Sunday, October 23, 2011

சுயேச்சைகளுக்கே மூன்றாம் மரியாதை!-த.அரவிந்தன்



http://117.239.70.112/nomination/fchart_tnlb_overall_votes
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் அடுத்ததாக மூன்றாம் இடத்தைப் பெற்றிருப்பது அரசியல் கட்சிகள் அல்ல சுயேச்சைகள் என்பதுதான் அதிர்ச்சி தரும் தீர்ப்பு.

தமிழகத்தில் அதிமுக - திமுக என்ற இரண்டு கட்சி மனப்பான்மையில்தான் மக்கள் ஊறிப்போயிருக்கின்றனர். இதற்கு எதிரான மாற்றுச் சிந்தனை இப்போதும் மக்கள் மனதில் ஏற்படவில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

அப்படி ஒருவேளை இந்த இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக யாரையாவது வைப்பது என்றாலும் அவர்கள் சுயேச்சைகளே என்று முடிவு செய்திருக்கின்றனர். ஏனைய அரசியல் கட்சிகளையும் இதில் ஓரங்கட்டியே வைத்திருக்கின்றனர்.

இன்னொரு வகையில் சொல்வதாக இருந்தால்,ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் மாற்றாக அவர்கள் இன்னும் வேறு எந்தவொரு தலைவரையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

10 மேயர் பதவியிடங்களில் ஒரு பதவியைக்கூட திமுகவும் பெறவில்லை, சுயேச்சைகளும் பெறவில்லை. காங்கிரஸ், பாரதிய ஜனதா, இடதுசாரிகள் போன்ற தேசிய கட்சிகளும், தேமுதிக, மதிமுக, பாமக விடுதலைச் சிறுத்தைகள் போன்ற மாநிலக் கட்சிகளும் பெறவில்லை.

மாமன்ற உறுப்பினர் பதவியிடங்களில் அதிமுகவையும் திமுகவையும் தவிர்த்து மற்ற கட்சிகள் சேர்ந்து மொத்தமாகப் பெற்ற இடங்கள் 44. சுயேச்சைகள் பெற்ற மன்ற உறுப்பினர் பதவிகள் 51-க்கும் அதிகம்.

நகர்மன்றத் தலைவர் பதவிகளில் 89 பதவியிடங்களை அதிமுகவும், 23 நகர்மன்றத் தலைவர் பதவியிடங்களைத் திமுகவும், 5 இடங்களைச் சுயேச்சைகளுமே பெற்றுள்ளனர்.

எதிர்க்கட்சியாக உள்ள தேமுதிக, மார்க்சிஸ்ட், பாஜக ஆகிய கட்சிகள் தலா 2 இடங்கள்தான் பெற்றுள்ளன. மதிமுக ஓரிடம் பெற்றுள்ளது.

நகர்மன்ற உறுப்பினர் பதவியிடங்களில் அதிமுகவையும் திமுகவையும் தவிர்த்து இதர கட்சிகள் பெற்ற மொத்த இடங்கள் 489. ஆனால் சுயேச்சைகள் பெற்ற மொத்த இடங்களோ 552.

பேரூராட்சித் தலைவர் பதவியிடங்களில் இதர கட்சிகள் பெற்ற இடங்கள் 56. சுயேச்சைகள் பெற்ற இடங்கள் 64. பேரூராட்சி உறுப்பினர் பதவியிடங்களில் இதர கட்சிகள் பெற்ற மொத்த இடங்கள் 1,337. சுயேச்சைகள் பெற்ற மொத்த இடங்கள் 1,995 ஆகும்.

இந்தப் புள்ளிவிவரத்தின்படி சுயேச்சைகளிடம் இதர கட்சிகள் அனைத்தும் தோற்றே இருக்கின்றன என்றே சொல்லலாம்.

நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களில் மட்டும்தான் இந்த மாற்றம் என்று இல்லை. ஊரக உள்ளாட்சிகளிலும் மூன்றாமிடத்தில் சுயேச்சைகள்தான் வருகின்றனர்.

மொத்தமாக அதிமுக 9,314 பதவியிடங்களுக்கு அதிகமாகவும், திமுக 3,953 பதவியிடங்களுக்கு அதிகமாகவும், சுயேச்சைகள் மூன்றாமிடத்தில் 3,272 பதவியிடங்களுக்கு அதிகமாகவும் வெற்றிபெற்றுள்ளனர்.

பெரிய கட்சிகளின் அதிருப்தி வேட்பாளர்கள் சிலரும் இந்தச் சுயேச்சைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை.

நன்றி:தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.