Tuesday, November 1, 2011

ஒரு லட்சம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப BSNL திட்டம். அதிர்ச்சியில் ஊழியர்கள்

நஷ்டத்தை ஈடுகட்ட, ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து, விருப்ப ஓய்வு அளிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது பி.எஸ்.என்.எல்., நிறுவனம். இதனால், அன்றாடப் பணிகளில் தொய்வு ஏற்படும் எனத் தெரிவித்துள்ள தொழிற்சங்கங்கள், விருப்ப ஓய்வு திட்டத்துக்கு, எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்தியத் தொலைத்தொடர்பு சேவையின் துவக்க காலத்தில், பி.எஸ்.என்.எல்., நிறுவனமே பிரதானமாக இருந்தது. தனியார் நிறுவனங்களின் வருகைக்குப் பின், பி.எஸ்.என்.எல்., வளர்ச்சியும், வருவாயும் குறைந்து போனது. இதனால், அரசின் தனியார்மய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஊழலை எதிர்த்தும், பி.எஸ்.என்.எல்., தொழிற்சங்கங்கள் கூட்டாக போராட்டம் நடத்தி வருகின்றன.இந்நிலையில், நஷ்டத்தை ஈடுகட்டும் நோக்கில் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டத்தை, பி.எஸ்.என்.எல்., துவக்கியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையை பி.எஸ்.என். எல்., நிர்வாகம், தொழிற்சங்கங்களுடன் டில்லியில் நடத்தியுள்ளது. இது, பி.எஸ்.என். எல்., ஊழியர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


இதுகுறித்து, பி.எஸ். என். எல்., கூட்டுக்குழு நிர்வாகிகள் கூறியதாவது:பி.எஸ்.என்.எல்., 2004-05ம் ஆண்டில், 10 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. அதன் பின், மோசமான நிர்வாகத்தால், வருவாய் படிப்படியாக குறைந்துள்ளது. இந்த ஆண்டு, 6,000 கோடி ரூபாய் வரை நஷ்ட கணக்கு காட்டப்படுகிறது."நாடு முழுவதும், 2.5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் ஒரு லட்சம் ஊழியர்கள் உபரியாக இருக்கின்றனர்; இவர்களுக்கு விருப்ப ஓய்வு அளித்து, மாதாந்திர செலவினத்தை கட்டுப்படுத்தி, நஷ்டத்தை ஈடுகட்டலாம்' என, பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் கருதுகிறது.வி.ஆர்.எஸ்., திட்டத்தை செயல்படுத்த, ஊழியர்கள் மற்றம் அதிகாரிகளின் தொழிற்சங்கங்களுடன் டில்லியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இது, ஊழியர்களிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. விருப்ப ஓய்வு அளிக்க, சாதாரண ஊழியர் முதல் உயரதிகாரிகள் வரை ஆசை வார்த்தை காட்டுகின்றனர்.


மும்பையில் எம்.டி.என். எல்., நிறுவனமாக இருந்த போது, லாபத்தை அதிகரிக்க விருப்ப ஓய்வு திட்டத்தை செயல்படுத்தினர். ஆனால், லாபம் கிடைக்கவில்லை. உண்மையில், ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளித்தால், பி.எஸ்.என்.எல்., வளர்ச்சி முற்றிலும் பாதித்துவிடும். தற்போதே பணிகள் தேங்குகின்றன. ஒரே நேரத்தில் லட்சம் பேர் விலகினால், ஒட்டுமொத்த பணியும் வெகுவாக பாதித்துவிடும்.இவ்வாறு, கூட்டுக்குழு நிர்வாகிகள் கூறினர்.பி.எஸ்.என்.எல்., உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "விருப்ப ஓய்வு தொடர்பாக, டில்லியில் பேச்சு நடக்கிறது. இதுவரை எழுத்துப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வரவில்லை,' என்றார். (ஏ.எஸ்.)

1 comments:

  1. பி எஸ் என் எல் போல பல நிறுவனக்களும் இதே வழியைத்தானே கடைப்பிடித்துவருகின்றன.பொதுமக்கள் நிலைதான் பரிதாபம். வேர என்ன சொல்ல?

    ReplyDelete

Kindly post a comment.