Thursday, January 17, 2013

கடவுளைச் சாந்தப்படுத்த 100 அடி எரிகல் பள்ளத்தில் குதித்த இந்தியர்!: 8 மணிநேரப் போராட்டத்திற்குப் பின் மீட்பு !

http://viyapu.com/news_detail.php?cid=11259
அரிசோனா: அரிசோனாவில் கடவுளைச் சாந்தப்படுத்துவதாகக் கூறி, எரி கல்லால் உருவான 100 அடி பள்ளத்தில் குதித்த இந்தியரை, 8 மணி நேர போராட்டத்துக்குப் பின் போலீசார் மீட்டனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள யூனியன் சிட்டியைச் சேர்ந்தவர் பர்மிர்ந்தர் சிங் (28). இவர் கடந்த 11ம் தேதி, திடீரென அரிசோனாவுக்குக் கிளம்பிச் சென்றார். அங்கு எரி கல்லால் உருவானதாகக் கருதப்படும் சுமார் 100 அடி ஆழ பள்ளம் ஒன்று உள்ளது. அன்று மாலை 4 மணி அளவில் பள்ளத்தின் மேற்பகுதியில் பர்மீந்தர் நின்று குதிக்க முயற்சி செய்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த ஊழியர் ஒருவர் பர்மீந்தரை அங்கிருந்து நகரும்படி எச்சரித்தார். ஆனால், அதைக் கேட்காமல் திடீரென அந்தப் பள்ளத்தில் பர்மீந்தர் குதித்தார். இதனையடுத்து அந்த ஊழியர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். அவர்கள் மீட்பு படையினருடன் அங்கு விரைந்து வந்தனர்.

அப்போது பலத்த காற்றுடன் பனி கொட்டியது. எரிகல் பள்ளத்துக்குள் இறங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டன. பேரிடர் மேலாண்மை, அவசரகாலக் குழு உள்ளிட்ட 3 குழுக்களைச் சேர்ந்த 30 பேர் பர்மீந்தர் சிங்கை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு வழியாக அவர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் எரிகல் பள்ளத்தை ஒட்டிய பகுதிக்குச் சென்றனர். அங்கிருந்து பல முறை குரல் கொடுத்தபோது, இரவு 8.22 மணி அளவில் பர்மீந்தர் சிங் உயிருடன் இருப்பது தெரியவந்தது.

உறை பனியுடன் கூடிய சுழல் காற்றில், மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்கள், பர்மீர்ந்தர் சிங் சுமார் 100 அடி ஆழத்தில் விழுந்துள்ளார் என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அவர் சாப்பிடுவதற்காக உணவு, குடிநீர், சிறிய வாக்கிடாக்கி, குளிரைத் தாங்கிக் கொள்ளும் உடை, பிளாஷ் லைட் ஆகியவற்றை கயிற்றின் உதவியுடன் அவருக்கு அனுப்பினர்.

தொடர்ந்து 8 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் அவர் வெளியே மீட்கப்பட்டார். ‘எதற்காக எரிகல் பள்ளத்தில் குதித்தீர்கள் என்று அவரிடம் கேட்டபோது, ‘கடவுளை சமாதானப்படுத்துவதற்காக எரிகல் பள்ளத்தில் குதித்தேன்' என்று பர்மீந்தர் சிங் கூறினார். இதைக் கேட்டு நொந்து போன மீட்புப் படையினர், காயமுற்றிருந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

1 comments:

  1. ஓம்
    மனிதன் தோண்டிய குழாய்க்கிணறு போன்ற சிறிய வாயுடைய பள்ளங்களில் விழுந்த குழந்தைகளை மீட்பது ஊடகங்களில் காட்டப்பட்டிருகின்றன. பொது இடத்தில் பாது காப்பின்றி அவ்வாறு குழிகள் இருப்பது பணி செய்வோரின் அலட்ச்சியப்போக்கும் அறியாமையும் தான்.வழிப்போக்கர்களும் விழிப்புணர்ச்சியின்றி எது நடந்தாலும் கண்டுகொள்ளாமல் செல்வது ஒரு அவல நிலைப்பாடு.பயம், இது செய்தால் சிக்கலாகிவிடுமோ என்ற அச்சமே துயர்துடைக்க மறுத்தலாகிறது.
    நமக்கென்னவென்று அந்த நண்பர் எரிகற் குழியில் விழுந்தவரை காப்பாற்ற முயற்சிக்காவிட்டால் அந்த மனிதர் உயிர்துறந்திருப்பார்.
    வெ.சுப்பிரமணியன் ஓம்

    ReplyDelete

Kindly post a comment.