Wednesday, October 28, 2015

ரியல் எஸ்டேட்.. மோசடி, REAL ESTATE நான் ஏமாந்த கதை

https://redhilsrealestateagency.wordpress.com/2015/01/01


நான் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக ரூபாய் 50 ஆயிரம் செலவில் ஒரு வீடு கட்டினேன். நான் வீடு கட்டியபோது எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். எனது பூர்வீக இடத்தில் 11 செண்ட் அளவில் ஒரு காம்வுண்ட் சுவரை எழுப்பி மையத்தில் 3 சென்ட் அளவில் ஒரு வீடு கட்டும் எண்ணத்தில் முதன்முதலாகப் பூமி பூஜை போட எண்ணி எனக்குத் தெரிந்த ஜோதிடரை அணுகி வாஸ்து செய்ய நாள் குறித்தேன்.

அவரும் மாசி மாதம் 22-ம் தேதி வாஸ்து செய்ய நல்ல நாள் என்று குறித்துக் கொடுத்தார். வாஸ்து பூஜை முடிந்த பின்பு வீடு கட்ட போர் போட வேண்டும் என்பதற்காக ஒரு போர்வெல் நிறுவனத்தை அணுகி 200 அடி போர் போட வேண்டும் என்று பேசி வண்டியை அழைத்துவந்து போர் போட்டேன். 35 அடியில் தண்ணீர் வந்ததால் அவர்கள் 100 அடிக்கு மேல் போர்போட முடியாது என்று பிரச்சினை எழுப்பினார். இங்குதான் முதன்முதலாக வீடு கட்டுவதில் பிரச்சினை உருவானது.

நான் உறுதியாகச் சொல்லிவிட்டேன். கண்டிப்பாக 200 அடி போர் போட வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் பணம் கொடுக்க முடியாது என்றும் கூறிவிட்டேன். போர் போடும் வண்டி உரிமையாளர் 100 அடிக்கு மேல் போர் போட்டால் தனக்கு நஷ்டம் என்றும் போர் வண்டி டீசல் செலவு ஏற்படும் என்றும் சொன்னார். அதற்கு நான் ஒத்துக்கொள்ளாத காரணத்தால் ஒருவழியாக 200 அடி போர் போட்டுக் கொடுத்தார்.

பணம் பட்டுவாடா செய்யும்போது கவனித்தேன், அவர்கள் தரையில் முதன் முதலாக 20 அடி நீள பிளாஸ்டிக் பைப் ஒன்றை மாட்டிவிட்டு அதற்கு விலை ரூ. 2 ஆயிரம் எனக் கணக்குக் காண்பித்திருந்தனர். அதைக் கொண்டு போய்க் கடையில் விசாரித்தால் அதன் விலை ரூ. 600 எனக் கூறினர். பைப்பில் மட்டும் 1400 ரூபாய் முறையில்லாமல் வசூல் செய்ய முயன்றனர். நான் அதைத் திட்டவட்டமாக மறுத்து 600 ரூபாய் மட்டுமே கொடுத்தேன். வீடு கட்டுவதில் ஏற்படும் சிக்கல் ஆழ்துளைக் கிணறு அமைக்கும்போதே தொடங்கிவிட்டது.

என் நண்பர் ஒருவர் மூலம் பொறியாளர் ஒருவர் அறிமுகமானார். வீடு கட்டுவதற்கான காண்ட்ராக்ட்டை எனக்கே தரும்படி கேட்டார். காண்ட்ராக் தர முடியாது. தேவைப்பட்டால் கன்சல்டிங்காக இருங்கள் என்றேன். அவர் சம்மதித்து கன்சல்டண்டாக இருந்தார். வீடு கட்ட ப்ளான் போட்டுக் கொடுத்து, நகராட்சியில் அப்ரூவல் வாங்கிக் கொடுத்தார். மேலும் வீடு கட்டுவதற்கான எஸ்டிமேட்டும் போட்டுக்கொடுத்தார். அவரது எஸ்டிமேட்டின் படி வீடு கட்டுவதற்கான கட்டுமானப் பொருள்களான மணல், ஜல்லி, செங்கல், சிமெண்ட் கம்பி ஆகியவற்றை வேலை தொடங்குவதற்கு முன்பே வாங்கி வைத்துக்கொள்ளலாம் எனக் கூறினார்.

அதனால் வேலை தடைபடாமல் நடக்கும் எனச் சொன்னார். அவர் சொன்னதை நம்பி நானும் அதன்படியே செய்தேன். ஆனால் வாங்கிப் போட்ட பொருள்கள் அனைத்தும் வீட்டின் அடித்தளம் அமைக்கும்போதே தீர்ந்துபோனது. பொறியாளரிடம் இது குறித்துக் கேட்டபோது ‘இது அனுமானமான எஸ்டிமேட்தான்’ என்றார். அப்போதே எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு தொடங்கியது. விசாரித்ததில் அவர் அனுபவம் இல்லாதவர் என்றும் இதுதான் அவருக்கு முதல் வேலை என்றும் தெரியவந்தது. அந்தப் பொறியாளரை நிறுத்திவிட்டு நானே பார்த்துக்கொள்ளலாம் என முடிவுசெய்தேன்.

தச்சு வேலை தகராறு

என் வீட்டு வேலைக்கு முதல் முதலில் தச்சு வேலைகளுக்கு அறிமுகமான நபர் எனக்கு நல்ல முறையில் குறைந்த செலவில் கதவு, ஜன்னல், நிலை, இதர வேலைகளையும் முடித்துத் தருவதாகக் கூறினார். நானும் நம்பி வேலையை அவருக்குக் கொடுத்தேன். முதன் வேலையாகக் கதவு, ஜன்னல் செய்வதற்கான மரம் வாங்கத் தீர்மானித்தோம். அப்போது மரக் கடையில் மரம் வாங்கினால் விலை அதிகமாக இருக்கும் அதனால் நாம் தனியாக மரம் வாங்கிச் செய்யலாம் என அந்த ஆசாரி ஆலோசனை வழங்கினார்.

மேலும் தனக்குத் தெரிந்த ஒருவரின் தோட்டத்தில் வேப்ப மரம், தொதகத்தி மரங்கள் இருப்பதாகவும் அவற்றை வாங்கலாம் எனவும் சொன்னார். ஆனால் அங்கு சென்று பார்த்தபோது வேம்பு மட்டுமே இருந்தது. ஆசாரி நம் வீட்டுக்கு இந்த வேப்ப மரம் மட்டும் போதுமானது எனச் சொன்னார். நானும் அவர் சொன்னதை நம்பி அதைப் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டுவந்தேன். பிறகு தெரிந்த மற்ற ஆசாரிகளிடம் விசாரித்தபோது பச்சை மரத்தில் கதவு செய்ய முடியாது எனத் தகவல் சொன்னார்கள்.

நான் இது குறித்து அந்த ஆசாரியிடம் விசாரித்தபோது, “நம் வீடு ஆரம்பிக்க எப்படியும் 6 மாதம் ஒரு வருஷம் ஆகும் அல்லவா? அதற்குள் மரம் காய்ந்துவிடும்” எனச் சொன்னார். வாங்கிய மரத்தை அவரிடமே கொடுத்துவிட்டுப் பணத்தைத் திரும்பப் பெற்றேன். உடனடியாக அந்த ஆசாரியை மாற்றி வேறு ஒரு ஆசாரியிடம் பொறுப்பை ஒப்படைத்தேன்.

சென்ட்ரிங் கம்பியில் ஏமாந்து

அடுத்த அனுபவம் தந்தவர் சென்ட்ரிங் கம்பி கட்டும் ஆசாரி. இந்த ஆசாரியை அறிமுகம் செய்து வைத்தவர் என் வீட்டுக் கொத்தனார். வெளியில் அவரைப் பற்றி விசாரித்தபோது நல்லவிதமாகத்தான் கூறினார்கள். அதனால் கம்பி கட்டும் வேலையை அவரிடம் ஒப்படைத்தேன். பார்ப்பதற்கு நல்ல மனிதராகக்த் தெரிந்தார். வீட்டு வேலைக்குத் தேவையான கம்பிகளை மொத்தமாக மதுரையில் வாங்கலாம் என நினைத்தேன்.

அந்த யோசனையை அவரிடம் சொன்னபோது, “எதற்கு மொத்தமாக வாங்கிப் போடுகிறீர்கள்? தேவைக்கேற்ப இங்கேயே வாங்கிக் கொள்ளலாம்” என்றார். எனக்கு அவர் யோசனை சரியெனப்பட்டது. அவர் கூறியதுபோல் உள்ளூர்க் கடையில் என்னை அறிமுகம்செய்து வைத்தார். தேவையான கம்பிகளை ஆசாரி குறித்துக் கொடுப்பார். நானே நேரடியாகச் சென்று எடைபோட்டு வாங்கியதால் எனக்கும் நம்பிக்கை ஏற்பட்டது. சென்ட்ரிங் போடும்போது அதிகமாகக் கம்பிகள் தேவைப்பட்டன. ஆசாரி குறித்துக் கொடுத்தபடி மொத்தமாகக் கம்பிகளை வாங்கி எடைபோட்டு வாங்கினேன். கம்பிகளை ஏற்றி வர வண்டி வரவில்லை என்பதால் அந்தக் கம்பிக் கடைக்காரர் வண்டி பிடிக்கச் சென்றார்.

கடையில் நான் மட்டும் தனியாக இருந்தேன். தற்செயலாகக் கம்பியை எடைபோட்ட அங்கிருந்த தராசைப் பார்த்தேன். வெறும் தராசிலும் ஸ்கேல் மேல் நோக்கிச் சென்றது. மீண்டும் பரிசோதித்துப் பார்த்தேன். நான் இப்படிச் செய்துகொண்டிருக்கும்போது வெளியில் சென்றிருந்த கடைக்காரர் வந்துவிட்டார். கவனித்தும் கவனிக்காததுபோல, “சார் வண்டி வந்துவிட்டது” எனப் பதற்றமடைந்தார். எனக்கு இதில் ஏதோ தவறு இருப்பதுபோலத் தெரிந்தது.

அவரிடம் எந்த எடையும் இல்லாமலேயே தராசு எடை மேல்நோக்கிச் செல்கிறது என்பதைக் குறிப்பிட்டுக் கேட்டேன். முதலில் சமாளித்துப் பார்த்த அவர், “சார் தராசில் ஏதோ ப்ராபளம் இருக்கு. உங்களுக்குச் சரிசெய்யத் தெரியுமா?” எனக் கேட்டார். முடிச்சு போட்டவனுக்குத் தானே அதை அவிழ்க்கத் தெரியும் என நினைத்துக்கொண்டு, “எனக்குத் தெரியாது. ஆனால் எனக்குத் தெரிந்த ஒருவருக்குத் தெரியும். அவரை அழைத்து வருகிறேன்” எனச் சொன்னேன்.

கம்பிப் பஞ்சாயத்து

உடனே அவர், “நானே சரிசெய்கிறேன்” என அவர் போட்ட முடிச்சை அவரே அவிழ்த்தார். ஏதோ தவறாக கொக்கி மாட்டிக் கொண்டுள்ளது எனச் சமாதானம் சொல்லி என்னை அனுப்ப முயன்றார். நான் மீண்டும் எடைபோட வேண்டும் என வலியுறுத்தினேன். நான் கட்டாயமாகக் கூறியதால், “சார் ஒரு பத்தைந்து கிலோதான் கூடியிருக்கும். அதற்கான பணத்தைக் கழித்துக்கொள்ளலாம்” என்றார். ஆனால் திரும்ப எடைபோட்டுப் பார்த்தபோது 230 கிலோ குறைந்திருந்தது.

இதிலேயே இவ்வளவு என்றால் இதற்கு முன்பு வாங்கிய கம்பியில் எவ்வளவு மோசடி நடந்திருக்கும்? எடைபோட்ட கம்பிகளை ஏற்றிக்கொண்டு அதற்கான பணத்தைப் பிறகு தருவதாகக் கூறி வந்துவிட்டேன். பிறகு இது பற்றி ஊர்ப் பெரிய மனிதர்களிடம் கூறினேன். அவர்கள் உடனடியாக கம்பிக் கடைக்காரரை அழைத்துப் பேசினர். கடைக்காரர் பஞ்சாயத்துப் பேசியவர்களுக்குப் பணத்தைக் கொடுத்துச் சமாளித்தார். என்னிடம் கடைசியாக வாங்கிய கம்பிக்குப் பணம் வேண்டாம் எனச் சொல்லிவிட்டார். இந்தக் கம்பிக் கடைக்காரர் மோசடியில் என் வீட்டுக் கம்பி கட்டும் ஆசாரிக்கும் பங்கு உண்டு என்பதைப் பின்னால்தான் தெரிந்துகொண்டேன்.

மேலும் பொறியாளர், வீட்டுக் கொத்தனார், எலக்ட்ரீசியன், பெயிண்டர், தச்சர் என எல்லோருக்கும் அவர்கள் வேலைக்காக நான் வாங்கும் பொருளில் கமிசன் உண்டு என்பதும் எனக்குப் பின்னால்தான் தெரிய வந்தது. இப்படியாக இந்த வீடு கட்டி நான் பெற்ற அனுபவங்கள் மிக அதிகம்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.