Friday, October 28, 2011

"நாணயமாக நடந்துகொண்டதால் உயர்ந்தேன்!'' வீ.கே.டி.பாலன்"



உலகில் 175 நாடுகளில் இருக்கும் "வெஸ்டர்ன் யூனியன் வங்கி'யின் 90 ஆயிரம் கிளைகளில் எங்கு பணம் செலுத்தினாலும் ஏழு நிமிடங்களில் உடனடியாகப் பணம் கொடுப்பதற்கான முகவராக அங்கீகாரம் பெற்றிருக்கும் நிறுவனம், IATA உட்பட இந்தியாவிலேயே அதிக அங்கீகாரங்களைப் பெற்றிருக்கும் பயண நிறுவனம், உலகத்தின் எந்த மூலையிலிருப்பவர்களும் எந்த பகுதிக்குச் செல்வதற்கும் விமானப் பயணச்சீட்டை எடுப்பதற்கான வசதியை ஏழு நாட்களும் 24 மணி நேரமும் வழங்கும் நிறுவனமாக, உலகறிந்த சுற்றுலா பயண நிறுவனமாக உயர்ந்திருக்கிறது "மதுரா டிராவல்ஸ்' என்னும் தனியார் நிறுவனம்.

வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வீ.கே.டி.பாலன், 1500க்கும் மேற்பட்ட இந்தியக் கலைஞர்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று கலைநிகழ்ச்சிகளை நடத்தியதற்கும், இணையத்தில் இந்தியாவின் முதல் வானொலியை கொண்டுவந்ததற்காகவும் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பவர். அவரைச் சந்தித்தோம்.

""திருச்செந்தூர்தான் எனது பூர்வீகம். அங்கிருந்து ரயிலில் டிக்கெட் இல்லாத "வித்-அவுட்' பயணியாக சென்னைக்கு வந்த நான் இன்றைக்கு விமானத்தில் எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் "வித்-அவுட்' டிக்கெட்டில் பயணிக்கலாம்! இந்த இனிமையான முரண்பாடுதான் என்னுடைய இதுவரையான வாழ்க்கை.

அமெரிக்க தூதரகத்தில் விசாவுக்காக நிற்கும் வரிசையில் இடம்பிடித்துத் தருவதற்காக எனக்கு முதன்முதலாகக் கிடைத்த ஊதியம் இரண்டு ரூபாய்! 1981-ல் இரண்டு ரூபாய்க்கு முழுச் சாப்பாடு கிடைக்கும். இங்கிருந்துதான் என்னுடைய பயணம் தொடங்கியது.

வரிசையில் இடம்பிடிக்கும் வேலையில் சற்று முன்னேறினேன். வரிசையில் நிற்பவர்களிடமே பயணத்திற்கான சீட்டை எங்கே தருவார்கள் என்பது போன்ற விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அப்போது எனக்கு அறிமுகமானதுதான் அசோக் டிராவல்ஸ். வரிசையில் நிற்பவர்களிடம் பிரயாணத்திற்கான பயணச் சீட்டை வாங்குவதற்கு அசோக் டிராவல்ஸýக்கு வாருங்கள் என்று அழைத்துச் செல்வேன். இதற்காக ஒரு சிறிய தொகை அந்த நிறுவனத்திலிருந்து எனக்குக் கிடைத்தது. அந்த நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்த சந்திரா என்பவர்தான், எனக்கு இந்தத் தொழிலின் அரிச்சுவடியைச் சொல்லிக் கொடுத்தவர்.

இந்தத் தொழிலுக்குரிய DEPARTURE, ARRIVAL போன்ற வார்
ர்த்தைகளைக் கூட அவர்தான் சொல்லிக் கொடுத்தார் . பணம் சிறிதாகச் சேர்ந்ததால், சாலையோரம் படுத்த நிலை மாறி, சைதாப்பேட்டை, சேஷாசல தெருவிலிருக்கும் மெட்ராஸ் பில்டிங்கில் 50 ரூபாய் வாடகையில் ஸ்டோர் ரூமில் தங்க எனக்கு இடம் கிடைத்தது.

தொடர்ந்த உழைப்பின் மூலம், 1986-ஆம் வருடம், சென்னை, மண்ணடி பகுதியில் 10 ஆயிரம் ரூபாய் முன்பணத்துடன் ஆயிரம் ரூபாய் வாடகையுடன் "மதுரா டிராவல்ஸ்' நிறுவனத்தைத் தொடங்கினேன். அப்போது நான் சப்-ஏஜென்ட். பயணச் சீட்டு பெறுபவர்கள் முழுப்பணமும் கொடுக்கமாட்டார்கள். இந்த சமயத்திலும் எனக்கு பெரிய உதவிகளைச் செய்தவர்கள் "அசோக் டிராவல்ஸின்' சந்திரா அம்மையார்தான். அவர்கள்தான் எனக்கு பெரிய உதவிகளைச் செய்தார்கள். நான் உண்ணும் போதெல்லாம் அவரை நினைக்காமல் உண்பதில்லை.

என்னுடைய தொழிலைத் தொடங்கிய ஆண்டில்தான் எனக்குத் திருமணமும் ஆனது. மனைவி சுசீலாவுடனான எனது திருமண வாழ்க்கைக்கும் இது வெள்ளி விழா ஆண்டு!

மகள் சரண்யாவுக்குத் திருமணம் ஆகிவிட்டது. மகன், ஸ்ரீஹரன் கல்லூரியில் படித்துவருகிறார். என்னுடைய பத்தொன்பதாவது வயதில் நான் உழைக்காத காலத்திலேயே என்னுடைய தந்தையை இழந்தேன். அவருக்கு ஒருவேளை உணவு அளிக்கமுடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு உண்டு. ஆனால் 90 வயதான என்னுடைய தாய் இசக்கி அம்மாளை என்னுடைய பேரக் குழந்தையோடு சேர்த்து பராமரித்து வருவதில் ஆத்ம திருப்தி அடைகிறேன்.

படிப்பறிவு இல்லை, ஆங்கிலம் தெரியாது, பணம் இல்லை... இப்படி நிறையக் குறைகள் என்னிடமிருந்தாலும் இதற்கெல்லாம் சேர்த்து ஈடுகட்டுவது போல் என்னிடம் நிறைவான ஒரு தகுதி இருந்தது. அது, என்னிடமிருந்த நாணயம். நாணயத்தைத் தேடி எங்கும் அலையவேண்டியதில்லை. "சொன்னதைச் செய்; செய்வதைச் சொல்' என்பதே என்னுடைய குணமாக இருந்ததால், எனது வாடிக்கையாளர்களே எனக்கு நல்ல நண்பர்களானார்கள்! நண்பர்களும் வாடிக்கையாளர்களாக மாறியது, வாடிக்கையானது.

எனது இந்தக் குணத்தால் வங்கியுடனான எனது உறவு பலப்பட்டது. என் தொழிலை விரிவாக்கப் பயன்பட்டது. இன்றைக்கு நான் கணக்கு வைத்திருக்கும் "யூனியன் பாங்க் ஆப் இண்டியா' வங்கியின் மதிப்பிற்குரிய வாடிக்கையாளராக நான் உயர்ந்திருப்பதற்குக் காரணம் என்னுடைய நாணயம்தான்.

பயணச் சீட்டை ரத்து செய்தால் குறைந்தது பணம் திரும்பக் கிடைக்க 45 நாட்கள் ஆகும். ஆனால் எங்கள் நிறுவனத்தில் உடனடியாகப் பணத்தை வாடிக்கையாளர்களிடம் திருப்பி அளிப்பதை கொள்கையாக வைத்திருக்கிறோம். பணம், படிப்பை விட தனிமனித நடத்தைதான் முன்னேற்றத்துக்குப் பெரிதும் காரணம் என்பதற்கு நானே சிறந்த உதாரணம்.

இதற்கிடையில் சுற்றுலா கையேட்டை வெளியிட கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்தேன். முதல் ஐந்து ஆண்டுகளில் எனக்கு 50 லட்சம் நஷ்டமானது. ஆறாவது ஆண்டிலிருந்து நஷ்டத்தையும் இந்தத் தொழில் ஈடுசெய்தது. எல்லா துறை சார்ந்த முக்கியப் பிரமுகர்களின் மேசையையும் இன்றைக்கு எங்களின் சுற்றுலா கையேடு அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.

ஒருவேளை உணவுக்கு கஷ்டப்பட்ட நான், இன்றைக்கு மாதத்திற்கு 5 லட்சம் ரூபாய் சம்பளம் தரும் முதலாளியாக உயர்ந்திருப்பதில் சந்தோஷப்படுகிறேன். அதே வேளையில் என் நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்னைப் போன்றே IATA அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களின் முதலாளிகளாகவும் விமான சர்வீஸ்களில் உயர் பதவி வகிப்பவர்களாகவும் இருப்பதைப் பெருமையாக நினைக்கிறேன்.

இங்கிருக்கும் ஊழியர்கள் யாரையும் நேர்முகத் தேர்வு மூலம் தெரிவு செய்வதில்லை. அவர்களின் திறமைக்கேற்ற பணிகளைச் செய்யச் சொல்வேன். அல்லது தேவையான பயிற்சிகளை அளித்து அவர்களை உருவாக்கிவிடுவேன். குறைவான படிப்பு படித்தவர்கள், தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள், எச்.ஐ.வி.பாதிப்புக்குள்ளானவர்கள் போன்றவர்களை இந்தத் துறையில் தலைசிறந்தவர்களாக உருவாக்கியிருக்கிறேன். இனியும் உருவாக்குவேன் என்பதை நான் சாதித்த வெற்றியாக மார்தட்டிச் சொல்வேன்.

இந்தியாவிலேயே முதன்முறையாக IATA தகுதி பெற்ற மாற்றுத் திறனாளி ஊழியர் என்னும் பெருமையை எங்கள் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரியும் பூவரசு பெற்றிருக்கிறார். இதைவிட இந்த நிறுவனத்தின் சாதனையாக வேறுஎன்ன இருக்கமுடியும்?!''

வணக்கம் தமிழா-ரவிக்குமார்-தினமணி- 28-10-2011

0 comments:

Post a Comment

Kindly post a comment.