Monday, January 6, 2014

பாராளுமன்றத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும்



பாராளுமன்றத்  தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும்: தேர்தல் கமிஷன் தீவிர பரிசீலனை

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமைக்குரிய இந்தியாவில் தற்போது 15-வது பாராளுமன்றம் செயல்பட்டு வருகிறது. இதன் பதவிக்காலம், வரும் ஜூன் 1-ந்தேதி முடிகிறது. புதிய 16-வது பாராளுமன்றம் மே 31-ந்தேதிக்குள் அமைக்கப்படவேண்டும். இதற்கு ஏற்ற வகையில் புதிய பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க வேலைகளில் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் வாக்காளர்கள் பட்டியலில் அடுத்த மாத இறுதிக்குள் திருத்தங்கள் செய்து முடிக்க வேண்டும் என அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்து இறுதி செய்யும் பணி தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் 80 கோடி வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றிருப்பார்கள். இந்த தேர்தலை 5 அல்லது 6 கட்டங்களாக நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் பரிசீலித்து வருகிறது. 

பாராளுமன்ற தேர்தல் தேதி குறித்து தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் கூறுகையில், “தேர்தல் அட்டவணை அடுத்த மாதத்தின் கடைசி நாட்கள் அல்லது மார்ச் மாதம் முதல் 3 தினங்களில் அறிவிக்கப்படலாம்” என தெரிவித்தன.

முதல் கட்டத்தேர்தலுக்கு 6 வாரங்களுக்கு முன்பாக தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பாக, பாராளுமன்ற தேர்தலை சுமுகமாகவும், நேர்மையாகவும், எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியாக நடத்தி முடிப்பதற்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய அரசின் உள்துறை செயலாளருடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தும். கடந்த பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 16-ந்தேதி தொடங்கி மே 13-ந்தேதி வரை 5 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. ஓட்டுக்கள் மே 16-ந்தேதி எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்தல் அட்டவணை மார்ச் 2-ந்தேதி அறிவிக்கப்பட்டது.

எனவே வரும் பாராளுமன்ற தேர்தலும் இதே போன்று ஏப்ரல் 16-ந்தேதி தொடங்கி மே 13-ந்தேதி வரை 5 அல்லது 6 கட்டங்களாக நடத்தி முடிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

இந்த பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு கோடியே ஒரு லட்சம் பணியாளர்கள் தேவைப்படுவார்கள், அவர்களில் சரிபாதியளவினர் பாதுகாப்பு படையினர் ஆவார்கள். தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் போலீஸ் டி.ஜி.பி.க்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தேர்தல் பணியாளர்கள் பட்டியலை தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது. தேர்தலில் பதற்றமான பகுதிகளில் குறும்பார்வையாளர்களாக நியமிக்கப்படவேண்டிய மத்திய அரசு அதிகாரிகளின் பட்டியலும் தயாரிக்கப்பட்டு அதற்கான இறுதிவடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று வாக்குச்சாவடிகளும் இறுதி செய்யப்பட்டு வருகின்றன. மொத்தம் 8 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. வாக்காளர்கள், வாக்குப்பதிவு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வசதிக்கு ஏற்ற வகையில் சிற்சில வாக்குச்சாவடிகள் மட்டும் மாற்றி அமைக்கப்படுகின்றன. இந்த தேர்தலுக்கு 12 லட்சம் மின்னணு ஓட்டு எந்திரங்கள் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

தேர்தல் கமிஷன் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து அடுத்த மாத மத்திக்குள் 2½ லட்சம் புதிய எந்திரங்களை வாங்க உள்ளது. ஒட்டு மொத்த தேர்தல் பணிகளும் 3 மாத காலத்திற்கு நடைபெறும் என தெரிய வந்துள்ளது.

பாராளுமன்ற தேர்தலுடன் 3 மாநில சட்டசபை தேர்தலும் சேர்த்து நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. அந்த மாநிலங்கள் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் ஆகும். ஆந்திர சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் 2-ந்தேதியும், ஒடிசா சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் 7-ந்தேதியும், சிக்கிம் சட்டசபையின் பதவிக்காலம் மே 21-ந்தேதியும் முடிகிறது. எனவே இந்த மாநிலங்களுக்கு பாராளுமன்றதேர்தலுடன் சட்டசபை தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் ஆந்திர மாநிலத்தை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கும் பிரச்சினை உள்ளதால், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இது நடந்து முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்றம் ஒரு முறை கூடும். அப்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கிடப்பில் போடப்பட்டுள்ள முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற ஒரு சிறப்பு கூட்டத்தொடர் விரைவில் நடத்தப்படவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.                                                                                                                                   

செய்தி : மாலைமலர் 

0 comments:

Post a Comment

Kindly post a comment.