்கு அளித்து வந்த விளம்பரத்தை நிறுத்திவிட்டிருக்கிறது ஜெமினி நிர்வாகம். இதைப் பற்றி சற்றும் கண்டுகொள்ளாமல் 'கிராம ஊழியன்' செயல்பட, தி.க.சி தொடர்ந்து தனது படைப்புகளை அதில் படைத்து வந்தார்.

1945 முதல் நெல்லையில் பேராசிரியர் நா.வானமாமலையினுடனான அரசியல்- இலக்கியத் தொடர்பும், 1947 இல் நிகழ்ந்த எட்டயபுரம் பாரதி மணிமண்டபத் திறப்பு விழாவுக்குப் பிறகான தோழர் ஜீவாவின் தொடர்பும், தி.க.சி.யை ஒரு முற்போக்கு எழுத்தாளனாக, மார்க்சிய படைப்பாளியாக மாற்றின. ‘கிராம ஊழியன்' இதழில்  வெளியான படைப்புகளைத் தொடர்ந்து, கிருஷ்ண சீனிவாசன் நடத்திய 'அஜந்தா, கலாமோகினி, சண்டமாருதம், சினிமா உலகம், புதுமை இலக்கியம், இந்துஸ்தான், பாப்பா' ஆகிய இதழ்களிலும் அவரது படைப்புகள் வெளிவரத் தொடங்கின.

அரசியல் கொள்கை மாறுபாடுகளுக்காக தலைமறைவாக உள்ள கம்யூனிஸ்டுகளுக்கு தங்க இடமோ, குடிக்கத் தண்ணீரோ, பணமோ கொடுத்தால் 3 மாதக் கடுங்காவலும், 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்ற பாசிஸ அவசரச் சட்டம் அரங்கேறிய 1948 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஒரு தொண்டனாக கட்சியில் தன்னை முன்னிறுத்திக் கொண்டு பணியாற்றியதோடு, கட்சியின் மூத்த தலைவர்கள் கே.பாலதண்டாயுதம், பி.மாணிக்கம் ஆகியோர் தலைமையில் நெல்லையில் அரசியல் பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்பையும் அந்த இளவயதிலேயே அவர் பெற்றிருந்திருக்கிறார்.

வங்கிப் பணியில் சேர்ந்த நாள் முதலே வங்கிப் பணியாளர் சங்கம் கட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டார். அப்போது அவரது மாதச் சம்பளம் முப்பது ரூபாய் ; பஞ்சப்படி ஏழரை ரூபாய். ஒரு பக்கம் கட்சிப் பணி, இன்னொரு பக்கம் வங்கிப் பணி, கலை, இலக்கிய வளர்ச்சிக்கென 'கலைஞர் கழக'க் காரியதரிசிப் பணி, எழுத்துப் பணி என இடைவிடாமல் இக்காலகிரமத்திலேயே தி.க.சி இயங்கி வந்தார். தி.க.சி.யை 'கம்யூனிஸ்ட்' என அடையாளம் கண்டுகொண்ட வங்கி நிர்வாகம், 1948 நவம்பர் மாதம் அவரை சென்னைக்கு மாற்றி உத்தரவிட்டது. சென்னையில் டிராம் வண்டி ஒடிக்கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது சென்னையில் 'ஹனுமான்' வார இதழின் பொறுப்பாசிரியராக வ.க.வும், அவரது அண்ணன் ரா.சு.கோமதிநாயகம் பி.எஸ்.செட்டியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த 'சினிமா உலகம்' இதழின் துணையாசிரியராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தனர். சில மாதங்கள் அவர்களது அறையில் தி.க.சி. தங்கி இருந்தார். பின்னர் 38, தங்கசாலை தெருவில் ஒர் சிறிய அறையை வாடகைக்குப் பிடித்து அங்கு குடிபெயர்ந்தார்.

1950 ஆம் ஆண்டில் தமிழ்ப் புத்தகாலய அதிபர் கண.முத்தையா மூலமாக தி.க.சி.க்கு ஒரு மகத்தான வாய்ப்பு கிட்டியது. அவரது அறிவுறுத்தலின் பேரில், மார்க்சிம் கட்டுரைகளையும், சோவியத், சீன நாவல்களையும் அவர் மொழிபெயர்த்தார். கட்சியும், கட்சிப் பத்திரிகையான 'ஜனசக்தி'யும் தடை செய்யப்பட்டிருந்த வேளையிலே, தி.க.சி.யினுடைய அறையில் கவிஞர் தமிழ் ஒளி தலைமறைவாக தங்கி இருந்திருக்கிறார். இக்காலகட்டத்தில் பொதுவுடைமை இயக்க ஏடுகளான 'முன்னணி, போரணி, ஜனயுகம், புதுமை இலக்கியம்' ஆகியவற்றின் ஆசிரியர் குழுவில் தமிழ் ஒளியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பையும் அவர் பெற்றிருந்ததோடு, வ.க. ஆசிரியராக இருந்த 'ஹனுமான்' இதழிலும், கு.அழகிரிசாமி - தொ.மு.சி பொறுப்பாசிரியர்களாக இருந்த 'சக்தி' ஏட்டிலும், சிறுகதை, மொழிபெயர்ப்பு கட்டுரைகள், புத்தக மதிப்புரைகளை எழுதி வந்தார். 1952இல் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீக்கப்பட்ட பிறகு, தேர்தலில் பங்கெடுத்தது அக்கட்சி. ஐக்கிய முன்னணி ஆதரவில் வட சென்னையில் போட்டியிட்டு ஜீவா வெற்றி பெற, அச்சந்தோஷ செய்தியோடு  வங்கி பணியிடை மாற்றமேற்பட்டு மீண்டும் நெல்லைக்கு வந்து சேர்ந்தார் தி.க.சி. மே, 1952 முதல் மே 1962 வரை, தனது வங்கிப் பணியுடன் இயக்கப் பணியாக, அண்ணாச்சி என்றழைக்கப்பட்ட எழுத்தாளர் சிந்துபூந்துறை எஸ்.சண்முகம் அவர்களுடன் இணைந்து 'நெல்லை பப்ளிஷிங் ஹவுஸ்' எனும் பதிப்பகத்தையும் நடத்தி வந்தார் தி.க.சி. இப்பதிப்பகம் மூலம் அரசியல் போதனை நூல்களையும், ரஷ்ய, சீன இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்களையும் அவர்கள் பதிப்பித்து வந்தனர். வ.க., தொ.மு.சி.ரகுநாதன், சிந்துபூந்துறை சண்முகம் அண்ணாச்சி ஆகியோர்களின் மொழிபெயர்ப்புகளை இப்பதிப்பகம் வெளியிட்டது.

இக்காலகட்டத்திலேயே தொ.மு.சி. பதிப்பிப்பாசிரியராகவும், ஆசிரியராகவும் இருந்து வெளிக்கொண்டு வந்த 'சாந்தி' இதழும் (1954-1956) வ.விஜயபாஸ்கரனை ஆசிரியராகக் கொண்டு 'சரஸ்வதி' இதழும் (1955-1962), தூத்துக்குடியிலிருந்து எம்.பி.முருகானந்தத்தின் 'சாந்தி' மாதமிருமுறை இதழும், ஜீவா தோற்றுவித்த 'தாமரை' (1959) இதழும் வெளிவந்தன. இவ்விதழ்கள் அனைத்திற்கும் தன்னுடைய ஸ்திரமான பங்களிப்பை தி.க.சி. தொடர்ந்து செய்து வந்தார்.

'சரஸ்வதி'யிலும், தொ.மு.சி.யின் 'சாந்தி'யிலும், ஜீவாவின் 'தாமரை'யிலும் தொடர்ந்தாற் போன்று சினிமா விமர்சனங்களை எழுதிவந்த தி.க.சி.யை விஜயபாஸ்கரன் ஊக்கப்படுத்த, பேரா.நா.வானமாமலையோ தி.க.சியை 'சினிமா விமர்சனம் எழுதி வீணாகிவிடாதே. அதற்குப் பதிலாக புத்தக விமர்சனம் எழுது' என அறிவுறுத்த, முதற்கட்டமாக மு.வ.வினுடைய எண்பதற்கும் மேற்பட்ட நூல்களை படித்து விட்டு, அந்நூல்கள் குறித்த விமர்சனங்களை 'ஜனசக்தி'யில் தொடராக எழுத தொடங்கினார். அதே போல், பாரதிதாசன் மற்றும் கண்ணதாசனின் கவிதைகள் குறித்து எம்.பி.முருகானந்தத்தின் 'சாந்தி'யில் எழுதினார். 

1961இல் தி.க.சி பணியாற்றி வந்த தாம்கோஸ் வங்கி, மதுரை கருமுத்து தியாகராய செட்டியாரின் 'பாங்க் ஆஃப் மதுரை'யுடன் இணைக்கப்பட்டது. வங்கிச் சங்கப்பணி காரணமாக 1962ஆம் ஆண்டில், வங்கி நிர்வாகம் அவரை பரமக்குடிக்கு மாற்றியது. அங்கு ஆறு மாதகாலம் பணியைத் தொடர, அதனைத் தொடர்ந்து சேலம் - எடப்பாடிக்கு மாற்றியது. அங்கு மூன்று மாத காலம் பணியாற்றிய பிறகு, 1962 மார்ச் மாதம் கொச்சிக்கு மாற்றல் உத்தரவு வந்தது. கொச்சியில் இருந்த காலகட்டத்திலேயே, மணிக்கொடி பரம்பரையைச் சேர்ந்த எழுத்தாளர்களின் சிறுகதைப் படைப்புகளைப் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகளை 'தாமரை'யில் அவரெழுதினார். இக்கட்டுரைகள், தமிழிலக்கிய படைப்பாளிகள், விமர்சகர்கள், பதிப்பாளர்கள் மற்றும் வாசகர்களிடையே பெருத்த வரவேற்பை அவருக்குப் பெற்றுத் தந்தன. 1962-64 ஆண்டுகால கொச்சி வாழ்க்கையை தனது படைப்பாற்றல் வளர்ச்சிக்கு முழுமையாக பயன்படுத்திக் கொண்டார் தி.க.சி.

டிசம்பர் 14,1964இல் தனது பால்யகால நண்பர் தோழர்.ஏ.எஸ்.மூர்த்தியின் பரிந்துரையின் பேரில், சோவியத் செய்திதுறை ஆசிரியர் குழுவில் பணியாற்றும் பொருட்டு தனது வங்கி வேலையை ராஜினாமா செய்து விட்டு சென்னைக்கு பயணமானார் தி.க.சி. இங்கு பணியாற்றிய காலத்திலேயே, 'தாமரை'யின் பொறுப்பாசிரியராக கடமையாற்றும் பேறையும் அவர் பெற்றார். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சோவியத் செய்தித்துறையிலும், மாலை வேளைகளில் ‘தாமரை’யின் பணிகளிலும் அவர் ஈடுபட்டு வந்தார். கட்சித் தலைமை தனக்களித்திருந்த முழு சுதந்திரத்தையும், நம்பிக்கையையும் ஈடுகட்டும் பொருட்டு 1965 முதல் 1972 வரை 'தாமரை'யின் நூறு இதழ்களுக்கு ஆசிரியராக திகழ்ந்து, நசிவு இலக்கியங்களுக்கு எதிரான இயக்கத்தை தோற்றுவித்தார். 'வியட்நாம் போராட்டச் சிறப்பிதழ் , சிறுகதை சிறப்பிதழ், கரிசல் சிறப்பிதழ், மொழிப்பெயர்ப்பு சிறப்பிதழ்' என பல சிறப்பிதழ்களை கொண்டு வந்ததோடு, பல படைப்பாளிகளை அதில் வளர்தெடுத்து உருவாக்கினார். அதே போல், சோவியத் செய்தித்துறையில் தொடர்ந்து 25 ஆண்டுகள் பணிபுரிந்து 1990இல் ஒய்வு பெற்று நெல்லை திரும்பினார். 

இந்தக் கால் நூற்றாண்டுகளில் வெளிவந்த 'தீபம், கணையாழி, கண்ணதாசன், எழுத்து, இலக்கிய வட்டம், சுபமங்களா, செம்மலர், வானம்பாடி' போன்ற இதழ்களின் வளர்ச்சிக்கும் தனது பங்களிப்பை செய்து வந்தார் தி.க.சி. அதே போல், தமிழ்நாடு கலை, இலக்கிய பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் பல்வேறு இலக்கிய அமைப்புகள் நடத்திய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தனது கருத்துக்களை பதிவு செய்து வந்தார். பணி ஒய்வு பெற்ற எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1999 ஆம் ஆண்டில் 'காலத்தின் குரல்' என்கிற கட்டுரைத் தொடரை 'கணையாழி'யில் அவரெழுதினார். தன்னுடைய இலக்கிய வாழ்வின் நினைவோடைகளை 'நினைவோடைக் குறிப்புகள்' என்கிற தலைப்பில் 'யுகமாயினி' மாத இதழில், மே 2010 முதல் மார்ச் 2011 வரை எழுதி வந்தார். 
இலக்கியத்தை பொறுத்தவரையில் தான் இன்னும் ஒரு மாணவன் தான் என அடக்கத்தோடு சொல்லிக் கொள்கிற தி.க.சி தாம் அதிகம் எழுதவில்லை என்றே சொல்லுவார். தி.க.சி.யினுடைய படைப்புகள் புத்தக வடிவில் வந்திருப்பது குறைவு தான் என்றாலும், அவருடைய சில மொழிபெயர்ப்புகள், கவிதைகள், சிறுகதைகள், ஒரங்க நாடகங்கள், திரை விமர்சனங்கள், இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகள், வானொலி உரைகள் பல இன்னும் புத்தகமாகத் தொகுக்கப்படவில்லை. தனது படைப்புகளை தி.க.சிவசங்கரன், சிவசங்கர், துருவன், ஜி.எஸ்.வேலாயுதம் ஆகிய புனைப்பெயர்களில் அவர் படைத்துள்ளார்.

தி.க.சி.யினுடைய முதல் நூல் 'காரல்மார்க்ஸ் - இல்வாழ்க்கை', ஜனவரி 1951இல் வெளிவந்தது. இது ஒரு மொழிபெயர்ப்பு நூலாகும். இந்நூலினைத் தொடர்ந்தாற் போன்று 'வசந்த காலத்திலே' (மார்ச் 1951), 'எது நாகரீகம் ?' (மார்ச் 1951), 'கலாச்சாரத்தைப் பற்றி' (மார்ச் 1951), 'சீனத்துப் பாடகன்' (நவம்பர் 1951) 'போர்வீரன் காதல்' (நவம்பர் 1951) மற்றும் 'குடியரசுக் கோமான்' (பிப்ரவரி,1952) ஆகிய மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்தன. அவருடைய திறனாய்வுக் கட்டுரைகள், 'தி.க.சி திறனாய்வுகள்' (பிப்ரவரி 1993), 'விமர்சனத் தமிழ்' (ஏப்ரல் 1993), 'விமர்சனங்கள்-மதிப்புரைகள்-பேட்டிகள்' (டிசம்பர் 1994) 'மனக்குகை ஒவியங்கள்' (மார்ச் 1999) 'தமிழில் விமர்சனத்துறை -சில போக்குகள்' (டிசம்பர் 2001), 'கடல் படு மணல்' (மார்ச் 2011), காலத்தின் குரல் (டிசம்பர் 2012) ஆகிய நூல்களாகவும், பல்வேறு இதழ்களுக்கு அவரளித்த நேர்காணல்கள் 'தி.க.சி நேர்காணல்கள்' (டிசம்பர் 2011), என்கிற நூலாகவும் வெளிவந்துள்ளன. இதில் 'விமர்சனங்கள்-மதிப்புரைகள்-பேட்டிகள்' நூலே அவருக்கு 2000ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுத் தந்தது. அதே போல், அவரது ஆன்மா காற்றோடு கலப்பதற்கு ஒரு வார காலத்திற்கு முன்பு வெளிவந்த 'தி.க.சி.யின் நாட்குறிப்புகள்' (மார்ச் 2014) என்கிற நூல் முக்கியமானதாகும். இந்நூலிற்கு அவரெழுதிள்ள நெடிய முன்னுரை அவரது நெடுங்கால இலக்கிய வாழ்வின் அறைகூவல். 


தி.க.சி பற்றி மு.பரமசிவம் தொகுத்த ‘தி.க.சி என்னுமொரு திறனாய்வுத் தென்றல்’ (1999), அ.நா.பாலகிருஷ்ணன் தொகுத்த ‘தி.க.சி என்ற மனிதன்’ (2004), தி.சுபாஷிணி எழுதிய ‘தந்தைமை தவழும் வளவு வீடு’ (2012) ஆகிய நூல்களும் மற்றும் வல்லிக்கண்ணன் தி.க.சி.க்கு எழுதிய கடிதங்கள், கே.சுகதேவ் மற்றும் சீனி குலசேகரன் ஆகியோர் தொகுப்பில் 'பிரிய சகோதர' (2012) எனும் நூலாகவும், குள்ளக்காளிபாளையம் கே.பாலசுப்பிரமணியம் தி.க.சி.க்கு எழுதிய கடிதங்கள் ‘நிழல் விடுத்து நிஜத்திற்கு' (2013) என்கிற நூலாகவும் வெளிவந்துள்ளன.

படைப்பாளிகள் இலக்கிய ஞானத்தை பெறுவது முக்கிய கடமையென்றும், அவர்களது படைப்புகள் தேசிய மற்றும் சர்வதேச தரத்துக்கு இணையாகத் திகழ வேண்டும் என்கிற உன்னத லட்சியத்தோடும் செயல்பட வேண்டும் என்றும் தனது ஆரம்ப காலத்திலிருந்தே வலியுறுத்தி வந்திருக்கிறார் தி.க.சி. ஒரு படைப்பானது பொதுவாக வாழ்க்கையில் காணப்படும் யதார்த்த நிலைகளையும், பிரச்சினைகளையும் சித்திரிப்பதை தவிர அதை விமர்சனப்படுத்துவதாகவும் அமைதல் வேண்டும் . ஒரு படைப்பாளியின் படைப்பில், கலையழகு (Artistic Beauty), உலகளாவிய மனிதகுல நேயம் (Universal Humanism), சமூக நோக்கு (Social Outlook) ஆகிய மூன்று அம்சங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று அடிக்கடிக் குறிப்பிட்டுச் சொல்லி வந்த தி.க.சி, இவையனைத்தையும் தாண்டி ஒரு படைப்பாளி அடிப்படையில் சிறந்த மனிதனாகவும் இருக்க வேண்டும் என்பதை சற்று தீவிரமாகவே வலியுறுத்தி வந்திருக்கிறார் .
சுமார் 72 ஆண்டு காலத்துக்கும் மேலான இலக்கிய அனுபவத்துக்குச் சொந்தக்காரரான தி.க.சி.க்கு, கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், படைப்பாசிரியர், பத்திரிக்கையாளர், மொழிபெயர்ப்பாளர், ஆரம்பகாலத்தில் தொழிற்சங்கவாதி, உலக நடப்புகளை ஊன்றிக் கவனித்து வருகின்ற சமூக உறுப்பினர், இளைய எழுத்தாளர்களுக்கு வழிகாட்டி, புதிய எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தும் சீரிய ஒருங்கிணைப்பாளர், இலக்கிய செயற்பாட்டாளர் என பல முகங்கள் உண்டு. தமிழியம், பெண்ணியம், தலித்தியம், சுற்றுச்சூழலியம், மார்க்சீயம் என்கிற பஞ்சசீலக் கொள்கையை இலக்கியத்திற்கும், இலக்கிய படைப்பாளிக்கும் வகுத்துத் தந்துக்கின்ற பெருமையும் தி.க.சிக்கு உண்டு. இலக்கியம் மூலமே சமூகத்தை செப்பனிட முடியும் என்பதில் தீவிர நம்பிக்கையுடைய தி.க.சி.யினுடைய சொந்த வாழ்க்கையைப் பொறுத்தவரையில் அவருக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள், 12 பேரன் பேத்திகள், கொள்ளுப்பேரன், பேத்திகள் உண்டு.

முதிர்ந்த வயது காரணமாக அவரது இறுதிக் காலங்களில்உடலளவில்  சற்று தளர்ந்திருந்த போதிலும் கூட,தலைமுறைகளைத் தாண்டிய கம்பீரம் தொடர்ந்து அவருடைய பேச்சிலும்பார்வையிலும் எப்போதும் மிளிர்ந்து கொண்டு தான்  இருந்தன . இலக்கிய வாழ்க்கையைப் பொறுத்தவரையில் அவரது இலக்கிய சிந்தனையும், எழுத்தும், களப்பணியும், சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பயன்பட்டிருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு பார்க்கின்ற போது, சொந்த வாழ்க்கையிலும், இலக்கிய வாழ்க்கையிலும் தி.க.சி ஒரு பெருவாழ்வு வாழ்ந்த கலைஞனாகவே வாழ்ந்து, கடந்த மார்ச் 25, 2014 அன்று இயற்கையோடு கலந்திருக்கிறார். நன்றி : புதிய தரிசனம் - செப்டம்பர் 16-30, 2014 / 

                                             அக்டோபர் 16-30, 2014

0 comments:

Post a Comment

Kindly post a comment.