Sunday, October 23, 2011

பா.ஜனதா, ம.தி.மு.க. திடீர் வளர்ச்சி ?????

உள்ளாட்சி தேர்தல்: பா.ஜனதா, ம.தி.மு.க.    திடீர் வளர்ச்சிதமிழக உள்ளாட்சி மன்ற தேர்தல் முடிவுகள் அரசியல் கட்சிகளின் சுய பலத்தை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளன. யானை பலம் கொண்ட கட்சிகள் என்று நம்பப்பட்ட கட்சிகளெல்லாம் பூனை பலமாகி விட்டது.

காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகளின் செல்வாக்கு செல்லாக் காசாகி விட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட அதிகமான வளர்ச்சி அடைந்துள்ள கட்சிகள் பாரதீய ஜனதாவும், ம.தி.மு.க. வும் தான். இந்த இரண்டு கட்சிகளும் கடந்த 2 தேர்தல்களில் மற்ற கட்சிகளால் ஓரங்கட்டப்பட்டன. ஆனால் இரு கட்சிகளும் தனிப்பட்ட செல்வாக்குடன் மக்கள் மத்தியில் வளர்ந்து வருகிறது.

பாரதீய ஜனதா கட்சி நாகர்கோவில், மேட்டுப்பாளையம் ஆகிய 2 நகராட்சிகளை கைப்பற்றி உள்ளது. 37 நகராட்சி கவுன்சிலர்கள், 13 பேரூராட்சி தலைவர்கள், 181 வார்டு உறுப்பினர்கள், 2 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், 31 யூனியன் கவுன்சிலர்கள் உள்பட 270 இடங்களை கைப்பற்றி உள்ளது.

இது தவிர கிராம பஞ்சாயத்துகளிலும் பெருமளவில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நகர பகுதிகளிலும் பா.ஜனதாவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. கோவை மாநகராட்சியில் 2 வார்டுகளிலும், தூத்துக்குடி, நெல்லை மாநகராட்சியில் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

தலைநகர் சென்னையில் 119 வார்டுகளில் போட்டியிட்டனர். இதில் 187-வது வார்டில் கிருஷ்ணபிரியா ஸ்ரீதர் சுமார் 600 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் உமா தியாகராஜனிடம் தோற்றார். இந்த வார்டில் பா.ஜனதா 2-வது இடத்தை பிடித்துள்ளது.

பிரதான கட்சியான தி.மு.க. இந்த வார்டில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 58-வது வார்டில் பா.ஜனதா 3-வது இடத்தை பிடித்துள்ளது. சராசரியாக ஒரு வார்டுக்கு 450 வாக்கு களுக்கு மேல் பெற்று 50 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளது.

ம.தி.மு.க. சென்னை மாநகராட்சியில் ஒரு இடத்தை கைப்பற்றி உள்ளது. மொத்தம் 10 மாநகராட்சிகளிலும் சேர்த்து 10 இடங்களை கைப்பற்றி உள்ளது. 1 நகராட்சியையும் கைப்பற்றி உள்ளது. 49 நகராட்சி கவுன்சிலர்கள், 7 பேரூராட்சி தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் 2 பேர், யூனியன் கவுன்சிலர்கள் 41 பேர் உள்பட 192 இடங்களை கைப்பற்றி உள்ளது. இந்த இரு கட்சிகளின் வளர்ச்சி மற்ற கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.


0 comments:

Post a Comment

Kindly post a comment.