Tuesday, December 31, 2013

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் இயற்கை எய்தினார்

நம்மாழ்வார்
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் காலமானார்

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் இன்று (திங்கள்கிழமை) காலமானார். அவருக்கு வயது 75.

சமீப காலமாக மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வந்த அவர், பட்டுக்கோட்டையின் அத்திவெட்டி அருகே உள்ள பிச்சினிக்காட்டில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக இன்று இரவு சுமார் 9.30 மணியளவில் அவர் மரணமடைந்தார்.

தன் கடைசி காலம் வரை விவசாயிகளிடையே இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நம்மாழ்வார், தமிழகத்தில் இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருவதில் பெரும் பங்கு வகித்தவர்.

உலக நாடுகள் புவி வெப்பமடைதல் பாதிப்பை குறைப்பதற்குப் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இது குறித்த விழிப்புணர்வை தமிழகத்தில் ஏற்படுத்தியதுடன், அதற்கு வித்திடும் இயற்கை வேளாண்மையைப் பரவலாக்குவதற்குப் பாடுபட்டவர்.

கோ. நம்மாழ்வார், தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் 1938 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதி பிறந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை முடித்தார்.

சில காலம் கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் பணியாற்றியவர், அரசின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்து, அங்கிருந்து வெளியேறினார். அதன் பின், இயற்கை வேளாண்மை விழிப்புணர்வுப் பிரச்சாரத்துக்காக தன் வாழ்க்கையையே முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டார்.

கரூர் மாவட்டம் வானகத்தில் ஒரு தன்னார்வ மாதிரி பண்ணை உருவாக்கி, அதனை மிகச் சிறப்பாக நடத்தி வந்த நம்மாழ்வார், இயற்கை வேளாண் முறைகளின் மூலம் பல்லுயிர் வாழும் கானகமாகவே அந்தப் பண்ணையை மாற்றினார்.

இயற்கை வேளாண்மையையொட்டிய பல்வேறு நூல்களை எழுதிய இவர், தனது வயதையும் பொருட்படுத்தாமல் மாநிலத்தின் பல பகுதிகளிலும் கருத்தரங்குகளில் பங்கேற்று, அடுத்தத் தலைமுறைக்கு இயற்கை வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்மாழ்வாரின் மறைவிற்கு பல்வேறு ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ் இணையச் சூழலில், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு நினைவாஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.                                                                                                                             

செய்தி : தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.