Monday, January 30, 2012

இளமையின் ரகசியம் என்ன?85 வயது, "இளைஞர்'


தள்ளாத வயதிலும், தடகள போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் குவித்து, சாதனைக்கு வயது தடையல்ல என்று நிரூபித்து வருகிறார், 85 வயது, "இளைஞர்' ஒருவர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியைச் சேர்ந்த, நடேச ரெட்டி, 85, இதுவரை, 20 தங்கம், 10 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளார். இன்றும், இங்குள்ள, தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்
.
தன் விளையாட்டு அனுபவத்தை கூறும்போது...
திருத்தணி டாக்டர் ராதா கிருஷ்ணன் மேல்நிலைப் பள்ளியில் படித்த போது, தாலுகா அலுவலகத்தில் கிளர்க்காக பணிபுரிந்த, பாலகிருஷ்ணன் என்பவரின் வற்புறுத்தலின் பேரில், விளையாட்டு போட்டிகளில் ஈடுபட்டேன். குண்டு எறிதல், தட்டு எறிதல், உயரம் தாண்டுதல் போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் கிடைத்தன.

பின்னர் 1949ல், சென்னை சைதாப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வி கல்லூரியில், ஓராண்டு படித்து முடித்ததும், 1950-52ம் ஆண்டு வரை நான் படித்த, ராதாகிருஷ்ணன் அரசினர் பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றினேன்.

கடந்த 1959 முதல், 1960 வரை ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி துவாசர்ப்பிக்கல் கல்லூரியில், உதவி உடற்கல்வி இயக்குனராக பணியாற்றிய போது, குந்தூரில் நடந்த மாநில அள விலான விளையாட்டு போட்டியில், கல்லூரி அணிக்கு முதல் பரிசை பெற்று, பதக்க வேட்டையை துவக்கினேன்
.
பின், 1964ல் தமிழ்நாடு கைப்பந்து பயிற்றுனர் பயிற்சிக்காக பாட்டியாலாவுக்கு சென்று அங்கு பயிற்சி முடித்த பின், கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து பயிற்றுனராக, 26 ஆண்டுகள் (1965 முதல்) பணிபுரிந்தேன்
.
இது தவிர, தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில், ஆந்திர மாநில அணியின் துணை கேப்டனாக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்து, ஜபல்பூர், கடக் போன்ற இடங்களில் விளையாடியுள்ளேன். தமிழ்நாடு அணியில் விளையாட்டு வீரராக பங்கேற்று, திருவனந்தபுரம், பாட்டியாலா, ஜம்ஷட்பூர் போன்ற இடங்களில் நடந்த தேசிய அளவிலான கைப்பந்து போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றுள்ளேன்.

ஜெய்ப்பூர் மற்றும் தென் ஆப்ரிக்காவில், 1975ல் நடந்த, அகில இந்திய அளவிலான போட்டிகளில் முதன் முதலாக கலந்து கொண்டபோது, எனக்கு பரிசுகள் கிடைக்கவில்லை. பின், 1985ல் மத்திய பிரதேச மாநிலம் லக்னோவில் தேசிய அளவில் நடந்த தடகள போட்டியில், குண்டு எறிதல், தட்டு மற்றும் வட்டு எறிதல் போட்டிகளில் தங்கப் பதக்கம், ஹேமர்த்ரோ போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றேன்.

கடந்த 2006ல், இலங்கையில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்களையும் பெற்றேன். இதுவரை, 20 தங்கம், 15 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளேன்... என்றார்.

தற்போது, 85 வயதாகியும் இன்னும் சுறுசுறுப்புடன், தான் பணிபுரியும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, பல்வேறு விளையாட்டுகளை கற்று கொடுக்கிறார். கடந்த நவ.,4ல், கடலூரில் மாநில அளவில் நடந்த முதியோர் தின விழாவில், அமைச்சர் சம்பத், இவரை பாராட்டி, சிறந்த விளையாட்டு வீரர் விருதை வழங்கி கவுரவித்தார்.
***

இளமையின் ரகசியம் என்ன?
இவரது இளமையின் ரகசியம்: தினமும் காலை ஒரு மணி நேரம் உடற் பயிற்சி, 3 கி.மீ., வாக்கிங் செல்வது, உணவு கட்டுப் பாடு மற்றும் மாணவர் களுக்கு தினமும் உடற் பயிற்சி கொடுப்பது. மேலும், ஒரு நாளைக்கு இருமுறை பாதாம் பருப்புகளை அரைத்து, இரண்டு டம்ளர் பாலில் கலந்து குடிப் பதால் தான், இளமையாக இருக்கிறார்; தற்போதும் துள்ளி குதித்து விளை யாட்டில் ஈடுபடுகிறார்.
***

நன்றி ; தினமலர் : 29-01-2012 பி. நாராயணன்


1 comments:

  1. அவருக்கு வாழ்த்துக்கள்.

    என் போன்ற தினமலர் படிக்காதவர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு அளித்த உங்களுக்கு நன்றி.

    ReplyDelete

Kindly post a comment.