Thursday, February 9, 2012

குழந்தைகள் கலைக்களஞ்சியம்

கலைக்களஞ்சியம் 2ம் பதிப்பு தொடக்கவிழா

கலைக்களஞ்சியத்தின் திருந்திய இரண்டாம் பதிப்பை, ஒவ்வொரு தொகுதியும் 1000 பக்கங்களைக் கொண்டதாய், 12 தொகுதிகளில் வெளிக்கொணரப் பெரிதும் விரும்பினார் திரு। தி.சு. அவினாசிலிங்கம். 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அதற்குரிய திட்டமும் தயாரிக்கப்பட்டு, தொடக்க விழாவும் நடந்தது. பல்வேறு காரணங்களால் அத்திட்டம் நிறைவேறாமற் போயிற்று. கலைக் களஞ்சியத்தின் திருந்திய இரண்டாம் பதிப்பு வெளிவந்திருந்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் மேலும் பயன்படத்தக்கதாய் அமைந்திருக்கும்.

www.tamilvk.com

பொதுக் கலைக்களஞ்சியத்தைத் தமிழில் முதல் பதிப்பாகத் திறம்பட வெளியிட்டுச் சிறந்த அனுபவம் பெற்ற தமிழ் வளர்ச்சிக் கழகம், 1968இல் குழந்தைகளுக்கெனத் தனியே அழகிய வண்ணப் படங்களுடனும் விளக்கப்படங்களுடனும் கூடிய சிறந்ததொரு குழந்தைகள் கலைக்களஞ்சியத்தைப் பத்துத் தொகுதிகளில் முதல் பதிப்பாக வெளியிட்டது. 1968இல் தொடங்கப்பட்ட குழந்தைகள் கலைக் களஞ்சிய முதல் பதிப்புப் பணி மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் 1976இல் திறம்பட நிறைவேறியது. குழந்தைகள் கலைக் களஞ்சியம் முதற் பதிப்பிற்கும் திரு. ம. ப. பெரியசாமித்தூரன் அவர்களே தலைமைப் பதிப்பாசிரியராக விளங்கினார்.

குழந்தைகள் கலைக்களஞ்சியம் முதல் பதிப்பின் மாதிரிப் படிவம் ஒன்றை 22-03-1965 இல் தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்டது. அம்மாதிரிப் படிவத்திற்குத் தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவர் திரு. தி.சு. அவினாசிலிங்கம் அவர்கள் ஓர் அரிய முகவுரையை எழுதி வெளியிட்டார்கள். அது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

“இன்று குழந்தைகளாக இருப்பவர்களே நாட்டின் வருங்காலக் குடிமக்களாகத் திகழ்வார்கள். வேகமாக வளர்ந்துவரும் விஞ்ஞான உலகத்தில் சிறப்புடன் வாழத் தகுதியுடையவர்களாக அவர்கள் வளர வேண்டும். எத்தனையோ துறைகளில் உலகம் முன்னேறி இருக்கிறது. அந்த முன்னேற்றத்தின் சிறப்பியல்புகளையெல்லாம் இளமையிலேயே அறிந்து கொள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். அது தாய்மொழியில்தான் முடியும்.”

என்று மாதிரிப் படிவ முன்னுரையில் அதன் நோக்கத்தை அழகாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

திரு. சி. சுப்பிரமணியம் அவர்கள்
திரு.சி.சுப்பிரமணியம் அவர்கள்

குழந்தைகள் கலைக்களஞ்சியம் இரண்டாம் பதிப்புப் பணி 1981இல் தொடங்கியது. இதற்கிடையில் திரு தி.சு. அவினாசிலிங்கம் அவர்களின் முதுமை காரணமாக மாநில, மைய அரசுகளின் முன்னாள் அமைச்சராகத் திகழ்ந்த பாரத ரத்னா திரு. சி. சுப்பிரமணியம் அவர்கள் 08-12-1982இல் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுத் தமிழ் வளர்ச்சிக்குச் சீரிய முறையில் வழிகாட்டுவராயினர். இவர் காலத்தில் குழந்தைகள் கலைக்களஞ்சியம் திருந்திய பதிப்பு வெளியிடப் பெற்றது.

குழந்தைகள் கலைக்களஞ்சியம் திருந்திய இரண்டாம் பதிப்பின் முதல் தொகுதி திட்டமிட்டபடி 1981இல் வெளிவந்தது. பத்தாவது தொகுதி 1988இல் வெளிவந்தது. இத் திருந்திய இரண்டாம் பதிப்பை வெளியிடுவதற்கு 12 இலட்சம் ரூபாய் தேவைப்பட்டது. இதில் மைய அரசு 6 இலட்சம் நிதியுதவி வழங்கியது. மீதித் தொகை ஆறு இலட்சத்தைத் தமிழ் வளர்ச்சிக் கழகமே தன் சொந்த நிதி ஆதாரங்களைத் திரட்டிக் குழந்தைகள் கலைக்களஞ்சியம் திருந்திய இரண்டாம் பதிப்பை வெளியிட்டுப் பதிப்புப் பணியைச் சீரிய முறையில் நிறைவேற்றியது.

நேர்த்தியான அறிவுக் கருவூலம்

1. சிறுவர்கள் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டி அவர்தம் பொது அறிவையும், அறிவியல் அறிவையும் வளர்க்கும் நேர்த்தியான அறிவுக் கருவூலம்.

2. இக்களஞ்சியம் பல்வேறு அழகிய வண்ணப்படங்களும், விளக்கப் படங்களும் நிறைந்து சிறந்து விளங்குவது.

3. எளிய, இனிய தமிழ் நடையில், பல்துறை அறிவு பற்றிய சிறுசிறு கட்டுரைகளாக அமைந்தது.

4. அகரவரிசையில் அமைந்த 10 தொகுதிகளைக் கொண்டது; ஒவ்வொரு தொகுதியும் 96 பக்கங்களைக் கொண்டது.

5. பெயர் அளவில் குழந்தைகள் கலைக் களஞ்சியம் என்றாலும் பள்ளி-கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் யாவரும் படித்துப் பயன்பெறும் வகையில் தரமிக்கதாக உருவாக்கப்பட்டுள்ளது.

6. எல்லாத் துறைகளிலும் மக்களுக்குத் தெரிய வேண்டிய இன்றியமையாப் பொருள் பற்றிய கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன.

7. இந்திய மொழிகளில் முதலில் தோன்றிய சிறப்பானதொரு குழந்தைகள் கலைக் களஞ்சியம் இதுவேயாகும்.

8. எல்லா நூலகங்களிலும் இன்றியமையாது இடம்பெற வேண்டியது இக்களஞ்சியம்.

9. இக்களஞ்சியத்தின் ஒவ்வொரு தொகுதியும் ஓர் அறிவுக் கருவூலம்.

பாரத ரத்னா திரு சி. சுப்பிரமணியம் அவர்கள் 1990இல் மகாராட்டிர மாநில ஆளுநராகப் பொறுக் கொண்டதால் 10-03-1990இல் பேராசிரியர் முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தலைமைப் பொறுப் பேற்றுக் கொண்டதால் ஏற்றார்.

திரு.வா.செ.குழந்தைசாமி அவர்கள்
KuzhandhaiSwamy

குழந்தைகள் கலைக்களஞ்சியம்:மறுபதிப்புகள்

குழந்தைகள் கலைக்களஞ்சியம் மிகவும் நேர்த்தியாக அமைந்திருந்ததால் அதற்குப் பொதுமக்களிடமும், மாணவர்களிடமும் சீரிய வரவேற்பிருந்தது. அன்றைய தமிழ்நாடு அரசு குழந்தைகள் கலைக்களஞ்சியத்தின் திருந்திய இரண்டாம் பதிப்பின் மறு பதிப்பைத் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் வழி வெளியிட்டு, படிகள் 10,000 (SETS) சிறுவர் கரும்பலகைத் திட்டத்திற்கும், முதியோர் கல்வித் திட்டத்திற்கும் பயன்படுத்த ஏற்பாடு செய்தது. மீண்டும் தமிழ்நாடு அரசு குழந்தைகள் கலைக்களஞ்சியத்தின் திருந்திய இரண்டாம் பதிப்பினை மறுபதிப்பாக 2,000 படிகள் வெளியிடத் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் நிதி யுதவி வழங்கியது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலம் இதன் நான்காம் பதிப்பை வெளியிடுவதற்கான முயற்சியும் நடைபெற்று வருகிறது.

சிறப்புக் கலைக்களஞ்சியங்கள்

தமிழ் வளர்ச்சியில் இன்றையத் தேவையான 'அறிவியல் தமிழ்' வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வரும் நிறுவனங்களுள், தமிழ் வளர்ச்சிக் கழகமும் அதன் பங்களிப்பும் தனி இடத்தைப் பெற்றுத் திகழ்கின்றது. தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் செயல்பாடு, அதனை "அறிவியல் தமிழ் வளர்ச்சிக் கழகம்" என்று கூறத்தக்க வகையிலேயே அமைந்துள்ளது. அதோடு அது ஒரு "கலைக்களஞ்சியத் தயாரிப்பு மையமாகவே (Encyclopaedia Centre) செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

கலைக்களஞ்சிய உருவாக்கத்தில் பலபொருள் பற்றியத் தகவல்களை எல்லாம் ஒருங்குத் தொகுத்தல் என்பது ஒரு வகை. இது "பொதுக் கலைக்களஞ்சியம்" (General Encyclopaedia) எனப்படுகிறது. ஒருபொருள் பற்றிய அனைத்துத் தரவுகளையும் ஒருங்குத் திரட்டல் என்பது மற்றொரு வகை. இது "சிறப்புக் கலைக்களஞ்சியம்" (Special Encyclopaedia)ஆகும். கலைக்களஞ்சியத்தின் அடிப்படை இயல்புகளாக இருப்பவை: 'தகவல் அளித்தல்' (Informative) 'கற்பித்தல்' (Educative) என்பனவாகும். கலைக் களஞ்சியம் என்பது குறிப்பிட்ட துறை சார்ந்தவர்கள், பொதுவாசகர்கள் ஆகியோரின் தேவைகளை ஒருங்கே நிறைவேற்றும் தன்மை உடையதாகும். இத்தகைய இயல்புகளைக் கொண்ட கலைக்களஞ்சியங்களைத் தயாரிக்கும் அரும்பெரும் பணியைத் தமிழ் வளர்ச்சிக் கழகம் செவ்வனே ஆற்றி வருகிறது.

இதுவரையில் தமிழ் வளர்ச்சிக் கழகம், கலைக்களஞ்சியம் (10 தொகுதிகள்), குழந்தைகள் கலைக்களஞ்சியம் (10 தொகுதிகள்) (இவை இரண்டும் பொதுக் கலைக் களஞ்சிய வகையைச் சேர்ந்தவை) மருத்துவக் களஞ்சியம் (12 தொகுதிகள்) எனும் அரிய திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது. மேலும் ஏழு தலைப்புகளில் எட்டுத் தொகுதிகளில் சித்த மருத்துவ நூல் வரிசை என்ற திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. (இவை சிறப்புக் கலைக்களஞ்சிய வகையில் அடங்கும்). இவற்றோடு அவ்வப்போது, பொது வாசிப்புக்கு உரிய வகையில் சிறு சிறு அறிவியல் நூல்களை வெளியிடும் பணியையும் மேற்கொண்டு வருகிறது. இவ்வகையில் மரபியல், உயிரியல், சுற்றுச்சூழல், செயற்கைக்கோள் எனும் துறைகளில் கீழ்க்காணும் நூல்கள் வெளியிடப்பட்டு, மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளன.

  • உயிரியல் தாளமுறை (1991)
  • செயற்கைக்கோளின் கதை (1991)
  • மனிதன் சுற்றுச்சூழல் மற்றும் வேதிப்பொருட்கள் (1991)
  • 4 பரம்பரை தொடரும் பாதை (1993)

ஆகியன வெளியிடப்பட்டன.

அறிவியல் தமிழ் நூல்களுக்கானப் படம்
Maruthuvak_KalanjiyamAriviyal

0 comments:

Post a Comment

Kindly post a comment.