Tuesday, November 22, 2011

புத்திசாலி மோனிஷா + வள்ளல் ஜெயலலிதா + பயனாளிகள் 67மாணாக்கர்கள்


அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதா நேற்று சென்னை, மாநிலக் கல்லூரி விலங்கியல் துறை மாணவ, மாணவியர்களின் கல்விச் சுற்றுலாவிற்காக எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து 1,35,000/-​ ரூபாயை ரொக்கமாக வழங்கினார்.

சென்னை, மாநிலக் கல்லூரி விலங்கியல் துறையில் பி.எஸ்சி., மூன்றாம் ஆண்டு மற்றும் எம்எஸ்சி., முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் 63 மாணவர்கள், 24 மாணவியர்கள் மற்றும் 3 பேராசிரியர்கள் உட்பட மொத்தம் 90 பேர், கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் மற்றும் கோவா ஆகிய இடங்களுக்கு துறைத் தலைவர் தலைமையில், 7.12.2011 முதல் 14.12.2011 வரை மீன் வளர்ப்பு மற்றும் சுற்றுப்புறச் சூழல் குறித்த கல்விச் சுற்றுலா மேற்கொள்ள இருப்பதாகவும், மாணவ, மாணவியர் அனைவரும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தச் சுற்றுலா செல்ல ஒரு மாணவருக்கு 3,500/-​ ரூபாய் வீதம் செலவாகும் என்றும், மாணவர்கள் போதுமான நிதி வசதியின்றி சிரமப்படுவதால், சுற்றுலா செல்வதற்கு நிதி உதவி வழங்க வேண்டி, தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மாநிலக் கல்லூரி மகளிர் செயலாளர் எஸ்.கே. மோனிஷா கடிதம் மூலம் வேண்டுகோள் வைத்திருந்தார்.

மாணவ, மாணவியர்கள் சார்பாக அளிக்கப்பட்ட மனுவினை கருணையுடன் பரிசீலித்த தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, ஆர்வமுடன் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நிதி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் தலா 1,500/-​ ரூபாய் வீதம் மொத்தம் 63 மாணவர்கள், 24 மாணவியர்கள் மற்றும் 3 பேராசிரியர்கள் உட்பட ஆக மொத்தம் 90 நபர்களுக்கு, எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து 1,35,000/-​ ரூபாயை ரொக்கமாக, மாநிலக் கல்லூரி மகளிர் செயலாளர் எஸ்.கே. மோனிஷாவிடம் வழங்கி, கல்விச் சுற்றுலா மேற்கொள்ளும் மாணவ, மாணவியர்கள் கல்வியில் மென்மேலும் சிறந்து விளங்கிட தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்கள். நிதி உதவியைப் பெற்றுக் கொண்ட மாணவ, மாணவியர்கள், தங்கள் மீது அக்கறை கொண்டு கல்விச் சுற்றுலா செல்வதற்கு நிதி உதவி வழங்கிய தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை மகிழ்ச்சிப் பெருக்கோடு தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வின் போது, விலங்கியல் துறைத் தலைவர் முனைவர் மசர் சுல்தானா, மாணவர் செயலாளர் செல்வன் ரா.ஸ்ரீதர் ஆகியோர் உடன் இருந்தனர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.