Tuesday, January 3, 2012

சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 5-ல் தொடக்கம்


35-வது சென்னை புத்தகக் காட்சி, பூந்தமல்லி சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 5-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை
சென்னை, ஜன. 2: சென்னை புத்தகக் காட்சி வரும் ஜனவரி 5-ம் தேதி முதல் ஜனவரி 17-ம் தேதி வரை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெறுகிறது.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் ஆர். சண்முகம் சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் 35-வது சென்னை புத்தகக் காட்சி, வரும் 5-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. சட்டப்பேரவைத் தலைவர் டி. ஜெயகுமார் தொடங்கி வைத்து விருதுகளை வழங்குகிறார். துவக்க விழாவில் தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்தக் காட்சியில் பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், ஊடகங்கள், நிறுவனங்கள் பங்குபெறும் 682 அரங்குகள் இடம்பெற உள்ளன. தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை பதிப்பாளர்களின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும். மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பட்டிமன்றம், இலக்கிய சொற்பொழிவுகள் நடைபெறும்.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு 9-ம் தேதி காலை 10 மணிக்கு செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியிலும், கல்லூரி மாணவர்களுக்கு 12-ம் தேதி ராணி மேரி கல்லூரியிலும் நடைபெற உள்ளது.

இது தவிர சிறுவர், சிறுமியர்களுக்கு ஓவியப் போட்டி நடைபெறுகிறது. 6 வயது முதல் 8 வயது வரை ஒரு பிரிவாகவும், 9 முதல் 12 வயது வரை 2-வது பிரவாகவும், 13 முதல் 16 வயது வரையிலான சிறுவர், சிறுமியர் என 3-வது பிரிவாகவும் போட்டிகள் நடைபெறும்.

போட்டி 10-ம் தேதி காலை 8 மணி

முதல் 10 மணி வரை புத்தகக் காட்சி வளாகத்திலேயே நடைபறும்.

நுழைவுக் கட்டணம்: புத்தக காட்சிக்கு நுழைவு கட்டணமாக ரூ. 5 வசூலிக்கப்படும். 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர், பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி. கடன் அட்டை மூலம் புத்தகங்களை வாங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கள்ள நோட்டுகளை எவ்வாறு கண்டறிவது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கமளிக்கின்றனர். அவை குறித்த நூல்களையும் அந்த அரங்கில் வாங்கிக் கொள்ளலாம்.

கடந்த ஆண்டு 8 லட்சம் புத்தகங்கள் விற்பனையானது. இந்த ஆண்டு 10 லட்சம் புத்தகங்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் புத்தகக் காட்சியை சுற்றி வருவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார் சண்முகம்.

இந்த சந்திப்பின்போது சங்கத்தின் துணைத் தலைவர்கள், சுப்பிரமணியன், ராம. லெட்சுமணன், செயலாளர் எஸ். வைரவன், பொருளாளர் வெங்கடாசலம், துணைச் செயலாளர் டி.ஆர்.ராமானுஜம், இணைச் செயலாளர் ஏ.ஆர்.சிவராமன் உள்ளிட்டோர் உட இந்த சந்திப்பின்போது சங்கத்தின் துணைத் தலைவர்கள், சுப்பிரமணியன், ராம. லெட்சுமணன், செயலாளர் எஸ். வைரவன், பொருளாளர் வெங்கடாசலம், துணைச் செயலாளர் டி.ஆர்.ராமானுஜம், இணைச் செயலாளர் ஏ.ஆர்.சிவராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.