Monday, January 16, 2012

முல்லைத்தீவில் தமிழர்களுக்குச் சொந்தமான 1500 ஏக்கர் விவசாய நிலம் படையினரால் ஆக்கிரமிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் முறைப்பாடு

http://www.thinakkural.com/news/all-news/jaffna/9886----1500---------.html


முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையோர கிராமங்களில் பொதுமக்களுக்குச் சொந்தமான 1500 ஏக்கர் வரையான விவசாய நிலம் அரசாங்கத்தினாலும் படையினராலும் திட்டமிடப்பட்ட வகையில் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக கவலை தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், அடுத்த இரு வருடங்களில் எல்லையோர கிராமங்களிலிருந்து தமிழ் மக்கள் துரத்தப்படும் அபாயம் உள்ளதாகவும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

மாவட்டத்தின் எல்லையோர கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருணாற்றுக்கேணி ஆகிய கிராமங்களுக்குச் சொந்தமான மேற்படி விவசாய நிலங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை என்ற காரணத்தை கூறி மக்கள் தமது சொந்த நிலங்களுக்குச் செல்வதற்கான அனுமதியை படையினர் தொடர்ந்தும் மறுத்து வருகின்றனர்.


இது தொடர்பில் ஆராய்வதற்கென கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவைசேனாதிராசா மற்றும் சி.சிறிதரன் ஆகியோர் இந்தப் பகுதிக்குச் சென்றிருந்தபோது இது தொடர்பில் மக்கள் சுட்டிக்காட்டினர்.
இது குறித்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அந்த மக்கள் சுட்டிக்காட்டினர்.


இது குறித்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அந்த மக்கள் மேலும் தெரிவிக்கையில்;


ஆமையன்குளம், உத்தராயன்குளம், அடையக்கறுத்தாள், பூவமடுக்கண்டல், எரிஞ்சகாடு, நாய்க்கடிச்ச முறிப்பு, தட்டாமலை, சகலாத்து வெளி, சுவந்தா முறிப்பு ஆகிய பகுதிகளில் பொது மக்களுக்குச் சொந்தமான சுமார் 1500 ஏக்கர் வரையான நிலம் 1984 ஆம் ஆண்டு தொடக்கம் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து வருகின்றது.


இந்நிலையில் யுத்தத்தின் பின்னர் மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் தமக்குச் சொந்தமான நிலங்களில் விவசாயத்தை மேற்கொள்ள முயற்சித்தபோதும், இதற்கான அனுமதியை படையினர் தொடர்ந்தும் மறுத்து வருகின்றனர். குறிப்பாக இந்தப் பகுதிக்கு செல்வதற்கு கொக்கிளாய் ஆற்றைக் கடந்தே செல்லவேண்டியிருக்கின்றது. இந்நிலையில் இந்த ஆற்றை தமிழர்கள் கடப்பதற்குப் படையினர் அனுமதி மறுத்துள்ளனர்.


காரணம் கேட்டால், கண்ணிவெடிகள் அற்றப்படவில்லை என தெரிவிக்கின்றனர். இதனால் நிலங்களுக்கான ஆவணங்களை கொண்டிருக்கின்ற மக்கள் தமது சொந்தக் காணிகளை சென்று பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது. இதேபோல், மீளக்குடியேற்றம் செய்யப்பட்டு பல மாதங்களாகின்றபோதும் வாழ்வாதார நிலைகள் மேம்பாடு காணப்படாத நிலையில் மக்கள் வறுமையின் பிடிக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
இந்த நிலை தொடருமானால் அடுத்த இரு வருடங்களுக்ள் தமிழர்கள் தமது சொந்த இடங்களை விட்டு தொழிலுக்காகவும் தமது குடும்பங்களை பாதுகாப்பதற்காகவும், இடம்பெயர்ந்து மாற்றிடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும்.


இதேபோல், தமிழர்களுக்குச் சொந்தமான நிலத்தில் அத்துமீறிய வகையில், சிங்கள மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். மிகவும் வசதிகளுடனும் அதிக பாதுகாப்புடனும் அவர்கள் விவசாய நடவடிக்கையினை மேற்கொள்கிறார்கள்.
எனவே அவர்கள் அங்கிருந்து விலகிச் செல்வார்கள் என நாம் நம்பவில்லை, குறிப்பாக கொக்கிளாய் முகத்துவாரம் பகுதி எவ்வாறு சிங்கள, முஸ்லிம் மீனவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றதோ, அவ்வாறான நிலை தமிழர்களுக்குச் சொந்தமான இந்த விவசாய நிலங்களிலும் ஏற்பட்டிருக்கின்றது.
அந்தப் பகுதிகள் சிங்கள மக்களுக்கு அரசாங்கத்தினாலும், படையினராலும் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதனாலேயே அந்தப் பகுதிக்கு மக்கள் செல்வதற்கான அனுமதியை படையினர் மறுத்து வருகின்றனர். படையினர் சொல்வதைப்போன்று அங்கு கண்ணிவெடிகள் எவையும் கிடையாது.
எனவே இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்திக் கேட்டனர். தொடரும் நில அபகரிப்பை தடுத்து நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்தனர்.


இதற்குப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் சம்மந்தப்பட்டவர்களுடன் பேசி உரிய தீர்வு காணப்படும். மேலும் மக்கள் தமது காணிகளுக்கான ஆவணங்களை பார்த்து வைத்திருக்குமாறும், எக்காரணத்தைக் கொண்டும் தமது நிலங்களை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டனர்.


0 comments:

Post a Comment

Kindly post a comment.