http://www.puthinamnews.com/?p=27349
சீனப் பாதுகாப்பு அமைச்சின் வெளிநாட்டு விவகாரத் தலைவர் மேஜர் ஜெனரல்
குவான் லிஹுவா தலைமையிலான பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று
கடந்த வாரம் கொழும்பு வந்திருந்தது.
இந்தக் குழுவில் சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்
மொழியாக்கப் பிரிவின் பணிப்பாளர் மூத்த கேணல் சூஹய், ஆயுதக் கட்டுப்பாட்டுப் பிரிவு
மற்றும் இராணுவ உதவி அலகின் பிரதிப் பணிப்பாளர் மூத்த கேணல் சொங் சியாகு,
போர்க்கருவிகள் ஆராய்ச்சி நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கேணல் தியன் பென், தேசிய பாதுகாப்பு
அமைச்சின் ஆசிய விவகாரப் பிரிவின் நிர்வாக அதிகாரி கேணல் கூ ஹொங்ராவோ, 6வது கவசப்படைப்
பிரிவின் பிரதித் தலைமை அதிகாரியும் பெய்ஜிங் இராணுவப் பிரதேச தளபதியுமான கேணல்
சங் ஜின் பூ ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இவர்கள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவையும், இராணுவத் தளபதி
லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவையும் சந்தித்துப் பேசியதுடன், இலங்கை இராணுவத்திற்கான
மேலதிகப் பயிற்சி உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்திருந்தனர்.
இது ஒன்றும் பெரியளவில் முக்கியத்துவமான விடயம் அல்ல. ஏனென்றால் ஏற்கனவே இலங்கை
இராணுவத்துக்கு சீனா அதிகளவில் உதவிகளையும் பயிற்சி வசதிகளையும் செய்து
கொடுத்துள்ளது. அதனை அதிகரிக்கப் போவது இன்றைய சூழலில் அதிக முக்கியத்துவமான விடயமல்ல.
ஆனால் சீனப் பாதுகாப்பு அதிகாரிகள் குழு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக
திஸநாயக்கவுடன் நடத்தியுள்ள சந்திப்பும், அதில் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடும் தான் முக்கியமானவை.
இலங்கை கடற்படையுடன் இணைந்து சீனக் கடற்படை கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளவும்,
கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பயிற்சிகளை வழங்கவும் சீனப் பாதுகாப்பு
அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
கடல்சார் தீவிரவாத நடவடிக்கைகளை முறியடித்தல் மற்றும் சமச்சீரற்ற போர்முறை ஆகியவற்றில்
இலங்கை கடற்படை கொண்டுள்ள நிபுணத்துவம் குறித்து சீனப் பாதுகாப்பு
அதிகாரிகளுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் இலங்கை கடற்படை வட்டாரங்கள் கூறியுள்ளன.
இந்த விடயங்கள் தான் மிகவும் முக்கியமானவை.
ஏற்கனவே இந்து சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்து இந்தியா
புலம்பிக் கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் இந்த இணக்கப்பாடு, இந்தியாவுக்கு கடும் எரிச்சலைத் தோற்றுவித்திருக்கும்
என்பதில் சந்தேகம் இல்லை.
விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பின்னர், கொழும்பு, காலி, திருகோணமலைத்
துறைமுகங்களுக்கு வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் வருவது அதிகரித்துள்ளது.
மாதத்தில் இரண்டு மூன்று வெளிநாட்டுப் போர்க் கப்பல்களாவது இலங்கைக்கு வந்து போகின்றன.
இவற்றின் நோக்கம் தனியே, எரிபொருள் நிரப்பிக் கொண்டு போவது மட்டுமல்ல.
இங்கு சில நாட்கள் தங்கியிருந்து, விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த இலங்கைக்
கடற்படையின் அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதும் தான்.
ஏனென்றால் இன்று பெரும்பாலான நாடுகள் கடல்சார் தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன.
சிறிய படகுகளைக் கொண்டு நடத்தப்படக் கூடிய தாக்குதல்களை முறியடிப்பது பல்வேறு நாடுகளுக்கும்
சிக்கலானதொரு விவகாரமாகவே உள்ளது.
பெரியளவில் இந்த தந்திரோபாயம் கையாளப்படாது போனாலும் எதிர்காலத்தில் இது
அதிகரிக்கலாம் என்று பெரும்பாலான நாடுகள் கருதுகின்றன.
விடுதலைப் புலிகளாலே அறிமுகப்படுத்தப்பட்டு கையாளப்பட்ட இந்தப் போர்த்தந்திரங்களை எவ்வாறு
எதிர்கொள்வது என்ற அனுபவத்தை இலங்கை கடற்படையிடம் பெற்றுக் கொள்ளவே
பல நாடுகளும் முனைகின்றன.
சிறிய படகுகள் மூலம் தாக்குதல் நடத்தும் விடுதலைப்புலிகளின் பலத்தை அதேவழியில்
சென்று தான் இலங்கை கடற்படை தோற்கடித்திருந்தது.
இதைத் தான் பல்வேறு நாடுகளும் கற்றுக்கொள்ள விரும்புகின்றன.
அண்மையில் திருகோணமலைக் கடலில் நடந்த ஐந்து நாள் கூட்டுப் போர்ப்பயிற்சியின் போது
இந்தியக் கடற்படைக்கு இது குறித்து செயல்முறையில் விளக்கமளிக்கப்பட்டது.
இதற்கு சீனாவும் விதிவிலக்கல்ல என்று நிரூபித்துள்ளது.
இப்போது சீனாவும் கூட இந்தப் போருபாயத்தை இலங்கையிடம் இருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறது.
ஆனால் அதற்காகவே கூட்டு கடற்படைப் பயிற்சிக்கு சீனா இணங்கியது என்று கூறமுடியாது.
சீனாவின் வியூகம் வேறு வகையானது.
எல்லா நாடுகளும் இலங்கைக் கடற்படையிடம் இருந்து சிறிய படகுத் தாக்குதல் தந்திரோபாயங்கள்
குறித்து அறிந்து கொள்ள முற்படும் போது அதையே சாக்காக வைத்துக் கொண்டு இலங்கையுடன்
கூட்டுப் பயிற்சி மேற்கொள்ள சீனா முடிவு செய்துள்ளது.
இந்தியக் கடற்படையுடன் திருகோணமலைக் கடலில் கூட்டுப் போர்ப்பயிற்சியை முடித்த
சில நாட்களில் சீனாவுடன் கூட்டுப் பயிற்சிக்கு இலங்கை கடற்படை இணங்கியுள்ளது.
இந்தக் கூட்டுப் பயிற்சி தெற்காசியாவில் பதற்றத்தை அதிகரிக்கவே உதவப் போகிறது.
சீனாவின் செயற்பாடுகள் இந்தியாவைச் சுற்றி அதிகரித்து வரும் நிலையில், இலங்கை
அதற்கு இடம் கொடுத்துள்ளது.
இலங்கையுடன் நெருக்கமாக இருந்து வரும் சீனா, போரின் போதும் அதற்கு பின்னரும்
தேவையான ஆயுதங்களையும், நிதியும் அள்ளி வழங்கி வந்தது.
ஆனால் இலங்கையில் இராணுவ ரீதியான நகர்வுகளில் சீனா ஈடுபடவில்லை.
2009 ல் போர் முடிவுக்கு வந்த பின்னர், அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து,
அவுஸ்திரேலியா, ரஷ்யா என்று பல்வேறு நாடுகளினதும் போர்க்கப்பல்கள் அடிக்கடி
வந்து போன போதும், சீனாவின் ஓரிரண்டு போர்க்கப்பல்கள் தான் கொழும்புத் துறைமுகத்தையே
எட்டிப் பார்த்தன.
இதுவரை இலங்கையுடன் இணைந்து சீனா கடல் அல்லது இராணுவ கூட்டுப்
பயிற்சிகள் எதிலும் ஆர்வம் காட்டவேயில்லை.
ஆனால் முதல்முறையாக கூட்டுப் போர்ப் பயிற்சிக்குள் இப்போது காலடி எடுத்து வைத்துள்ளது.
இந்தக் கூட்டுப் பயிற்சி சட்டபூர்வமான முறையில் சீனக் கடற்படையை இந்து சமுத்திரத்துக்கு
அழைத்து வரப் போகிறது.
இலங்கைக் கடற்படை சீனாவிடம் பெரிதும் கடமைப்பட்டுள்ளது.
ஏனென்றால் ஜே.வி.பி கிளர்ச்சியின் பின்னர் கடற்படைக்கு, சூரயா, வீரயா, ரணசுறு, தக்சயா,
பாலவத்த ஆகிய ஐந்து அதிவேகப் பீரங்கிப் படகுளையும் கொடுத்தது சீனா தான்.
இவை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஆரம்ப காலங்களில் பெரும்பங்கு வகித்தன.
அந்த வகையில் சீனாவிடம் நன்றிக்கடன் பட்டுள்ள இலங்கை, இப்போது ஒருபக்கத்தில்
இந்தியாவுடனும், இன்னொரு பக்கத்தில் சீனாவுடனும் கூட்டுக் கடற்பயிற்சியில்
ஈடுபட வேண்டிய நிலையில் இருக்கிறது.
ஆனால் எந்த நாட்டுடன் இலங்கை உண்மையான உறவைப் பேணப் போகிறது என்ற கேள்வி
இருக்கவே செய்கிறது.
சீனாவின் ஆதிக்கம் இந்து சமுத்திரத்தில் இந்தியாவைச் சுற்றி அதிகரித்து வருகின்ற நிலையில்
அதனை முறியடிக்க வழி தேடுகிறது இந்தியா.
அம்பாந்தோட்டையில் துறைமுகம், பர்மாவில், பங்களாதேஸில், மாலைதீவில்,
பாகிஸ்தானில் என்று துறைமுகங்களையும் தளங்களையும் சீனா அமைத்து வருவது
இந்தியாவைக் கலங்க வைக்கிறது.
இத்தகைய சூழலில் இலங்கைக் கடற்படையுடன் சீனா கூட்டுப் போர்ப்பயிற்சிகளை
மேற்கொள்ள இணக்கம் கண்டுள்ளதை இந்தியா சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது.
இந்த இணக்கப்பாடு பிராந்தியப் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கி விடக்
கூடியதாக இருப்பதால், இந்தியா முன்னெச்சரிக்கையுடனேயே நடந்து கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.
இலங்கை அரசு சர்வதேச அளவில் பல்வேறு விதமான நெருக்கடிகளை எதிர்கொள்ளத்
தொடங்கியுள்ள நிலையில், சீனாவின் தயவு அதற்குத் தேவைப்படுகிறது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டே சீனா கூட்டுப் பயிற்சிக்கான அத்திவாரத்தைப் போட்டுள்ளது.
இப்போது சீனா தனது பிடியை மெல்லமெல்ல இறுக்கத் தொடங்கியுள்ளது போலுள்ளது.
சீனாவின் சொல்லைத் தட்டவே முடியாத நிலை ஒன்று இலங்கை அரசுக்கு விரைவில் ஏற்படலாம்.
அத்தகைய நிலையில் தான் அரசாங்கம் விழியைப் பிதுக்க வேண்டியிருக்கும்.
மூன்று தசாப்த காலப் போருக்குப் பின்னர் அமைதியின் பாதையில் பயணிக்கும் என்று
எதிர்பார்க்கப்பட்ட இலங்கை போர்ப் பயிற்சி, படைக் கட்டுமானங்கள், பாதுகாப்பு பலப்படுத்தல்
என்ற சகதிக்குள் இருந்து மீளத் தவறியதால், அந்தச் சந்தர்ப்பத்தை சீனா உள்ளிட்ட
நாடுகள் நன்கு பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியுள்ளன.
இதனால் இலங்கையை மட்டுமன்றி இந்தப் பிராந்தியத்தையே அமைதியற்ற நிலைக்குக் கொண்டு
சென்று விடக் கூடிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது தான் மிச்சம்.
சுபத்ரா
0 comments:
Post a Comment
Kindly post a comment.