Thursday, November 3, 2011

சென்னையில் இரண்டு ஏ.சி. மினி பஸ்கள்!



சென்னையில் இரு வழித் தடங்களில் ஏ.சி. மினி பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்திலிருந்து எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் மேற்கு அண்ணாநகர் ஆகிய வழித்தடங்களில் நவீன வசதிகளுடன் கூடிய 4 குளிர்சாதன மினி பஸ்களை மாநகரப் போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது.

விமானப் பயணிகளின் வசதிக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பஸ்கள் புதன்கிழமை முதல் வழித்தடங்களில் இயங்கத் தொடங்கியுள்ளன. குளிர்சாதன வசதி, 16 வெல்வெட் இருக்கைகள், பொருள்களை வைப்பதற்கென தனி இடவசதி, பஸ் இருக்கும் இடத்தைத் தெரிவிக்கும் ஜி.பி.எஸ். கருவிகள், தானியங்கிக் கதவுகள், மின்னியல் வழித்தடப் பலகை உள்ளிட்ட நவீன வசதிகள் இந்த பஸ்களில் உள்ளன.

விமான நிலையத்திலிருந்து எழும்பூர் ரயில் நிலையத்துக்கு (தடம் எண்.1) 2 பஸ்களும், விமான நிலையத்திலிருந்து மேற்கு அண்ணாநகருக்கு (தடம் எண்.2) 2 பஸ்களும் இயக்கப்படுகின்றன. செல்லும் வழி: சென்னை விமான நிலையத்திலிருந்து எழும்பூர் ரயில் நிலையம் செல்லும் பஸ்கள், கிண்டி, அண்ணா பல்கலைக்கழகம், மத்திய கைலாஷ், அடையாறு, மந்தைவெளி, அடையாறு கேட் ஹோட்டல், ஆழ்வார்பேட்டை மேம்பாலம், கதீட்ரல் சாலை, அண்ணாசாலை, கன்னிமாரா ஹோட்டல் வழியாக எழும்பூர் சென்றடைகிறது. இதற்கான பயணக்கட்டணம் ஒருவருக்கு ரூ.150.

விமான நிலையத்திலிருந்து மேற்கு அண்ணாநகருக்குச் செல்லும் பஸ்கள் கத்திபாரா மேம்பாலம், காசி தியேட்டர், உதயம் தியேட்டர், அசோக் பில்லர், வடபழனி காவல் நிலையம், சென்னை புறநகர் பேருந்து நிலையம், திருமங்கலம் வழியாக மேற்கு அண்ணாநகரை சென்றடையும். இதற்கான பயணக்கட்டணம் ஓர் பயணிக்கு ரூ.100.

இப்போதுள்ள குளிர்சாதன பஸ்கள் பல்வேறு நிறுத்தங்களில் நின்று செல்லும் வகையில் இயங்கி வருகின்றன. இதற்கான கட்டணம் சாதாரண பஸ்களுடன் ஒப்பிடும் போது மூன்று மடங்கு வரை அதிகம்.

ஆனால், குளிர்சாதன ஏ.சி. மினி பஸ்களைப் பொறுத்தவரை எங்கு ஏறினாலும் ஒரே கட்டணம்தான். குறைவான இருக்கைகள் என்பதால் ஒவ்வொரு நிறுத்தத்துக்கும் ஒவ்வொரு வகையான கட்டணம் என்பதை நிர்ணயித்தால் வருவாய் கிடைப்பது கடினம் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.