Tuesday, December 31, 2013

நேதாஜி மரணம் தொடர்பான ஆவணங்கள்: ஆர்டிஐ மனுவுக்கு பதிலளிக்க குடும்பத்தினர் வலியுறுத்தல்


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மர்ம மரணம் தொடர்பான ஆவணங்களை வெளியிடுமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் கோரப்பட்டதற்கு பதிலளிக்குமாறு அவரது குடும்பத்தினர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை வலியுறுத்தியுள்ளனர்.

சிங்கப்பூரில் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வெள்ளையரை எதிர்த்துப் போரிடத் திட்டமிட்ட நேதாஜி 2ஆம் உலகப் போருக்குப் பிறகு மாயமானார். அவரது மரணம் குறித்த மர்மம் இன்றளவும் நீடிக்கிறது.

நேதாஜியின் மரணம் குறித்த ஆவணங்களை அளிக்குமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தில்லியைச் சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் அனுஜ் தார் கோரியிருந்தார். அதற்கு மேற்கு வங்க முதல்வர் அலுவலகம் பதில் அளிக்கவில்லை.

இந்நிலையில், மேற்கண்ட ஆவணங்களை மேற்கு வங்க அரசு வெளியிட வேண்டும் என்று நேதாஜியின் குடும்பத்தைச் சேர்ந்த சந்திரகுமார் போஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவர் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

நேதாஜி தொடர்பான மத்திய அரசின் ரகசிய ஆவணங்களைப் பெறுவதில் தலையிடுமாறு மேற்கு வங்க முதல்வருக்கு நேதாஜி குடும்பத்தைச் சேர்ந்த 30 பேர் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கடிதம் எழுதினர். ஆனால், அந்தக் கடிதம் கிடைத்தது என்ற தகவலைக் கூட முதல்வர் அலுவலகம் தெரிவிக்கவில்லை. முதல்வரைச் சந்திப்பதற்கு முயற்சி மேற்கொண்டும் அவரைச் சந்திக்க இயலவில்லை என்றார் சந்திரகுமார் போஸ்.                                
 செய்தி : தினமணி                          


0 comments:

Post a Comment

Kindly post a comment.