Thursday, November 3, 2011

இயற்கையுடன் இணந்த இலவசக் கல்விக்கு வேலூர் குசும்புபாளையத்தில் பிள்ளையார்சுழி!




சென்னையை அடுத்த வேலூர்தான் இவருக்குச் சொந்த ஊர். ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவர். இவருடைய தந்தை ஆரம்ப காலங்களில் விவசாயமும் கூலிப் பணிகளையும் செய்து குடும்பச் செலவுகளைச் சமாளித்துள்ளார். இவரது பெயர் ராமு மணிவண்ணன். இவரது சுதந்திரப் போராட்டத் தியாகி.

பள்ளிப்படிப்பை வேலூரிலும், பட்டம், பட்ட மேற்படிப்புகளைச் சென்னையிலும் முடித்துள்ளார். பின்னர் ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருந்தார்; பின் 4 ஆண்டுகள் ஆசிரியர் பணியையும் மேற்கொண்டுள்ளார்.இந்தியாவுக்கு திரும்பிய அவர், தில்லி பல்கலைக்கழகத்தில் 18 ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். இப்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல்துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவரிடம், இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் சிறு வயதிலேயே துளிர்விட்டுள்ளது. இதற்காகப் பல்வேறு முயற்சியில் இறங்கிய இவர், இறுதியில் இலவசக் கல்வி வழங்குவதே சிறந்தது என்ற தீர்மானத்துக்கு வந்துள்ளார்.

இந்தக் கனவை தனது 36-வது வயது முதல் நனவாக்கியும் வருகிறார்.மாலை நேரப் பள்ளிகள்: வேலூரில் கல் குவாரிகளுக்கு வேலைக்குச் செல்பவர்களின் குழந்தைகளுக்கும், ஆரணியில் பட்டு நெசவுத் தொழிலுக்குச் செல்பவர்களின் குழந்தைகளுக்கும் கல்வி வழங்குவதற்காக மாலை நேரப் பள்ளி முறையை 1998-ல் அறிமுகம் செய்துள்ளார்.அடுத்த கட்டமாக, வேலூர் அருகே குசும்புப்பாளையம் கிராமத்தில் 2004-ல் பள்ளி ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

ஒரு சில சமூக சேவகர்களின் உதவி மற்றும் தன்னுடைய தொழிலாளர் சேம நல நிதியின் பெரும் பகுதியைக் கொண்டு, இப்பள்ளியை உருவாக்கியுள்ளார். இது குறித்துப் பேராசிரியர் ராமு மணிவண்ணன் கூறியது:சிறு வயதில் வறுமையை நன்கு உணர்ந்ததால், அதை ஒழிக்க எனது சிறு முயற்சியை எடுத்து வருகிறேன்.முதலில் எனது சொந்த ஊரில் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக மாலை நேரப் பள்ளி என்ற பெயரில், மரத்தடி பள்ளிகளை நடத்தி வந்தேன்.

இப்போது வேலூர் மாவட்டத்தில் 10 மாலை நேரப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.பசுமைப் பள்ளி: இதற்கு அடுத்த கட்டமாக, குசும்புப்பாளையம் கிராமத்தில் ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்குவதற்காக பள்ளி ஒன்றை ஆரம்பித்துள்ளேன். இலவசக் கல்வி மட்டும் அல்லாமல், இலவச உணவு, சீருடை, இலவசப் போக்குவரத்து வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

ஏழு மாணவர்கள் ஒரு ஆசிரியருடன் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி இப்போது 150 மாணவர்கள், ஏழு ஆசிரியர்கள் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. 5-ம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியை, பிளஸ்-2 வரை தரம் உயர்த்துவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்.

இயற்கையோடு இணைந்திருக்க வேண்டும் என்பதற்காக, மண் சுவர்கள் மூலம் பள்ளி கட்டப்பட்டுள்ளது. பள்ளியைச் சுற்றியுள்ள நிலத்தில் தானியங்கள், காய்கறிச் செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. பள்ளி வளாகத்தில் 2 மரங்கள் இருந்த நிலையை மாற்றி, ஆயிரம் மரங்களுடன் இயற்கை எழில் மிக்கச் சூழலை உருவாக்கியுள்ளோம்.

இதுமட்டும் அல்லாமல், 15 கறவை மாடுகளைப் பராமரித்து வருகிறோம்.இங்கு பயிரிடப்பட்டுள்ள செடிகளிலிருந்து கிடைக்கும் காய்கறிகள், தானியங்கள், பசும் பால் ஆகியவை பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன.சமூகக் கல்லூரி:

இதற்கு அடுத்த கட்டமாக இங்கு சமூகக் கல்லூரி ஒன்று தொடங்கும் திட்டமும் உள்ளது.இந்தக் கல்லூரி மூலம், பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு கைத்தறி நெசவுப் பயிற்சி, இயற்கை விவசாயப் பயிற்சி மற்றும் கைத்தொழில்கள் கற்றுத் தரப்பட்டு, அவர்களின் பொருளாதார நிலை உயர அடித்தளமிடப்படும்.

இந்தக் கனவுகளை நனவாக்க, மேலும் சிலரின் உதவிகள் தேவைப்படுகின்றன என்றார் அவர்.விருப்பமுள்ளவர்கள் பள்ளிக்கு உதவ 94433 48942 என்ற செல்பேசியில் பேராசிரியர் ராமு மணிவண்ணனைத் தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.