Sunday, January 15, 2012

உலகம் முழுவதும் வெளியாகும் தமிழ்ப் புத்தகத் தகவல்கள் விரல் நுனியில்





விருபா இணையதள அரங்கில் நிர்வாகி து.குமரேசன்.

சென்னை, ஜன. 14: உலகம் முழுவதும் வெளியாகும் தமிழ்ப் புத்தகங்கள் குறித்த தகவல்களைத் திரட்ட உதவும் விருபா இணையதளம் புத்தகக் காட்சியில் அரங்கு அமைத்துள்ளது.

தமிழில் வெளியாகும் புத்தகங்கள், அதன் ஆசிரியர்கள் குறித்த அத்தனை விவரங்களும் கொண்ட முதல் புத்தகம் ஆங்கிலேயர்களால் 1865-ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

அதனையடுத்து, சுதந்திரத்துக்குப்பின் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சிக் கழகம் சார்பில் 25 தொகுதிகள் கொண்ட புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. அ.ச.ஞானசம்பந்தன், மு.சண்முகம்பிள்ளை உள்ளிட்டோரின் முயற்சியால் 1967 முதல் 1987-ம் ஆண்டு வரை தமிழ்ப் புத்தகங்கள் பற்றிய தகவல்கள் கொண்ட 25 தொகுதிகள் வெளியிடப்பட்டன.

ஆனால், இப்போது தமிழில் அதிக எண்ணிக்கையிலான புத்தகங்கள் வெளிவருவதால் அனைத்து புத்தகங்களின் தகவல்களையும் திரட்டுவது சாத்தியமில்லாததாகிவிட்டது.

இந்நிலையில் தமிழில் வெளியாகும் புத்தகங்களைத் திரட்டும் இணையதளத்தை (WWW.VIRUBA.COM) இலங்கைத் தமிழரான து.குமரேசன் உருவாக்கியுள்ளார்.

2005 முதல் செயல்பட்டுவரும் இந்த இணையதளத்துக்குச் சென்றால் உலகம் முழுவதும் இருந்து எந்தெந்த நாடுகளில் எத்தனை தமிழ்ப் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன, எத்தனை எழுத்தாளர்கள் உள்ளனர், வெளியிடப்பட்ட புத்தகங்களின் பெயர், விலை உள்ளிட்ட புத்தகம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும்.

இது குறித்து இணையதள நிர்வாகி குமரேசன் கூறியது: குறிப்பிட்ட எழுத்தாளர்களையோ அல்லது குறிப்பிட்ட பதிப்பகங்களையோ மட்டும் கருத்தில் கொள்ளாமல், தமிழ் நூல்களைப் பற்றியும் ஆசிரியர்கள், பதிப்பகங்கள் பற்றியும் முழுமையான தகவல்களைப் பெற இந்த இணையதளம் உதவுகிறது.

இலக்கியம், மொழிபெயர்ப்பு, வரலாறு உள்பட பல்வேறு தலைப்புகளில் தகவல் பெற முடியும். ஓர் எழுத்தாளர் எத்தனை பதிப்பகங்கள் மூலம் எத்தனைப் பிரிவுகளில் எத்னைப் புத்தகங்களை எழுதியுள்ளார், பதிப்பக முகவரி, உரிமையாளர்களின் பெயர்கள், விருதுகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பெற முடியும்.

இந்த இணையதளத்தின் புத்தகப் பட்டியலில் தங்களது படைப்புகளை இடம்பெறச் செய்ய விரும்புவோர் வெளியிட விரும்புவோர் சென்னைப் புத்தகக் காட்சியில் விருபா இணையதள அரங்கைத் தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.