Friday, October 28, 2011

தில்லி - கன்னியாகுமரி தினசரி ரயில் எப்போது? வே. சுந்தரேஸ்வரன்

விசேஷத்துக்கோ விடுமுறையைக் கழிக்கவோ சென்னைக்கு வர தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், ஜி.டி. எக்ஸ்பிரஸ், ராஜதானி, துரந்தோ ஆகிய ரயில்களையே நம்பியிருக்க வேண்டும்.

தில்லியிலிருந்து தமிழகத்தில் சென்னனை தவிர பிற ஊர்களுக்குச் செல்ல விரும்பும் பயணிகள் தற்போது தினசரி ரயிலின்றி பல்வேறு சிரமங்களையும், சோர்வையும் அடைகின்றனர்.

தில்லியிலிருந்து சென்னை நீங்கலாக தமிழகத்தின் இதர ஊர்களுக்குச் செல்வோருக்கு உதவும் வகையில் நேரடி ரயில் போக்குவரத்து சேவையைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி, "தில்லி தமிழ் ரயில் பயணிகள் சங்கம்' என்ற அமைப்பு தில்லியில் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கான ஜி.டி. எக்ஸ்பிரஸ், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் போன்றவை சென்னை சென்ட்ரலுடன் நின்றுவிடுகின்றன. இவற்றில் வருவோர் சென்னை வந்து, அங்கிருந்து ஆட்டோ, டாக்ஸிக்கு செலவழித்து எழும்பூர் ரயில் நிலையம் சென்று, பல மணி நேரம் தேவையின்றிக் காத்திருந்த பிறகே தங்களது ஊருக்குச் செல்லும் ரயில்களைப் பிடிக்க இயலும். இவர்கள் மட்டுமின்றி, வடமாநிலங்களிலிருந்து தென் மாவட்டங்களில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள வரும் பயணிகளுக்கும் இதே சிரமம்தான்.

தில்லியிலிருந்து மதுரைக்குச் செல்லும் தமிழ்நாடு சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் வாரம் இரு முறையும் (செவ்வாய், வியாழன்), கன்னியாகுமரி வரை செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் வாரம் ஒரு முறையும் (சனிக்கிழமை), கேரள மாநிலம் வழியாகச் செல்லும் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ், நவயுக் எக்ஸ்பிரஸ் ஆகியவை வாரம் ஒரு நாளும் இயக்கப்படுகின்றன.

தில்லியிலிருந்து தமிழகத்தின் இதர நகரங்களுக்கு நேரடியாகச் செல்ல எந்த ரயிலும் இல்லை. இந்த நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்துவதற்காகவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

தில்லி தேசியத் தலைநகர் பிராந்தியத்தில் சுமார் 14 லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பலர் விசேஷத்துக்கோ விடுமுறையைக் கழிக்கவோ தமிழ்நாட்டில் தங்கள் ஊருக்குச் செல்வதற்குப் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

தென் மாநிலங்களில் தமிழகத்துக்கு மட்டுமே இந்த அவல நிலை. கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களுக்குச் செல்வோருக்கு இந்தக் கஷ்டம் இல்லை.

""இந்திய ரயில்வே தில்லியில் இருந்து தென்னிந்திய மாநிலங்களுக்குத் தலா இரு தினசரி ரயில்களை இயக்கி வருகிறது. ஆந்திரப் பிரதேசம் செல்லும் ஆந்திரா எக்ஸ்பிரஸ் அந்த மாநிலத்தின் மேற்கு, மத்தியப் பகுதிகளையும், தக்ஷிண் எக்ஸ்பிரஸ் கிழக்குப் பகுதியையும் சென்றடையும் வகையில் இயக்கப்படுகின்றன.

கர்நாடகத்துக்குச் செல்லும் கர்நாடகா எக்ஸ்பிரஸ் அம்மாநிலத்தின் வடக்கு, தெற்கு, மத்தியப் பகுதிகளையும், மங்களா எக்ஸ்பிரஸ் மேற்குப் பகுதி முழுவதையும் சென்றடையும் வகையில் இயக்கப்படுகின்றன.

கேரளத்துக்கு இயக்கப்படும் கேரளா எக்ஸ்பிரஸ் கேரளம் முழுதும் தொட்டு திருவனந்தபுரம் வரை செல்கிறது. மங்களா எக்ஸ்பிரஸ் கேரளத்தின் வட பகுதியைச் சென்றடையும் வகையில் இயக்கப்படுகிறது.

இதைப் பார்க்கும்போது, தமிழகம் வஞ்சிக்கப்படுகிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது என்கிறார் தில்லி தமிழ் ரயில் பயணிகள் சங்கத்தின் செயலர் எஸ். சுந்தரம்.

""இப்போது வாரம் ஒருமுறை இயக்கப்படும் தில்லி - கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலை நாள் நீட்டிப்புச் செய்ய வேண்டும் என்று ரயில்வே அமைச்சர், அதிகாரிகளிடம் மனு அளித்தோம். ஆனால், பலன் கிடைக்கவில்லை'' என்று சங்கத்தின் உறுப்பினர் ஆர். குணசேகரன் கூறினார்.

""மேலும், தமிழகத்தின் பெருமை மிக்க சுற்றுலா இடங்களுக்கும் தில்லியில் இருந்து தினசரி இயக்கப்படும் வகையில் நேரடியாக ரயில் இணைப்பு வசதி இல்லை. இதனால், தமிழகம் சுற்றுலா வருவாயை இழக்கிறது. எனவே, இது தொடர்பாக தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபாலிடம் மனு அளித்துள்ளோம்'' என்று நொய்டாவிலுள்ள அவ்வை தமிழ்ச் சங்கத்தின் செயலர் கிருஷ்ணமாசாரி தெரிவித்தார்.

""தில்லி- கன்னியாகுமரிக்கு தினசரி ரயில் விடக் கோரி ரயில்வே அமைச்சரையும், ரயில்வே போர்டு சேர்மனையும் நேரில் சந்தித்து மனு அளித்து வலியுறுத்த உள்ளோம்'' என்று தில்லித் தமிழ்ச் சங்கத் தலைவர் ஆர். முகுந்தன் கூறினார். -தினமணி 28-11-2011
தமிழகம் புறக்கணிக்கப்படுகின்றதா? தமிழகத் தலைவர்கள் புறகணிக்கின்றனரா?

0 comments:

Post a Comment

Kindly post a comment.