Saturday, October 24, 2015

வெங்கட்சாமிநாதன் - தனிப்பயணம்

Venkat Swaminathan rejected the approach of the Dravidian movement and Marxists

Noted Tamil critic and writer Venkat Swaminathan, who laid stress on aesthetics and rejected the approach of the Dravidian movement and Marxists, died in Bangalore on Wednesday. He was 82 and is survived by his son.
Born in Nilakottai in Kumbakonam, he worked in the Central Bureau of Investigation (CBI) and spent his professional life in Delhi.  He was very particular about not revealing any of his professional details.  Post-retirement, he lived in Chennai and moved to Bangalore after his wife’s death.
It was late C.S. Chellappa and Ka.Na. Subramaniam who brought Venkat Swaminathan to the literary field and his first work was published in ‘Ezhuthu’ run by Chellappa. He also brought out his own magazine ‘Yatra’.
His book, Kalai-Anubhavam, Velipadu, can be considered a guidebook of aesthetic criticism, says A. K. Perumal, folklorist and his close friend.
“He insisted that art and literature should stem from real experience rather than constructing them from ideology,” said another writer, Sethupathy Arunachalam.
Mr. Arunachalam said although he had bitter personal fights with late Piramil, they were instigated from both the ends.
Once he described writer Sujatha as the Rajinikant of literature. “Rajinikant will do anything to satisfy his fan and Sujatha will do the same for the sake of his reader,” he had remarked.
He was also of the opinion that poet Kannadasan was destroyed by cinema. “Otherwise, most of his criticisms where non-personal and even at places where he was talking about personality it was mostly covered in humour. He also made sure that personal relationship is not spoilt, even though he might criticise someone's creation very harshly,” said Mr Arunachalam.
It was this trait that made him spend days in Tirunelveli with another critic Thi.Ka.Si, with whom he had a lifelong battle.
A relentless reader till his death, Venkat Swaminathan was always open to new generation writing.
Aesthetics of hate
Dalit writer Ravikumar said Venkat Swaminthan’s ideology for literary criticism was aesthetics of hate. “He would either eulogise or demolish and his approach was guided by his personal whim,” said Ravikumar.
“While he had great admiration for classical music and dance, he failed to take into consideration the classical tradition of Tamil literature.
“He called Tamil literature a desert. The sweeping statement probably could have stemmed from his lack of understanding of classical Tamil literature. But he had a passion and the same found articulation in the tone of criticism. It was he who brought in a wide-range of subjects in his approach to literary criticism,” Mr Ravikumar said.

thanks :- the hindu

"என் வாழ்க்கையில் அப்படி எழுத ஒன்றுமே இல்லை. எழுத்துலகிலும் வெளியிலும் சில உன்னதமான மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன். எவ்வளவோ மாற்றங்கள், வாழ்க்கை நியதிகளில், கலாசாரத்தில், வாழ்க்கை மதிப்புகளில் அவற்றை நினைத்துப் பார்த்தால் திகைப்பாக இருக்கும்.' இது வெங்கட்சாமிநாதன் சொன்னது.
 ஆமாம்! திகைப்பாக இருக்கிறது. நேற்றுவரை நேரில் பார்க்கவும் பேசவும் கிடைத்த உன்னத மனிதர் நினைவாகிப் போயிருக்கிறார். திங்கள்கிழமை மாலைவரை பேசிக்கொண்டிருந்திருக்கிறார். இரவில் மூச்சுத் திணறல், நுரையீரலில் நீர்க்கட்டு, சிறுநீரகம் செயலிழப்பு, மாரடைப்பு என்று வரிசை கட்டி நின்று அவரை நோய்கள் அழைத்துச் சென்றிருக்கின்றன.
 கலை, இலக்கிய உலகில் யாரையும் பின் தொடராமல் தனிப் பயணம் மேற்கொண்ட வெங்கட்சாமிநாதனின் நீண்ட பயணம் நிறைவடைந்திருக்கிறது.
 பாலையும் வாழையுமாக 1960-களின் தொடக்கத்தில் எழுத்தில் தொடங்கிய இலக்கிய வாழ்க்கை; "இத்துடன் ஒரு புதிய சிறுகதையாளர் அறிமுகம். எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது' என்று கணையாழிக்கு ஒருவரைக் கடந்த மாதம் அறிமுகப்படுத்தி இருந்ததுவரை ஏறத்தாழ அரை நூற்றாண்டு எழுத்துப் பயணம் முடிந்திருக்கிறது.
 இலக்கியம், தனித்தீவு இல்லை; இசை, ஓவியம், சிற்பம், நாட்டியம், தெருக்கூத்து, திரைப்படம், நாடகம் என எல்லாவற்றிலும் இலக்கியத்தைக் காணவும், எல்லாவற்றையும் கொண்டு இலக்கியப் படைப்பாக்கத்தினைச் செழுமைப்படுத்திக் கொள்ளவும் வழி காட்டியவர்.
 ஜான் ஆபிரகாம் இயக்கத்தில் அக்கிரகாரத்தில் கழுதையைக் காட்டியவர். கனடா, டொரண்டோ தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதைப் பெற்றவர். 20-க்கும் மேற்பட்ட கலை, இலக்கிய நூல்களின் ஆசிரியர் என்பதெல்லாம் அடிக் குறிப்புச் செய்திகள்.
 வெங்கட்சாமிநாதன் மடிப்பாக்கத்தில் இருந்த காலம். புது வீடு கட்டிக் குடிபோனபோது போயிருந்தேன். தான் முன்பு குடியிருந்த வீடுகளைப் பற்றியெல்லாம் சொல்லிக்கொண்டு வந்தார். அவருக்கு வீடு பற்றிய நினைவுகள் வேறு மாதிரி இருந்தன. அந்த தில்லி வீட்டில்தான் அந்த எழுத்தாளருக்கும் எனக்கும் இந்தப் பிரச்னை வந்தது என்பதாக ஒவ்வொரு வீட்டிற்கும் நிறைய கதைகள் அவர் சொல்வதற்கும் நாம் கேட்பதற்கும் இருந்தன. 
 இப்போது நாம் இவரிடம் கவனமாகப் பேச வேண்டும். இல்லையேல் இந்த வீட்டின் நினைவாக இவரிடம் நாமும் சேர்ந்துவிடக் கூடும் என்ற எச்சரிக்கை உணர்வு அவரைச் சந்திக்கிறபோதெல்லாம் கூடவே வந்து கொண்டிருந்தது.
 அவர் பெங்களூருக்குச் சென்ற பின் ஆண்டுக்கு ஒரு முறை ஓய்வூதியப் புதுப்பித்தலுக்காக சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். 2011-இல் மே மாதம் அவர் பிறந்த நாள் கூட்டத்தில் கலந்துகொண்ட பின், பெருங்குடியில் டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன் வீட்டில் ஒரு வாரம் தங்கி இருந்தார். 
 கலை, இலக்கியவாதிகளின் சந்திப்பாக ஒரு வார காலமும் வெ.சா. மகிழ்ச்சியாகக் கழித்த நாள்கள் அவை. அப்போது அவர் மனம் திறந்து பல செய்திகளைச் சொன்னார்.
 உருவாக்கப்படும் பிம்பங்களைச் சிதைப்பதில் அவருக்கு முனைப்பு இருந்தது. ஆனால், உருவாகும் பிம்பங்களையும் அவர் விட்டுவிடத் தயாரில்லை. ஏனெனில், உருவாகும் பிம்பங்கள் பிறகு வழிபடச் சொல்லும். பிறகு கும்பிட வருகிறவனைப் பார்த்து ஆடு வெட்டு, கோழி அறு என்று ஆணையிடும் என்றார்.
 கதை எழுதுகிறவர்களைக் கிழிக்கிறீர்களே, வாழ்க்கையில் நீங்கள் ஒரு கதை எழுதுங்கள் என்றபோது யார் போடுவார்கள் என்றார். கணையாழி போடும் என்று சொன்னபோதும் கதை என்று அவர் எழுதவே இல்லை. ஆனால், அதன்பின் அவர் எழுதிய பல கட்டுரைகள் கதைகளைப்போல இருந்தன.
 எழுதி அனுப்பிய பின், உடனடியாக அது பற்றிய கருத்தறியும் ஆர்வம் கடைசிக் காலங்களில் குழந்தையின் குதூகலம்போல அவரிடம் நிரம்பி வழிந்தன. இவ்வளவுக் காலத்திற்குப் பின்னும் இப்போதும் உங்களுக்குப் பாராட்டு சந்தோஷம் தருகிறதா என்று ஒருமுறை கேட்டதற்கு இப்போதுதான் தேவைப்படுகிறது என்றார்.
 எல்லோரையும் போலச் சொல்லிவிட்டுச் சிரிக்கமாட்டார். சிரிப்புதான் அவர் ஏதோ சொல்ல வருகிறார் என்பதை முன்வந்து சொல்லும். பிறகு சொல்லி முடித்துவிட்டும் சிரித்து அடங்குவார். முன் சிரிப்பில் நாம் கலந்துகொள்ள முடியாது. பின் சிரிப்பில் நாம் கலந்து கொள்கிறோமா என்பது பற்றிக் கவலைப்படமாட்டார். கோபத்தில் இப்படியெல்லாம் எதிர்பார்க்க முடியாது. கோபம் முகத்தில் வந்துதான் வார்த்தைக்குப் போகும். 
 சொல் வனத்தில் ஒரு நேர்காணலில்,விருதுகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அதாவது தகுதியானவர்களுக்கு அது வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து உங்கள் கருத்தென்ன? இது கேள்வி.
 வெ.சா. பதில்: இதைப் பற்றிப் பேசுவதற்கே லாயக்கில்லை. இந்தச் சமூகத்திலிருந்து இப்படிப்பட்ட நிகழ்வுகள்தான் வரும். நாம் எதிர்பார்க்க முடியும். அதைப்பற்றி நாம் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை. இந்தச் சமூகம் மாறினால் ஓரளவு இவையெல்லாம் மாறலாம் என்று எதிர்பார்க்கலாம். 
 உஸ்தாத் விலாயத் அலி கான், "நீ யார் எனக்கு விருது கொடுக்க?' என்று விருது கொடுக்க வந்தவர்களைக் கேட்டார். எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரை கோட்டூர்புரத்தில் அவர் வசித்த தெருவுக்கு வைக்கலாம் என்று முடிவு செய்தபோது, வேண்டாம் என்னைவிட சீனியர் டி.கே. பட்டம்மாள். அவர் பெயரை வையுங்கள் என்று சொன்னார். 
 அதுபோல ஆந்திராவில் ஓர் எழுத்தாளருக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தபோது, டி. சாம்பசிவ ராவ் அதை விளாசித் தள்ளிவிட்டார். சாகித்ய அகாதெமியின் ஜர்னலில் அது வெளியானது. சாம்பசிவ ராவ் சாகித்ய அகாதெமியில் வேலைபார்த்துக் கொண்டிருந்தவர். 
 அவர் அங்கே வேலை பார்த்துக் கொண்டே, அவர்கள் அகாதெமி தேர்ந்தெடுத்துப் பரிசளித்த நூலை எப்படி விமர்சிக்கலாம் என்று பெரிய பிரச்னை வந்தது. அப்போது சாகித்ய அகாதெமியின் தலைவராக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்தான் அவர் வேலைக்கு ஆபத்து ஏதும் வராமல் காப்பாற்றினார். 
 விஷயம் என்னவென்றால், சாகித்ய அகாதெமியில் வேலை செய்யும் தெலுங்கு இலக்கிய ரசிகருக்கே விருது தரப்பட்ட புத்தகத்தின் தகுதி அகாதெமி பத்திரிகையில் எழுதி கண்டிக்குமளவுக்கு மோசமாக இருந்திருக்கிறது. தன் வேலையைப் பணயம் வைத்து எழுதிய அவர் என் மதிப்புக்குரியவரானதில் ஆச்சரியமில்லை. இது எங்கள் இருவருக்கும் இயல்பானது.
 வெ.சா. கடைசிவரை விருது பெறாமலே போய்விட்டார். தான் சரியாக மதிக்கப்படவில்லை என்ற அவரது மனநிலையை மாறவிடாமல் கடைசிவரை காப்பாற்றி இருக்கிறோம். 
 =என் மற்ற நண்பர்களுக்கு எரிச்சலூட்டும் அளவுக்கு, நான் வெங்கட்சாமிநாதனின் அபிப்ராயங்களை மதிக்கிறேன் - என்றார் க.நா.சு.
 =சாமிநாதனது பேனா வரிகள் "புலிக்கு தன் காடு, பிற காடு வித்தியாசம் கிடையாது' என்றபடி சகலத்தையும் பதம் பார்க்கும் என்றார் சி.சு. செல்லப்பா.
 =தமிழ் கலைத் துறைகள் மீது வெ.சா கொண்டிருக்கும் ஆவேச ஈடுபாடு, வெகு அபூர்வமானது. தமிழ் இனத்தோடு தன்னைப் பிணைத்துக் கொண்டிருக்கும் தன்மையில் இவரை பாரதியுடன் மட்டுமே ஒப்பிட முடியும். 
 பாரதியோ ஒரு உணர்ச்சிக் கவிஞன். தேசியக் கவிஞன்; புரட்சிவாதி. அவனது இயற்கையான முகங்கள் அனைத்தும் நம்மவர்கள் இயற்கையாகவே புரிந்துகொள்ளாமல் போற்ற வசதியானவை. வெ.சா.வின் உலகமோ, புரிந்து கொள்ளும் ஆற்றலை தீவிரமாகக் கேட்டு நிற்கிறது. சுய அபிமான உணர்வுகளை நீக்கி சத்தியத்தைப் பார்க்க முடிந்தவர்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. ஆகவே, அங்கீகாரத்திற்கு, காலத்தை இவர் எதிர்பார்த்து நிற்பது சரிதான் என்றார் சுந்தர ராமசாமி.
 காலத்தை எதிர்பார்க்காமல் வெ.சா. போய் சேர்ந்திருக்கிறார்.
 "மிகச் சில நெருங்கிய உறவினர்கள், அவரது மகன் வீட்டில் அவர் வசித்துவந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒருசில நண்பர்கள், அவரது வாசகர்கள், கலை, இலக்கிய அபிமானிகள் என்னையும் சேர்த்து ஏழெட்டு பேர் வந்திருந்தனர் - பாவண்ணன், விட்டல் ராவ், ஸிந்துஜா, மகாலிங்கம், திருஞான சம்பந்தம், பேரா. கிருஷ்ணசாமி, ஷிமோகா ரவி..' என்று இறுதி அஞ்சலி செய்தோர் பட்டியலைத் தருகிறார் கிருத்திகா தரன்.
 மின் மயான வளாகத்தில் கிருத்திகா தரன், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது சொன்னாராம், வெ.சா. குறித்து தான் எதுவும் அறிந்ததில்லை என்றும் மணிகண்டன் வலைப்பதிவில் மூத்த எழுத்தாளர் என்று வெ.சா.வைப் பற்றி எழுதியிருந்தைப் பார்த்து வந்ததாகவும் சொன்னாராம். அவரது வீடு அந்த வளாகத்திற்கு இரண்டு கட்டடங்கள் தள்ளி உள்ளதாம். 
 ஆனாலும் இணையக் குடிமக்கள் பலர் வெங்கட்சாமிநாதனின் மறைவுக்கு ஏகப்பட்ட அஞ்சலிகளைச் செலுத்தி இருக்கின்றனர். தன் முகநூலில், 'Worked at astrologer Vignesh' என்று தன்னைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள வெங்கட்சாமிநாதன் தன் கண்களைத் தானம் செய்துவிட்டுப் போயிருக்கிறார்.
 எதையாவது பற்றிக்கொண்டும் தொற்றிக்கொண்டும் தான் வாழ்க்கை நகர்கிறது. நடை வண்டியை விட்டுவிட்டு நடக்கத் தொடங்கியபின் சொற்களைப் பற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. பற்றிக்கொள்ளவும் தொற்றிக்கொள்ளவும் வெ.சா. நிறைய விட்டுச் சென்றிருக்கிறார்.
 சுற்றிலும் நடப்பவற்றைப் பாராட்டவும், கண்டிக்கவும் ஒரு பார்வை வேண்டும். பார்வையை உருவாக்கிக் கொள்ள பார்க்கவும், படிக்கவும் கண் வேண்டும். வெ.சா. கண் தானம் செய்துவிட்டுப் பயணித்திருக்கிறார். எழுத்தைப்போலவே இறுதியிலும் தனிப் பயணம் புறப்பட்டிருக்கிறார்.
 
 கட்டுரையாளர்:
 முன்னாள் துணைவேந்தர்,
 தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

நன்றி :- தினமணி
 

0 comments:

Post a Comment

Kindly post a comment.