Thursday, January 17, 2013

ஏசி பெட்டியில் பயணித்த மூதாட்டியை அதிகாலையில் எலி கடித்தது ! முதலுதவிக்குப்பின், எலிகடித்ததாகச் சான்றிதழ் தந்த பின்னரே ரெயில் நகர்ந்தது. !


பெண்ணை எலி கடித்ததால், அரக்கோணம் வந்த சேரன் எக்ஸ்பிரஸ் ரயில், 20 நிமிடம் தாதமமாகப் புறப்பட்டுச் சென்றது.கோவையில் இருந்து சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில், வேலூர் மாவட்டம் அரக்கோணத்துக்கு இன்று அதிகாலை, 5 மணிக்கு வந்தது. ரயிலில், மூன்றடுக்கு "ஏசி' பெட்டியில் கோவையைச் சேர்ந்த மீனாரமணா, 65, என்ற பெண் பயணம் செய்தார்.அதிகாலை என்பதால் பயணிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அரக்கோணம் ரயில்வே ஸ்டேசனுக்கு ரயில் வந்த போது பாத்ரூமில் இருந்து வந்த பெரிய எலி ஒன்று மீனாவைக் கடித்தது. இதனால், மீனா அலறித்துடித்தார். அவர் போட்ட சத்தத்தைக் கேட்டு ரயில்வே டி.டி.ஆர்., இரகோத்துமன் ஓடிச் சென்று பார்த்தார். அவரிடம் எலி கடித்த விபரத்தைச் சக பயணிகள் கூறிய போது, சென்னைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறினார். இதை சக பயணிகள் ஏற்கவில்லை.

எலி கடித்து இரத்தம் வெளியேறி வந்தது. "சென்னை செல்வதற்குள் விஷம் உடம்பில் ஏறி உயிருக்குப் பாதகம் ஏற்படும் அபாயம் உள்ளது. இங்கேயே சிகிச்சை அளிக்க வேண்டும்' என, பயணிகள் தகராறு செய்தனர்.வேறு வழியின்றி அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார். அரக்கோணம் இரயில்வே ஸ்டேஷன் மருத்துவமனை டாக்டர் பாத்திமா, மீனாவுக்கு சிகிச்சை அளித்தார்.செப்டிக் ஆகாமல் இருக்க ஊசி போட்டு, மருந்து, மாத்திரை ஒரு வாரத்துக்கு கொடுத்தார். எலி கடித்த இடத்தில் பேண்டேஜ் போட்டார். டாக்டர் புறப்பட்டு செல்ல முயன்ற போது சக பயணிகள் தடுத்து, எலி கடித்ததாகச் சர்ட்டிபிகேட் கொடுக்க வேண்டும் என்றனர்.வேறு வழியின்றி டாக்டரும் எலி கடித்ததாகச் சர்ட்டிபிகேட் கொடுத்து, அதற்கு எடுத்த சிகிச்சை விபரம், மருந்து, மாத்திரை விபரங்களை எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். அதன் பின், 20 நிமிட தாமதமாக, 5.20 மணிக்கு ரயில் புறப்பட்டு சென்றது.

நன்றி :- தினமலர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.