Tuesday, April 17, 2012

சமூகப் போராளியாக வாழ்ந்த பழ. கோமதிநாயகம்



இப்போது திருநெல்வேலி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம் என்று பிரிக்கப்பட்டுவிட்ட - ஒரு காலத்தில் ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அந்த மாவட்டத்திலேயே தோன்றி, அதே மாவட்டத்தில் கடலில் கலக்கும் தனித்துவம் அப்போது தாமிரவருணி ஆற்றுக்கு இருந்தது. பொதிகைமலைச் சாரலில், தாமிரவருணி ஆற்றின் தண்ணீரைக் குடித்து அந்தத் தண்ணீரில் குளித்து வளர்ந்தவன் நான் என்பதால் என்னில் ஓடுவது தாமிரவருணி ரத்தமாக இருப்பதில் வியப்பென்ன இருக்கிறது?

இப்போது 'சத்யம்' தொலைக்காட்சியின் இணை ஆசிரியராக இருக்கும் எம். பாண்டியராஜன் 'தாமிரவருணி: சமூக-பொருளியல் மாற்றங்கள்' என்கிற புத்தகத்தை என்னிடம் தந்தபோது, பாவநாசம், விக்கிரமசிங்கபுரம், மணிமுத்தாறு நினைவுகளில் நான் ஆழ்ந்தேன். எனக்கே தாமிரவருணியா, தாமிரபரணியா என்கிற குழப்பம் அடிக்கடி வருவதுண்டு. முனைவர் பழ. கோமதிநாயகத்தின் தேர்ந்த முடிவுக்குப் பின்னால் இனி 'தாமிரவருணி' என்றுதான் எழுதுவது என்று முடிவெடுத்துவிட்டேன்.

தமிழக அரசில் பொதுப்பணித்துறையில் 34 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி, பின் விருப்ப ஓய்வுபெற்ற முனைவர் பழ. கோமதிநாயகம் ஓர் அரசு அதிகாரியாக வாழாமல் சமூகப் போராளியாக வாழ்ந்து மறைந்தவர். தமிழகப் பாசனப் பிரச்னைகள் பற்றிய எல்லா சந்தேகங்களுக்கும் தெளிவான, தொலைநோக்குச் சிந்தனையுடன் கூடிய விடையை அளித்தவர் அவர் மட்டுமே என்று துணிந்து கூறலாம். நீர்நிலைகள் பாதுகாப்பு, மணற்கொள்ளை போன்ற பிரச்சினைகளில் அவர் முழுமையான போராளியாகவே இயங்கினார்.

'தமிழக பாசன வரலாறு' 'தமிழகம்... தண்ணீர்... தாகம் தீருமா?' 'பெரியாறு அணை மறைக்கப்பட்ட உண்மைகள்', 'தமிழக ஆறுகளில் மணற்கொள்ளை' என்று பல பயனுள்ள புத்தகங்களைத் தமிழகத்துக்கு அளித்திருக்கும் பழ. கோமதிநாயகம் தாமிரவருணியைத் தனது முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். அந்த முனைவர் பட்ட ஆய்வின் அடியொற்றி, அதை ஒரு நூலாக்கி பழ. கோமதிநாயகத்தின் இரண்டாவது நினைவு நாளில் வெளிக் கொணர்ந்திருக்கிறார் பாண்டியராஜன்.

1970இல் பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனியால் உருவாக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தின் தனிச்சிறப்பே தாமிரவருணிதான். இன்றைய திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் தாமிரவருணி பொதிகை மலையிலிருந்து தோன்றி, 125 கி.மீ. தூரம் தவழ்ந்து மன்னார் வளைகுடாவில் கலக்கிறது.

தமிழில் மிகப் பழமையான சங்க இலக்கியங்கள், இந்த நதியை 'பொருநை' என்று குறிப்பிடுகின்றன. அதன் தற்போதைய பெயருக்கும் அதன் தோற்றத்துக்கும் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டிருக்கின்றன. வடமொழியில் 'தாமிர' என்றால் செம்பு அல்லது சிவப்பு என்று பொருள். 'பர்ண' என்றால் இலை. வர்ண என்றால் நிறம். செம்பு அல்லது சிவப்பு நிற ஆறு என்பதைக் குறிக்கும் விதமாகத் 'தாமிரவருணி' என்று பெயர் வந்திருக்கக்கூடும்.

தாமிரவருணி, மணிமுத்தாறு ஆறுகளைச் சுற்றி- அவற்றை மையமாக்கிக் கொண்டு நடந்த வளர்ச்சிகள், பயிர்ச் சாகுபடியில் ஏற்பட்ட மாற்றங்கள், அவற்றுக்கான காரணங்கள், வெவ்வேறு சாதிகளும் பிரிவினரும் வெவ்வேறு விதமாகத் தண்ணீரைக் கைப்பற்ற நடத்திய போராட்டங்கள் என்று தாமிரவருணி பற்றிய முழுமையான ஓர் ஆய்வு பழ. கோமதிநாயகத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அந்த ஆய்வு வெறும் ஆய்வறிக்கையாக முடங்கிவிடாமல் அதை ஒரு புத்தகமாக வெளிக்கொணர்ந்திருப்பதற்குப் பாண்டியராஜனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பாணதீர்த்தம் அருவியில் குளித்த நிறைவு.

- கலாரசிகன்

நன்றி : 'தினமணி' 25-3-12

0 comments:

Post a Comment

Kindly post a comment.