Wednesday, January 18, 2012

அடிப்படை வசதிகளின்றி எம்.ஜி.ஆர். கனவு நகரம்





கழிவுநீர் தேங்கிக் கிடக்கும் நவல்பட்டு அண்ணாநகர். சி.சண்முகவேல், தினமணி
திருவெறும்பூர்,: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகேயுள்ள நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் தொடங்கிய கனவு நகரம் இன்றளவும் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி உள்ளது.

கடந்த 1981 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தமிழகத்தில் முன் மாதிரி நகரம் உருவாக்கப்பட வேண்டும்; அது என் கனவு நகரமாக இருக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து, 15.9.1984 அன்று அந்த நகரத்தை திருச்சி நவல்பட்டில் உருவாக்கினார். அந்த நகருக்கு அண்ணாநகர் எனவும் பெயர் சூட்டினார். அப்போது, இந்த நகரில் புதை சாக்கடைத் திட்டமும் தொடங்கப்பட்டது. மேலும், இந்த நகருக்கு "சாட்டிலைட் சிட்டி' என்ற மற்றொரு பெயரும் உண்டு.

சுமார் 610 ஹெக்டேரில் புறம்போக்கு மற்றும் மேய்ச்சல் நிலங்களில் சுமார் 2800 குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டன. இந்தக் குடியிருப்புகளைச் சுற்றி இலவசக் கழிப்பறைகள், பூங்காக்கள், மருத்துவ வசதிகள், பள்ளிக் கூடங்கள், விளையாட்டு மைதானம், நகர் முழுவதும் தார்ச் சாலை வசதி, திருச்சிக்கு எளிதில் சென்று வர புதுக்கோட்டையை இணைக்கும் 100 அடிச் சாலை, தெருவிளக்குகள், காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்டவை கட்டித் தரப்பட்டன. பிறகு இந்த நகரத்தை வீட்டு வசதி வாரியத்திடம் தமிழக அரசு ஒப்படைத்தது.

தற்போது, இந்தக் குடியிருப்புகளின் நிலைமை மிகவும் மோசமான நிலையில் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி உள்ளது.

சாலைகள் குண்டும், குழியுமாகவும், இலவசக் கழிப்பறைகளைச் சுற்றி முள் புதர்கள் சூழ்ந்தும் உள்ளன. மேலும், குடிநீர்ப் பிரச்னையும் உள்ளது.சாலைகளின் இருபுறமும் முள்புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படாததால், இந்தப் பகுதியில் கழிவுநீர் குளம்போல தேங்கி நிற்கிறது. சில நேரங்களில் இந்தக் கழிவுநீர் வீடுகளையும் சூழ்ந்து விடுகிறது. அந்த நேரத்தில் மட்டும் ஊராட்சி நிர்வாகத்தினர் வீடுகளைச் சுற்றியுள்ள கழிவுநீரை அகற்றும் செயலில் ஈடுபடுகின்றனர்.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் இந்தப் பகுதி பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதுகுறித்து அண்ணாநகர் குடியிருப்போர் கூறியது:

நாங்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசித்து வருகிறோம். அப்போது இருந்த பசுமையான நகரின் அடிப்படை வசதிகள் தற்போது இல்லை. சாலைகள் எல்லாம் பழுதடைந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை ஊராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக இங்குள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படாமல் உள்ளது. இதனால், கழிவுநீர் குளம்போல தேங்கி நிற்கிறது. இந்தக் கழிவுநீர் கழிவறை குழாய் வழியாக வீட்டினுள் புகுந்து விடுகின்றன.அண்மையில் பெய்த மழைக்கு மழைநீருடன், கழிவுநீரும் கலந்து இந்தப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் புகுந்து விட்டது. இதனால், இந்த வீடுகளில் வசிக்க முடியாமல் பலர் வேறு இடங்களுக்குச் சென்று விட்டனர்.இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை என்றனர் அவர்கள்.எனவே, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் கனவு நகரமான அண்ணாநகர் பகுதியில் குறைந்தபட்சம் அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க மாவட்டம் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

0 comments:

Post a Comment

Kindly post a comment.