Friday, January 3, 2014

பாடநூல்களை அச்சிட டெண்டர்: 197 நிறுவனங்கள் பங்கேற்பு



தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் சார்பில் பாடநூல்களை அச்சிடுவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை 197 நிறுவனங்கள் சமர்ப்பித்துள்ளன.

தமிழகம் முழுவதும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான புத்தகங்கள் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் சார்பில் அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது. இந்தப் புத்தகங்களை அச்சிட்டு வழங்குவதற்கான விலை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாக நிர்ணயிக்கப்பட வேண்டும். முதல் கட்டமாக, தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளியில் 197 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

இது தொடர்பாக பாடநூல் கழக வட்டாரங்கள் கூறியது:

தமிழகத்தில் உள்ள அச்சகங்களோடு தில்லி, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்ள நிறுவனங்களும் புத்தகங்களை அச்சிட ஆர்வத்துடன் உள்ளன.முதல் கட்டமாக, தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சமர்ப்பித்துள்ளன. இதைத் தொடர்ந்து அந்த அச்சக நிறுவனங்களில் நேரடியாக ஆய்வு நடத்தப்படும். அதன் பிறகு, தகுதியான நிறுவனங்களிடமிருந்து புதிய விலை நிர்ணயம் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படும்.

இதில் குறைந்த விலை எதுவோ, அந்த விலைக்குப் புத்தகங்களை அச்சிட விரும்பும் நிறுவனங்களின் பட்டியல் தயாரிக்கப்படும். அந்தப் பட்டியலில் உள்ள நிறுவனங்களோடு ஒப்பந்தம் போடப்பட்டு, அடுத்த 2 ஆண்டுகளுக்குப் புத்தகங்களை அச்சிடுவதற்கான ஆணைகள் அவர்களுக்கு வழங்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.                                                                                   

செய்தி : தினமணி  :

0 comments:

Post a Comment

Kindly post a comment.