Monday, January 30, 2012

கலைமாமணி பட்டம் தரப்பட வேண்டிய கரக ஆட்டக்கார மதுரை ஆடிட்டர்! தவமணி!


சமீபத்தில், சென்னையில் சர்வதேச அளவில் நடைபெற்ற, ஆடிட்டர்களுக்கான கருத்தரங்கின் ஒரு பகுதியாக நடைபெற்ற கலை விழாவில், ஒரு அறிவிப்பு வெளியானது...


"அடுத்து ஆட வருவது, நம் சார்ட்டர்டு அக்கவுண் டென்ட்களில் (ஆடிட்டர்) ஒருவரான தவமணி ...' என்ற அறிவிப்பை தொடர்ந்து, அனைவரது கண்களும், மேடையை நோக்கி பாய்ந்தன.


மேடையேறும் ஆசையால், நானும் பாடுவேன், நானும் ஆடுவேன் என்று, பெயருக்கு மேடையேறி, சொதப்பிவிட்டு இறங்குபவர்கள் பலர் உண்டு. இவரும் அப்படித்தானோ என்று, சந்தேகக் கண்ணோடு பார்த்தவர் கள், வைத்த விழி வாங்காமல் பார்க்குமளவு, ஆடிட்டர் தவமணி, தன் நண்பர் ஜாபர்கானுடன் பிரமாதமாக ஆடினார்.


சிரித்த முகம் மாறாமல், கரகத்தை வைத்து, தலைகீழாக ஏணி மீது ஏறி இறங்கியதையும், கண் இமைகளால், பிளேடை லாவகமாக எடுத்ததும், சிறிய சொம்பின் மீது நின்று, சாகசமாக ஆடியதையும், தரையில் விரித்து வைக்கப்பட்ட சேலையை, தலையில் உள்ள கரகம் விழாமல், உருண்டு< உருண்டு சென்று கட்டிக் கொண்டதையும் பார்த்தவர்கள், நடனத்தின் முடிவில் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர். பக்கத்தில் நின்ற கலைமாமணி விருது பெற்ற முழுநேர நாட்டுப்புற கலைஞர்கள், கட்டிப்பிடித்து, மனதார பாராட்டினர்.


தூங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் கூட நேரமில்லாமல் படிக்க வேண்டிய ஆடிட்டர் படிப்பில், இதை எல்லாம் கற்றுக்கொள்வது எப்படி சாத்தியம்? "நான் கரகாட்டக்காரன்...' என்பதை பெருமையாக சொல்லும் இந்த ஆடிட்டர் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா.


மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் படிக்கும் போது, கல்லூரி தாளாளர் சுந்தரமூர்த்தி மற்றும் கரகாட்ட பயிற்சியாளர் சோமசுந்தரம் ஆகியோரின் தூண்டுதலில், கல்லூரிகளுக்கு இடையிலான, கலாசார போட்டியில் பங்கேற்பதற்காக, இவர் தலையில் ஏறிய கரகம், கடந்த 26 வருடங்களாக இறங்காமல் ஆடிக்கொண்டு இருக்கிறது. பி.காம்., எம்.காம்., ஐ.சி.டபிள்யு., சி.ஏ., என்று படிப்பின் பயணம், ஒரு பக்கம் நடந்து கொண்டு இருந்தது. அதற்கு இணையாக, கரகாட்டக் கலைஞன் என்ற பயணமும் வெற்றி நடை போட்டது.
இன்று, பலரை வைத்து வேலை வாங்குமளவிற்கு, தனியாக, "ஆடிட்' அலுவலகம் வைத்திருக்கும் இவர், மதுரை மாவட்ட ஆடிட்டர் சங்க தலைவராகவும், கல்லூரியில், பகுதி நேர பேராசிரியராகவும் இருக்கிறார். இது தவிர, இன்னும் பல பொது நல அமைப்புகளில் பொறுப்பாளராக இருந்தாலும், தன்னை கரகாட்டமே பிரபலப்படுத்தியது என்பதை பெருமையுடன் சொல்கிறார்.


கரகாட்டக்காரர்கள் என்றால், ஆபாசமாக ஆடுவர், காது கூச பேசுவர் என்ற எண்ணத்தை, மாற்றும்படி செய்தவர். முன்பதிவு இல்லாத ரயில் பயணம் மேற்கொள்ளும் கரகாட்ட கலைஞர்கள், விமானத்தில் செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தவர், கரகம் ஆடினால் வேகம் கிடைக்கும், விவேகம் பிறக்கும், மனம் ஒருமுகப்படும், உற்சாகம் பிறக்கும் என்று, மாணவர்களிடையே பேசி, கரகக்கலையை, அனைவரும் கற்றுக் கொள்ள வழிகாட்டுபவர், தன் குழந்தைகளையும் இதற்காகப் பழக்கப் படுத்துபவர்.


இன்று கரகாட்டக்கலையை உயிராக மதிக்கும் ஆடிட்டர் தவமணி போன்றவர்களுக்குத்தான், கலைமாமணி விருது வழங்க வேண்டும். ஒரு வார்த்தை, இவரை போனில் பாராட்ட வேண்டுமென்று எண்ணுபவர்களுக்காக அவரது தொலைப்பேசி எண்:9976924184.
***

நன்றி ;தினமலர்: 29-01-2012 எம். அற்புதராஜ்


0 comments:

Post a Comment

Kindly post a comment.