Wednesday, October 28, 2015

410 கோடி ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் உயிரினங்கள்? ஆய்வில் புதிய தகவல் ! -By DN, லாஸ் ஏஞ்சலீஸ்


பூமியில் 410 கோடி ஆண்டுகளுக்கு முன்பே உயிரினங்கள் தோன்றியிருக்கலாம் என அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதாவது, பூமி தோன்றிய 454 கோடி அண்டுகளில் உயிரினங்கள் தோன்றிவிட்டதாக அந்த ஆய்வு கூறுகிறது.
இதற்கு முன்பு வரை உயிரினங்கள் தோன்றியதாகக் கருதப்பட்ட காலத்தைவிட, இது 30 கோடி ஆண்டுகள் முந்தைய காலமாகும்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகக் குழுவினர் நிகழ்த்திய ஆய்வின் முடிவில் இந்தப் புதிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான மார்க் ஹாரிஸன் கூறியதாவது:
பூமியில் உயிர்கள் தோன்றி 454 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன என்று 20 ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தால் பெரும் எதிர்ப்பு எழுந்திருக்கும்.
ஆனால், பூமி உருவான பிறகு அதில் உயிர்கள் தோன்றுவதற்கு  நாமெல்லாம் நினைத்த அளவு அதிக காலம் ஆகவில்லை.
பூமி உருவானபோதே உயிர்கள் தோன்றுவதற்கும், வளர்வதற்குமான மிகச் சரியான உட்பொருள்களுடன் உருவாகியுள்ளதையே இது காட்டுகிறது என்றார் அவர்.
ஆய்வில் பங்கேற்ற மற்றொரு மாணவரான பேட்ரிக் போயென்கே கூறுகையில், ""சில விஞ்ஞானிகள் கூறுவது போல ஏதாவது ஒரு வெடிப்பால் பூமி அழிந்துவிட்டாலும், சில கோடி ஆண்டுகளிலேயே மீண்டும் உயிர்கள் தோன்றிவிடும் என்பது எங்கள் ஆய்வின் மூலம் தெரிகிறது'' என்றார்.
நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.