Sunday, January 5, 2014

உறைபனியில் சிக்கிய சீன மீட்புக் கப்பலை விட்டுவிட்டுப் பயணத்தை தொடரும் ஆஸ்திரேலிய கப்பல்

கடந்த 1911-14 ஆம் ஆண்டுகளில் அண்டார்டிகாவில் ஆராய்ச்சி மேற்கொண்ட சர் டக்லஸ் மாசனின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட எண்ணிய விஞ்ஞானிகள், சுற்றுலாப் பயணிகள், பத்திரிகையாளர்கள் அடங்கிய 52 பேர் கொண்ட குழு ஒன்று கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் தேதி அண்டார்டிகா நோக்கிப் பயணமானார்கள். 

அவர்களைச் சுமந்து சென்ற அகடெமிக் ஷோகல்ஸ்கி என்ற ரஷ்யக்கப்பல் கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி பிரெஞ்சுத்தளமான டுமோன்ட் டி உர்வில்லேயிலிருந்து 100 கடல்மைல் தொலைவில் உறைபனியில் சிக்கி நிலைகொண்டது.

இதனை மீட்க பிரான்ஸ், சீனா மற்றும் ஆஸ்திரேலிய மீட்புக் கப்பல்கள் சென்றன. கடந்த சனிக்கிழமையில் இருந்து ரஷ்யக் கப்பலின் அருகே செல்ல முயன்ற முயற்சிகள் பலிக்காத நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று சீனக் கப்பலில் இருந்த 52 பயணிகளும் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக ஆஸ்திரேலியக் கப்பலுக்கு மாற்றப்பட்டனர். பின்னர் தனது பயணத்தைத் தொடங்க நினைத்தபோது சீனாவின் மீட்புக் கப்பல் ஒரே இடத்தில் நின்றிருந்ததால் உறை பனியில் சிக்கிக்கொண்டது. இன்று காலை வானிலையும், கடலின் தன்மையும் சாதகமாக இருந்தால் வெளிவர முயற்சிக்கலாம் என்று நினைத்திருந்தனர். சீனக் கப்பலுக்கு உதவி தேவைப்படும் என்ற எண்ணத்தில் ஆஸ்திரேலியக் கப்பலும் அங்கேயே நிறுத்தப்பட்டது.

இன்று காலையும் சீனக் கப்பலை வெளிக்கொண்டுவர முடியவில்லை. ஏற்கனவே ரஷ்யக் கப்பலும் அதன் 22 ஊழியர்களுடன் அங்கேயே உள்ளது. எனவே, தாங்கள் இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு காலநிலை மாற்றத்தைப் பொறுத்து திரும்பலாம் என்று இரு கப்பலின் ஊழியர் தலைவர்களும் முடிவு செய்ததை அடுத்து ஆஸ்திரேலியக் கப்பல் தனது பயணத்தை இன்று துவக்குவதாக ஆஸ்திரேலியக்  கடல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

இரண்டு கப்பல்களிலுமே தேவையான உணவுப் பொருட்கள் கையிருப்பு உள்ளதால் பிரச்சினைகள் எதுவுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 52 பயணிகளுடன் கிளம்பும் ஆஸ்திரேலிய மீட்புக் கப்பல் அண்டார்டிகாவின் கேசி தளத்தில் சில பொருட்களை இறக்கிவிட்டு ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் துறைமுகத்திற்கு செல்லவிருப்பதாகவும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.                                                                                                                         

செய்தி : மாலைமலர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.