Saturday, October 24, 2015

திராவிடம் என்பது இனமல்ல. தமிழ் என்பதைக் குறிக்கும் சம்ஸ்கிருதச் சொல்தான் - பத்மன்

Image result for தமிழ் logo




"விதியே, விதியே, தமிழச்சாதியை என்செய நினைத்தாய்?' என்று மகாகவி பாரதி புலம்பிய வரிகளை இரவல் வாங்கத் தோன்றுகிறது, இன்றைய தமிழறிஞர்கள் சிலரது கூற்றுகளை செவிமடுக்கும்போது.

 "திராவிடர்களான தமிழர்களிடம் ஆரிய நாகரிகம் புகுத்தப்பட்டுவிட்டது, ஆகையால் தமிழர்கள் ஹிந்துக்கள் அல்ல' என்று சில தமிழறிஞர்கள் முழங்குகிறார்கள். இவ்வாறு கூறுவதன் மூலம் ஹிந்து என்று பொதுவான பெயரில் வழங்கப்படும் இந்திய மதங்களின் தொகுப்புக்கு, ஆன்மிகத் தத்துவக் கரூவூலத்துக்கு தமிழர்களின் மாபெரும் பங்களிப்பை அவர்கள் மறுதலிக்கிறார்கள். 

 அது ஒருபுறம் இருக்கட்டும். தங்களைத் தமிழர்கள், திராவிடர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் எவையெல்லாம் ஆரியம் என்று வகைப்படுத்துகிறார்களோ, அவையெல்லாம் தமிழ்நாட்டில் போற்றுதலுக்குரியதாய், தமிழனுக்கு உரியதாய் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதுதான் வேடிக்கை.

 தமிழர்களின் முருகன் வேறு, ஆரியர்களின் முருகன் வேறு, ஆரியர்களின் புராணக் கதைகளில் கூறப்படும் சிவன் தமிழர்கள் வழிபடும் சிவன் அல்ல, தீ ஓம்புதல் (வேள்வி செய்தல்) ஆரியர்களின் செயலே அன்றி தமிழர்களுடையது அல்ல, ஆரியர்களின் தலைவன் இந்திரன் தமிழர்களின் எதிரி என்றெல்லாம் புனைவுகள் தமிழகத்தில் எடுத்தோதப்படுகின்றன.

 ஆச்சரியத்துடன் சங்க இலக்கியங்களைப் படிக்கப் புகுந்தால், இவர்கள் ஹாரிபாட்டர் கதைகள், ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சிய கற்பனைகளைத்தான் தமிழகத்தில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை வெட்டவெளிச்சமாகிறது. 

 முதலில் இந்திரனைப் பார்ப்போம். இந்திரனும், வருணனும் ஆரியக் கடவுளர்கள் என்றால் அவர்களுக்குத் தமிழ்கூறும் ஐந்திணைகளில் மருதம், நெய்தல் ஆகிய இரு திணை நிலங்களை ஒதுக்கியது ஏன்?

 இந்திரன் வேறு யாருமல்ல, வேந்தன் அதாவது மன்னன் என்று சிலர் விளக்கங்கள் கொடுக்கிறார்கள். அவ்வாறெனில், "நூறுபல் வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து ஈரிரண்டு ஏந்திய மருப்பின், எழில்நடை தாழ் பெருந்தடக்கை உயர்த்த யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வன்' (பலநூறு வேள்விகளை நடத்தியவனும் போர்களில் எதிரிகளைக் கொன்று பல வெற்றிகளைப் பெற்றவனும், நான்கு கொம்புகளையுடைய மகுடத்தைத் தரித்தவனும் எழிலான நடையும் நீண்ட கைகளும் உடையவனும், ஐராவதம் என்ற யானையில் வருகின்ற, செல்வம் நிரம்பிய செல்வனுமாகிய இந்திரன்) என்று திருமுருகாற்றுப்படையில் சிறப்பிக்கப்படும் இந்திரன் யார்?

 இப்போது முருகன் பற்றிய தவறான கூற்றுக்கும் இதே திருமுருகாற்றுப்படை கூறும் மறுப்பைக் காண்போம்: திருச்செந்தூரில் வீற்றிருக்கும் முருகப் பெருமானின் ஆறுமுகங்களைப் புகழும்போது "ஒரு முகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஓர்க்குமே' என்று பாடுகிறார் நக்கீரர். 

 மந்திர விதிமுறைகளில் பிசகாது, மரபுப்படி அந்தணர் நடத்துகின்ற வேள்வியை ஆறுமுகப் பெருமானின் ஒரு முகம் விரும்பி ஏற்கிறதாம். திராவிட முருகன் ஏன் ஆரிய வேள்வியை விரும்பி ஏற்கிறார்?

 ஏனெனில், பாரதம் முழுவதிலும் நடைபெறும் வேள்வியும் தமிழர்களுக்குரியதே. சேரமன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையை, அரிசில் கிழார், "கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது வேள்வி வேட்டனை' (பதிற்றுப்பத்து பாடல் 74) என்று பாராட்டுகிறார். 

 அருமறை குறித்த விளக்கங்களை நன்கு கேட்டறிந்து, அதன் முறை தவறாது வேள்விகளைச் செய்தான் இரும்பொறை என்பது இதன் பொருள். 

 பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானை "கொலை கடிந்தும் களவு நீக்கியும் அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும் நல் ஆனொடு பகடு ஓம்பியும் நான் மறையோர் புகழ் பரப்பியும்' வாழ்ந்ததாகப் போற்றுகிறார். 

 கரிகால் சோழனின் அரசாட்சியிலே கொலை, கொள்ளை போன்ற தீமைகள் அகற்றப்பட்டிருந்தன. அமரர்கள் எனப்படும் தேவர்களுக்கு உரிய யாகங்களைச் செய்து அவர்களுக்கு உரிய ஆகுதிகளை (வேள்வி செய்து அவிப்பாகங்களை வழங்குகின்ற ஆகுதிகளை) முறை தவறாமல் வழங்கியிருக்கிறான் மன்னன் கரிகாலன். 
 அத்துடன் அதனைச் 

 மதுரைக் காஞ்சியில், தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் புகழ்ந்துபாடும் மாங்குடி மருதனார், நெடுஞ்செழியனின் முன்னோராகிய பெருவழுதி, "பல யாகங்களை நடத்தியவன் என்பதை, பல் சாலை முது குடுமியின் நல் வேள்வித் துறை' என்று குறிப்பிடுகிறார். இறுதியாக சிவபெருமானுக்கு வருவோம். 

 "மலைபடுகடாம்' எனப்படும் கூத்தர் ஆற்றுப்படையில் அதன் ஆசிரியர் புலவர் பெருங்குன்றூர்ப் பெருங்கெüசிகனார், சிவபெருமான் ஆலகால விஷம் அருந்திய புராணச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டும் வகையில் அவரை "காரி உண்டிக் கடவுள்' என்று புகழ்கிறார். 

 பரிபாடலின் 5-ஆவது பாடலில், முருகனைத் தோற்றுவித்த அவன்தம் தந்தையாகிய சிவபெருமான், "அமரர் வேள்விப் பாகம் உண்ட பைங்கட் பார்ப்பான்' என்றும், "விண்ணோர் வேள்வி முதல்வன்' என்றும் போற்றப்படுகிறார்.÷

 இந்தப் பரிபாடலின் 8-ஆவது, 9-ஆவது பாடல்களில் சிவபெருமான் "மணிமிடற்று அண்ணல்' (நீலகண்டன்) என்று புகழப்படுகிறார்.

 இவ்வாறெனில், தமிழ்ச் சிவன் எப்படி புராணங்களில் கூறப்படும் ஆரியச் சிவனில் இருந்து வேறானவர்?

 முதலில் ஒரு விஷயத்தை தெளிவு செய்துகொள்வோம்: திராவிடம் என்பது இனமல்ல. தமிழ் என்பதைக் குறிக்கும் சம்ஸ்கிருதச் சொல்தான் அது. திராவிடம் தனி இனம் என்றால் அதனைக் குறிப்பிடும் சங்க இலக்கியம் எது? அதேபோல் ஆரியம் என்பதும் இனமல்ல. உயர்ந்த, சிறந்த என்று பொருள்படும் சொல் மாத்திரமே.

 அதனால்தான் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது உலகெங்கும் காணோம்' என்று பாடிய மகாகவி பாரதி, "ஆரிய பூமியில் நாரியரும் நரசூரியரும் சொல்லும் வீரிய வாசகம் வந்தேமாதரம்' என்றும் பாடினார்.

 இதன் உட்பொருள் உணர்வோம். வீண் திரிபுவாதங்கள் தவிர்ப்போம்.


நன்றி :- தினமணி


0 comments:

Post a Comment

Kindly post a comment.