Saturday, October 24, 2015

சிறைச்சாலைகள் - "மரணத்தை நெருங்குவோருக்கும் விதிவிலக்கு இல்லை'


சிறைகளில் போதுமான சுகாதார, மருத்துவ வசதிகள் இல்லாததால், கைதிகள் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. சொந்த மண்ணில் அதிகளைப் போல, சிறையில் கைதிகள் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 ஆண்டுக்கு ஆண்டு சராசரியாக நாடு முழுவதும் 1.5 சதவீதம் தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கையும், 1.6 சதவீதம் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்றார்போல சிறைகளில் சுகாதார, மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளன. இதனால் சிறைகளில் இறப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

 தமிழகச் சிறைகளில் 15,266 ஆண்கள், 608 பெண்கள் உள்பட 15,874 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். மொத்த அளவில் 71.5 சதவீதம் எப்போதும் நிரம்பியே உள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

 8-ஆவது இடத்தில் தமிழகம்: அதிகமாக சிறையில் இறப்பு நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் 8-ஆவது இடத்தில் உள்ளது. 

 நாட்டில் உள்ள சிறைகளில் 2014-இல் 1,702 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 1507 பேர் நோய்கள், மன அழுத்தம், வயோதிகம் ஆகியவற்றின் காரணமாக இறந்துள்ளனர். 
 கொலை, தற்கொலை, வன்முறைச் சம்பவங்கள், துப்பாக்கிச் சூடு ஆகியவற்றின் மூலம் 195 பேர் இறந்துள்ளனர். 

 இதில், தமிழக சிறைகளில் மட்டும் 56 கைதிகள் இறந்துள்ளனர். இவர்களில் 51 பேர் நோய் தாக்கம், மன அழுத்தம், மனநலப் பாதிப்பு, வயோதிகம் ஆகிய பிரச்னைகளினால் இறந்துள்ளனர். 5 பேர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர்.

 கைதிகளிடையே அதிகரிக்கும் மனநல பாதிப்பு: 

இதேபோல், மனநல பாதிப்பால் அவதிக்குள்ளாகும் கைதிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழக சிறைகளில் காவலர்களால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, மனநல பாதிப்பில் 43 பேர் உள்ளனர். இவர்களில் 15 பேர் தண்டனைக் கைதிகள். எஞ்சிய 28 பேர் விசாரணைக் கைதிகள்.  மன அழுத்தம், மனச் சிதைவு, சிறிய மனநல பாதிப்பு ஆகியவற்றில் சிக்கித் தவிக்கும் கைதிகளின் எண்ணிக்கை பல ஆயிரங்களை தாண்டும் என கூறப்படுகிறது.

 ஆள் பற்றாக்குறையே காரணம்? 

கைதிகள் இறப்புக்கும், மனநலம் பாதிப்புக்கும் மருத்துவ வசதியும், காவலர்கள், ஊழியர்கள் எண்ணிக்கை குறைவே காரணமாக கருதப்படுகிறது. தமிழக சிறைகளில் மொத்தம் அனுமதிக்கப்பட்ட 5174 பணியிடங்களில், 4014 பணியிடங்களிலேயே ஊழியர்கள் உள்ளனர். 

 எஞ்சிய 22 சதவீதப் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. கைதிகளின் நன்னடத்தையைக் கண்காணிக்கும் சீர்திருத்த அலுவலர் பணியிடங்களும், மருத்துவ ஊழியர்களின் பணியிடங்களுமே அதிகமாக காலியாக இருக்கின்றன.

 மேலும், மனநலம் பாதிப்புக்குள்ளாகும் கைதிகளுக்கு சிகிச்சை அளிக்காமல், தனிமைச் சிறையில் அடைக்கப்படுவதாகவும், உடல் நலக் குறைவால் பாதிக்கப்படுவோருக்கு மருத்துவச் சிகிச்சை சரிவர அளிக்காமல் உள்ளதாகவும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

 மத்தியச் சிறைகளில் உள்ள மருத்துவமனைகளில் கூட மருத்துவ வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் கைதிகள் நோயால் பாதிக்கப்படும்போது, அவர்கள் விரும்பும் சிகிச்சையை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.

 எனவே, சிறையில் போதிய அளவுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும்; இதுதவிர, ஆள் பற்றாக்குறை போன்ற குறைகளைக் களைய வேண்டும்; கைதிகளிடம் குறைதீர் கூட்டம் நடத்தி குறைகளைக் களைய வேண்டும் என்றே மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 "மரணத்தை நெருங்குவோருக்கும் விதிவிலக்கு இல்லை'

 இதுகுறித்து சிறை கைதிகள் உரிமைகள் மைய இயக்குநரும், வழக்குரைஞருமான பா.புகழேந்தியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
 எய்ட்ஸ், புற்றுநோய், ஆஸ்துமா,நெஞ்சு வலி, சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படும் கைதிகளுக்கு சிறப்பு மருத்துவர்களால் தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. இவர்களுக்கு சனிக்கிழமைதோறும் அரசு மருத்துவமனைகளுக்கு மட்டும் அழைத்து செல்லப்படுகின்றனர்.

 சிறை விதிகள் 602-இன் கீழ், மரணத்தை நெருங்கும் கைதிகளையோ விடுவிப்பதற்கான அதிகாரம் சிறைத்துறையிடம் உள்ளது. ஆனால் இந்த விதிமுறை பின்பற்றப்படுவதில்லை. 

 இந்தச் சூழ்நிலைகளினால் சிறையில் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றார்.

நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.