Saturday, November 5, 2011

மூளைச்சாவுப் பெண்மணியின் குடும்பத்தார் சம்மதத்தால் அப்போலோ டாக்டர்கள், அறுவருக்கு மறுவாழ்வு அளித்தனர்!



விபத்தில் மூளைச்சாவு அடைந்த சென்னை பெண்ணின் உறுப்புகள் 6 பேருக்கு பொருத்தப்பட்டன.

சென்னை உள்ளகரம் பகுதியை சேர்ந்தவர் திலகவதி (வயது 53). இவர் சாலை விபத்தில் காயம் அடைந்து அப்பல்லோ மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் மூளைச்சாவு அடைந்தார். உடனே அவரது உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க அவரது உறவினர்கள் முன்வந்தனர். இதனால் அவருடைய இரு விழிவெண்படலங்களும் சங்கர நேத்திராலயா கண் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் இருதயம், இரு சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியவை அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்களால் அகற்றப்பட்டது. பின்னர் இருதயம் 63 வயது பெண்ணுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து பொருத்தப்பட்டது. கல்லீரல் கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு பொருத்தப்பட்டது. சிறுநீரகங்கள் 2 பேருக்கு பொருத்தப்பட்டன.

இந்த அறுவை மாற்று சிகிச்சை குறித்து அப்பல்லோ இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பால்ரமேஷ் கூறியதாவது:-

"மாரடைப்பு, நுரையீரல் மற்றும் சிறுநீரக கோளாறுகளுக்காக 63 வயது பெண் 4 மாதங்களுக்கு முன்பு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மாற்று இருதயம் பொருத்த திட்டமிட்டோம். இருதயம் கிடைத்து பொருத்தப்படும் வரை மாரடைப்பு வராமல் இருப்பதற்கான சிகிச்சைகள் அளித்து வந்தோம்.

முதியவர்களுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை என்பது மிகச் சிரமமான ஒன்றாகும். காரணம் நீரிழிவு பாதிப்பால் அவர் இருக்கிறார். மேலும் பல உடல் உபாதைகள் உள்ளதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்வது சாதாரண விஷயம் அல்ல. இதை ஒருசவாலாக எடுத்து செய்தோம். இந்தியாவிலேயே இது முதனமையானதாகும். இருதயம் பொருத்தப்பட்ட அந்த பெண் தற்போது குணம் அடைந்து வருகிறார்." இவ்வாறு டாக்டர் பால் ரமேஷ் தெரிவித்தார்.

இதுபோல கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவக்குழுவின் தலைவர் டாக்டர் ஆனந்த் கே.ககார், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தீபக் ராகவன் ஆகியோரும் அவர்கள் அறுவை சிகிச்சை செய்தது குறித்து விளக்கினார்கள்.

அப்பல்லோ ஆஸ்பத்திரிகளின் குழும தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி கூறுகையில், "மூளைச்சாவு ஏற்பட்டபிறகு அவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்யும் விழிப்புணர்வு முன்பை விட, தற்போது தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. இருப்பினும் காலதாமதமாக உறுப்புகளை தானம் செய்யும்போது அந்த உறுப்புகள் நல்ல நிலைமையில் இருப்பதில்லை. எனவே உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு இன்னும் தேவைப்படுகிறது" என்றார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.